Srirangapankajam

December 19, 2008

Pesum Arangam-07

Filed under: PESUM ARANGAM — Tags: — srirangapankajam @ 6:31 am
Chapter-07
17.12.2008
 
பாதுகையை ஆராதனம் செய்பவர்கள் வீண் பழிக்கு ஆளாக மாட்டார்கள்.  
 
இராமனைப் பிரிந்த தசரதன் இறந்தான்.
பரதன் துடித்தான்.  பட்டமேற்றால் வீண் பழி சுமப்பது நிச்சயம்.  ஜானகியும் வனவாசம் சென்றதால் அயோத்தி
மக்கள் ஆறுதலுக்குக் கூட ஆளின்றி தவித்தனர். 
 
பாதுகை பட்டமேற்றது –  பதட்டம் தணிந்தது. 
 
பெரும் பழியிலிருந்து பரதன் தப்பினான். 
 
பாதுகையைத் தியானித்ததால்,  கொண்டாடியதால்,  மக்களிடம் பக்தி மிகுந்தது.  அவர்களது மனப்பாரம் குறைந்தது.  குற்றம் என்பது எள்ளளவும் இல்லாது
பாதுகா ராஜ்யம் நடந்தது. 
 
இராமனைக் காட்டிலும் இராமனது பாதுகை
உயர்ந்தது.  இல்லாவிடின்,  இராமனைத் தவிர மற்றொன்றை நாடாத பரதன், பாதுகையினை ஏற்பானோ?
 
சாக்ஷாத் ஸ்ரீரங்கநாதனே ஸ்ரீராமனாக அவதரித்தான்.  தன்னைத் தாங்கப் பெற்ற பாதுகையை பரதனுக்கு அளித்தான்.

அதனை பரதன் எப்போதும் உபாஸிக்கும் படி செய்தான். 
 
இந்த பாதுகைகள், இல்லாதனவற்றை
அளிக்கவும்(யோக), உள்ளதை காப்பாற்றவும் (க்ஷேம) வல்லது. 
 
பரதனை களங்கமில்லாமல் காப்பாற்றியது. 
 

பாதுகையினை இராமன் கொடுத்ததற்கு மற்றொரு காரணமும் உண்டு.  பாதுகாதேவிக்குக் காருண்யம் அதிகம்.

தம்மை ஏற்பவரை, வெள்ளத்தில் தத்தளிப்பவரை கைக் கொடுத்து காப்பாற்றுபவன் போல இந்த சம்ஸார ஸாகரத்தில் தத்தளிக்கும் நம்மை அது தான் சற்றே தாழ்ந்து, நம்மை உயர்த்ததான் அதற்குத் தெரியும். 
 
எப்படிப்பட்ட குற்றத்தையும் மன்னித்து விடுவாள்.
இவள் தம் கூடயிருப்பின் இராவணனை அழிக்க முடியாது என்பதனை அறிந்தான் இராமன்.  தாம் அவதரித்த தர்மத்தினை நிலைநாட்டிட தற்காலிகமாக பரதனுடன் அனுப்பினான்.  பாதுகையைப் பிரிந்த அந்த பரந்தாமன், பரலோகம் அனுப்பினான் இராவணனை.
 

பரதனிடம் அளிப்பதற்கு முன் இராமன் தம் பாதுகையின் மேல் சற்று நேரம் ஏறி நின்றராம்.  எதற்குத் தெரியுமா?
பாதுகையிடமிருந்து அதற்கு இயற்கையாக உண்டான சக்தியினை தாம் ஏற்றிக் கொள்ளவாம்!
(சமர்ப்பண பத்ததி-116).

 

116       நியதம் அதிருரோஹ த்வாம் அநாதேய சக்திம்
நிஜசரண ஸரோஜ சக்திம் ஆதாது காம:
ஸ கதம் இதரதா த்வாம் ந்யஸ்ய ராம: விஜஹ்ரே
த்ருஷத் உபசித பூமௌ தண்டகாரண்ய பாகே


பொருள் – பாதுகையே! இராமன் உன்னைப் பரதனிடம் அளிப்பதற்கு முன்பு உன் மீது எழுந்தருளி நின்றான். ஏன் தெரியுமா? உன்னிடம் இயற்கையாகவே உள்ள சக்தியைத் தனது தாமரை போன்ற திருவடிகளுக்கு ஏற்றுவதற்காகவே ஆகும். இவ்விதம் அவன் செய்யவில்லை என்றால் உன்னைப் பரதனிடம் அளித்த பின்னர், கற்கள் போன்று கடுமையான பாதைகள் நிறைந்து தண்டகாரண்யத்தில் அவன் எவ்விதம் நடந்திருக்க முடியும்? அவன் திருவடிகள் எவ்விதம் தாங்கியிருக்கும்?
விளக்கம் – பாதுகையிடம் இயல்பாகவே சக்தி உள்ளதால்தான் இராமனால் கானகத்தில் எளிதாக நடக்க முடிந்தது. பாதுகையைப் பரதனிடம் அளிக்கவேண்டிய சூழ்நிலையில், தனது திருவடிகளுக்குப் பாதுகையிடமிருந்து சக்தியைப் பெற இராமன் எண்ணினான். அதனால்தான், அதன் மீது சற்று நேரம் எழுந்தருளிவிட்டு, பின்னர் பரதனிடம் அளித்தான்.

அன்றாடம் இந்த பாதுகையினை தம் தலையில் பெறுபவரின் நன்மைகளை விவரிக்கவும் இயலுமோ?
ஒரு முறை ஏற்றவனுக்கே எமவாதனை இல்லை என்கிறார் ஸ்வாமி தேசிகர்!.

இவள் கற்பக விருக்ஷம் –  வேண்டியதை தரும் – களங்கம் தவிர்க்கும் – கலக்கம் நீக்கும்!
——–
இது நடந்து சுமார் 13 வருடங்களிருக்கும்!. 
 
காலை 10.00 மணியிருக்கும். . .
 
நல்ல தேஜஸ்ஸூடன் ஒரு சேவார்த்தி.

அவருக்கு சடாரி சாதித்ததுதான் தாமதம்! – உடல் முழுதும் 1000 வாட் மின்சாரம் பாய்ந்தது போன்று ஒரு அதிர்ச்சி. 
நடுநடுங்கி சடாரியை எழுந்தருளச் செய்தால் போதும் என்று எழுந்தருளப் பண்ணி, அவரைப் பார்க்கின்றேன். 
 
அவரோ ஒரு புன்சிரிப்பு சிரித்து விட்டு விறுவிறுவென போய்விட்டார். 
 
 நான் சற்று என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அவரை எப்படியும் சந்தித்து பேச வேண்டும் என்று அப்பிரதட்சிணமாக ஒடினேன். 
 
அவர் கீழஸ்ரீபட்டாபி ராமர் சன்னிதியில் அமர்ந்து கொண்டிருந்தார்.
என்னைப் பார்த்ததும் சிரித்தார். 
 
நான் எப்படியும் அவரைத் தேடி வருவேன் என்று தெரியும் என்றுரைத்தார்.
அவரைப் பணிந்து வணங்கி என் இல்லம் அழைத்துப் போய் உபசரித்தேன். 
 
மீண்டும் என்னுடன் கோயிலுக்கு வந்தார். 
 
அப்போது என் அனுபவத்தினைச் சொன்னேன். 
 
புரிந்து கொண்டேன் என்றார். 
 
எதனால் இப்படி ஒரு ஷாக்…? ஆவலுடன் கேட்டேன். 
 
சற்று நேர யோசித்தலுக்குப் பின் சொன்னார். 
 
அவர் பிறப்பால் வைணவன்.. 
 
ஏதோ ஒரு உந்துதலில் சில வருடங்கள் திருவண்ணாமலையில் (வேலூர்) மலை மீது யாரும் நெருங்க இயலாத ஒருவிடத்தில் தபஸ்ஸில் ஆழ்ந்திருக்கின்றார். 
 
அரங்கன் அவரது முன்தோன்றி தபஸ்ஸை பூர்த்தி செய்து அழைத்திருக்கிறான்.  (அவர் அப்போது ஜாம்பவானையும் தரிசித்ததாகக் கூறினார்.  தபஸ்ஸை முடித்தப் போது வானரங்கள் பெரிய பெரிய கொட்டாங்கச்சிகளில்
தமக்கு தூய நீரை பருகக் கொடுத்ததாகவும் கூறினார்.  அவைகள்தாம் தாம் தபஸ் செய்த காலம் முழுதும் தம்மைச் சுற்றி பாதுகாத்தன என்றும் கூறினார்)
 
வந்தவிடத்தில் என்னோடு அரங்கன் ஸ்ரீசடாரி மூலமாய் பந்தமேற்படுத்தி விட்டான்.! 
 
ஸ்வாமி தேசிகர் கூறுகின்றாரே பாதுகையின் மேல் ஏறி நின்று இராமன் அதற்கு இயற்கையாகயுள்ள
சக்தியினை ஏற்றிக் கொண்டான் என்று…!   
 
பாதுகைக்கு சக்தியினை ஏற்றவும் தெரியும்.
பிறருக்குள்ள சக்தியினை உணர்த்தவும் தெரியும்!
அன்று தபஸ்வியின் சக்தியினை எனக்கு உணர்த்தினாள்.!

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: