Srirangapankajam

December 16, 2008

Pesum Arangam-05

Filed under: PESUM ARANGAM — Tags: — srirangapankajam @ 11:29 pm
Chapter-05
15.12.2008
 
ஸ்ரீகிருஷ்ணர் யமுனாநதிக்கரையில் ஆடிப்பாடி விளையாடும் போது அவரது பாதங்கள் பட்ட மரங்கள் எல்லாம் வேதத்திற்கு சமமான அங்கீகாரத்தினைப் பெற்றனவாம்.  அவரது பாதஸ்பரிசம் பெற்றக் கிளைகள் யாவும் வேதங்களின் சாகைகள் போன்றதாகின்றன. இத்தகைய பெருமை வாய்ந்த திருவடிகள் பெருமைப் பெற்றது பாதுகையை அமையப் பெற்றதால்தான் என்கிறார் ஸ்வாமி தேசிகர்.
 
பரமபத்திலிருந்து உதித்த இந்த நம்பெருமாளின் பாதுகையினைப் பக்தியினால் வணங்கி, தம்முடைய சிரஸ்ஸில் சாதிக்கப் பெற்றவர்கள்,  யாரும் எளிதில் அடைய இயலாத நம்பெருமாளின் திருவடிகளையே அடைகின்றார்கள் என்கிறார்.
 
இந்த பாதுகை சேதனராகிய நம்மையும் பரமசேதனனாகிய அவனையும் இணைக்கும் ஒரு பாலம்.  பாவங்களை ஒழித்து பரமனிடத்து சேர்க்கும் பரம உன்னதம். 
 
நரகம், ஸ்வர்க்கம் ஆகிய இரண்டுக்கும் அப்பால் மோக்ஷசபை என்று ஒன்று உள்ளதாக இதன் மூலம் தெரிவிக்கின்றார் ஸ்வாமி தேசிகர்.

பாதுகையினை பக்தியோடு தம் தலையில் தரிப்பவர்கள் நரகத்தினையும் சொர்க்கத்தினையும் எளிதில் கடந்து தமது ஆச்சார்யர்கள் வசித்துக் கொண்டிருக்கும் மோக்ஷசபையினை அடைவார்கள் என்கிறார்.
 

மஹாத்மா என்றால் தம்மைப் பற்றிக் கவலைப்படாது பிறரரின் நலம் பேணுபவர் அல்லது பிறரரின் நலத்திற்காக அல்லது பொதுவான ஒரு நல்லகாரியத்திற்காக செயலாற்றுபவர் என்றும் கூறலாம்.  கீதையில் கண்ணன் ”மஹாத்மா துர்லபம்” என்று தெளிவாக கூறுகின்றார்.  நமக்காகவே உள்ள இந்த நம்பெருமாளின் திருவடிகளுக்காகவும், பாதுகைக்காகவும் லட்சத்தில் ஒருவர் இருந்தால் பெரிது.  அந்த ஒருவரின் பொருட்டுதான் தாம் இன்னும் பெரியபெருமாள் இந்த பூமியில் பொறுமையுடன் எல்லாரையும் கடாக்ஷித்துக் கொண்டு வருகின்றான்.

இவ்விதம் நம்மைப் போல் எல்லாம் இல்லாமல் என்றும் நம்பெருமாளின் திருவடிகளை பேணிக் காக்கும் ரக்ஷை பாதுகாதேவிதான் என்கிறார். 
 
55 சம தம குண தாந்த உதந்த வைதேசிகாநாம்
     சரணம் அசரணாநாம் மாத்ருசாம் மாதவஸ்ய
     பதகமலம் இதம் தே பாதுகே ரக்ஷ்யம் ஆஸீத்
     அநுதயநிதாநாநாம் ஆகமாநாம் நிதாநம்

 
பொருள் – பாதுகையே! கண் முதலான இந்த்ரியங்களைத் தன்வயப்படுத்தி அடக்குதல்; மனதைக் கட்டுப்படுத்தல்; தயை போன்ற குணங்கள் கொண்டிருத்தல்; பக்தியுடன் இருத்தல் – இது போன்ற உயர்ந்த தன்மைகளுக்கு மாறுபட்டவர்களாக நாங்கள் உள்ளோம். எங்களை இவ்வாறு உள்ள நிலையில் இருந்தும் காப்பாற்றுவது எது? தோற்றம் மற்றும் அழிவு போன்றவை இல்லாமல், என்றும் உள்ள வேதங்களுக்கும் புதையல் போன்று உள்ள நம்பெருமாளின் திருவடிகளே எங்களைக் காக்கின்றன. அப்படிப்பட்ட உயர்ந்த திருவடிகளையே நீ காப்பாற்றுகிறாய்.
 
விளக்கம் – நமக்காக திருவடிகள் உள்ளன. அந்தத் திருவடிகளுக்காகவும், நம்பெருமாளுக்காகவும் கவலைப்பட யாரேனும் உள்ளனரா என்றால் லக்ஷத்தில் ஒருவர் கூடக் கிடைப்பது அபூர்வம். இதனைக் கண்ணனும் கீதையில் தெளிவாகவே கூறுகிறான் (மஹாத்மா துர்லபம்). இவ்விதம் லக்ஷத்தில் ஒருவன் நம்பெருமாளின் நலத்தைப் பற்றி நினைக்கிறான் அல்லவா? அந்த ஒருவனுக்காக மட்டுமே அவன் பெரியகோயிலில் இன்னமும் உள்ளான். இவ்விதம் அல்லாமல் அவனது திருவடிகளை எப்போதும் பாதுகாத்து நிற்பதால், திருவடிகளைக் காட்டிலும் பாதுகைக்கு மேன்மை அதிகம் என்றார்.

 
——————————————-
ஸ்ரீரங்கம் பெரியகோவிலில் சடாரி சாதிக்கப் பெறுதல் என்பது அவ்வளவு சுலபமாக கிடைக்காது.
 
கோவிலின் நிர்வாகத்திற்குப் போகும் பாதி புகார்கள், ஸ்ரீசடாரி சாதிக்காததினால் ஏற்படும் புகார்தான்.
 
கூட்டம் மிகுந்த இந்த காலம் மட்டுமல்ல – இந்த அளவிற்கு கூட்டம் இல்லாத அந்த காலத்திலும் இது குறித்த புகார்தான் அதிகம். 
 
இதுகுறித்து ஆராய சுமார் 20 வருடங்களுக்கு முன்னமேயே நிர்வாகம் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது.  அந்த கூட்டத்திற்கு என் தகப்பனாருடன் நானும் சென்றிருந்தேன். 
 
உயரதிகாரிகள் ஏன் நீங்கள் தொடர்ந்து ஸ்ரீசடாரி சாதிக்க மறுக்கின்றீர்கள்? என்று வினவினார்கள். 
 
அப்போது பல காரணங்கள் சொல்லப்பட்டன.  அதிகமான அர்ச்சகர்கள் கூறிய ஒரே காரணம் ஸ்ரீசடாரியின் எடை அளவுக்கதிகமாகயுள்ளது (சுமார் 5 கிலோவிற்கு மேல்தான் இருக்கும்)  தொடர்ச்சியாக சாதிக்க முடிவதில்லை என்பதுதான்.

மெல்லியதாக எடை கம்மியாக வேறு ஒரு ஸ்ரீசடாரி செய்து இந்த பழைய சடாரியினை பெரிய பெருமாள் திருவடியில் எழுந்தருளப்பண்ணலாம் என்று ஒரு ஆலோசனை எழுந்தது. 
 
ஸ்தலத்தார்கள் தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். 
முளையிலேயே இந்த ஆலோசனைக் கிள்ளியெறியப்பட்டது.
 

எதற்கு இதனைச் சொல்லுகிறேன் என்றால் இந்த பாதுகைதேவி நம்பெருமாளுக்காகவென்றே அவதரித்தவள்.  
 
நம்பெருமாள் திருவடிகளை விட்டு க்ஷண நேரம் கூட அகலாதவள்!

இவள்தான் நம்பெருமாளின் பாதங்களுக்கு ரக்ஷை என்று ஸ்வாமி ஸ்ரீதேசிகர் சொன்னது எவ்வளவு உண்மை! நிதர்சனம்!
 
 
 
———————————————————————————————
Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: