Srirangapankajam

December 15, 2008

Pesum Arangam-04

Filed under: PESUM ARANGAM — Tags: — srirangapankajam @ 11:48 pm
Chapter-04
10.12.2008
 
இராமனின் பாதுகையை பரதன் தன் தலைமேல் சுமந்து அயோத்தியடைந்து பாதுகாராஜ்ய பரிபாலனம் செய்தது அனைவரும் அறிவோம்.
 
இது போன்று கிருஷ்ணரின் பாதுகையை ஒருவர் சுமந்து போற்றியதை அறிவீர்களா….?
 
அந்த பெருமைக்குரியவர் உத்தவர்
 
இவர் கிருஷ்ணரின் பாதுகைகளை தம் தலைமேல் சுமந்து பத்ரிகாஸ்மரத்தில் ஸ்தாபித்து பூஜித்திருக்கின்றார்.
 
இதனை ஸ்வாமி தேசிகர் சொல்லும் போது இராமாயணம், மஹாபாரதம் ஆகிய இருபெரும் இதிகாசங்களில் உன் பெருமை பேசப்படுகின்றது என்கிறார்.
 
நாம் செய்யும் கர்மாக்களை நிறைவு செய்யும் போது ‘ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்” என்று கிருஷ்ணருக்கு
அர்ப்பணித்து நிறைவு செய்வது போல, சாஸ்திரங்களில் கூறப்பட்ட யாகங்களை பூர்த்தி செய்த பின்
‘ஸர்வம் ஸ்ரீகிருஷ்ண பாதுகார்ப்பணம்” என்று அர்ப்பணித்து நிறைவு செய்ய வேண்டும் என்கிறார்.
 
பாதுகையினை ராஸலீலை செய்யும் கிருஷ்ணருடன் ஒப்பிடுகின்றார். 
 
எப்படி ராஸலீலையின் போது பல கிருஷ்ணர்களாக அந்த மாயவன் தோன்றினானோ, அது போன்று பாதுகையும் ரிஷிகளின் மனம், வேதங்களுடைய சிரஸ் போன்ற வேதாந்தங்கள், தூய கவிஞனின் வாக்கு ஆகியவிடங்களில் எல்லாம் ஆக்ரமித்துள்ளதாம்.
 
இந்த பாதுகைகளை தியானிக்கும் போது மனதில் கெட்டஎண்ணங்கள் உண்டாவதில்லை. 
 
இதனால் தீய சகவாசம் இல்லை. 
 
தீயவை இல்லாத இடத்தில் பகவத் சிந்தனை பெருகும்.  அவனைப் பற்றிய அறிவு பெருகும்.
 
தியானித்தால் கெட்ட எண்ணம் வராது சரி..!  தலையில் நாம் சாதிக்கப் பெறும் போது என்ன நடக்கும்?
 
ஸ்வாமி தேசிகன் கூறுகின்றார் நம் தலையெழுத்திலுள்ள கெட்ட எழுத்துக்களையெல்லாம் இந்த பாதுகையானது
நம் தலைகள் மீது சாதிக்கப் பெறும் போது அழித்து விடுமாம். 
 
50 பரிஸர விநதாநாம் மூர்த்நி துர்வர்ண பங்க்திம்
     பரிணமயஸி சௌரே: பாதுகே த்வம் ஸுவர்ணம்
     குஹகஜந விதூரே ஸத்பதே லப்த வ்ருத்தே:

     க்வநு கலு விதித: தே கோப்யஸௌ தாதுவாத:
 
பொருள் – பாதுகையே! உன்னைத் தங்கள் தலைகளில் ஏற்றுக்கொண்டவர்களுக்கு நீ செய்வது என்ன? அவர்கள் தலைகளில் கெட்ட எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளவற்றை (தலை எழுத்து) தங்கத்தால் எழுதப்பட்ட நல் எழுத்துக்களாக நீ மாற்றி விடுகிறாய். உன்னைத் தீய மக்கள் அண்டிவிடாதபடி நீ வெகு தூரத்தில் உள்ளாய்; இப்படிப்பட்ட ரஸவாதவித்தையை நீ எங்கு கற்றாய்?
விளக்கம்- சாதாரண பொருள் ஒன்றைத் தங்கமாக மாற்றும் வித்தைக்கு ரஸவாதம் என்று பெயர். இங்கு மக்களின் தலை எழுத்துக்கள் சாதாரணமாக உள்ளன. ஆனால் பாதுகையைத் தங்கள் தலையில் ஏற்பவர்களின் தலை எழுத்தானது தங்கமாக மாறி விடுகிறது. இதனால் அவர்களும் இந்த உலகத்தில் தங்கம் போன்று அனைவராலும் போற்றும்படியாக மாறிவிடுகின்றனர்.
 
பா  :  பாவங்கள் தொலையும் து  :துக்கங்கள் விலகும்
கை : கைங்கர்யம் கிட்டும்.
 
 ———————————————————————————————————————————–
 

Blog at WordPress.com.

%d bloggers like this: