Srirangapankajam

December 10, 2008

Pesum Arangam-03

Filed under: PESUM ARANGAM — Tags: — srirangapankajam @ 11:44 pm
Chapter-03
09.12.2008
ஸ்ரீபாஞ்சராத்ர ஸம்ஹிதையில் சடன் என்ற அசுரனை அழிப்பதற்காக பாதுகை அவதரித்தது என்று கூறப்படுகின்றது.

ஸ்ரீரங்கபாதுகை, தினந்தோறும் திருமுடியினில் சாதிக்கப் பெற்ற பக்தர்களின் துர்குணத்தை அழிக்கின்றது.
துன்பத்தினைப் போக்குகின்றது. 
 
சடன் என்ற வாயுவை வென்றதால் சடகோபன் ஆனார் 
நம்மாழ்வார்.
 
பாமரனும் கடைத்தேற வேதம் தமிழ் செய்த மாறன் ஆனார்.   ஒப்பற்ற திருவாய்மொழியினைப் படைத்து
இந்த மன்னுய்ய அருளியவர்.
பாதுகையில் இவரை பாவிக்கும் போது சடாரி ஆனார்.

 
நம்மாழ்வார் பகவானின் திருவடிகளிலிருந்து உதித்த,
திவ்யமான வர்ணமான சூத்திர வர்ணத்தில் பிறந்தவர்.
அனைவரது கர்மமும் இயங்க தான் இயங்கும் அடிப்படையான வர்ணம் இது.   பகவானது சிருஷ்டியில் அனைத்தும் மகத்தானதுதான்.   பேதங்கள், ஏற்றத் தாழ்வு பின்னால் வந்த சிலர் செய்த கொடுமைகள்தாம்.   
சடாரியும் நம்பெருமாள் திருவடிகளையே தஞ்சம் என்றடைந்தது. 
 
வேதம் முழுதும் தமிழில் திருவாய்மொழியாக ஆக்கியவர் சடகோபன்.  தமிழ் ஏற்றம் பெற்றது.  நம்பெருமாள் புறப்பாட்டின் போது முன்னே திவ்விய பிரபந்தம் செல்ல, கட்டுண்ணப்பண்ணியவனாய் கஸ்தூரிரங்கன் பின் செல்கின்றான். 
 
வேதம் ஏத்தும் அரங்கனை, வெளியில் இழுத்து,  புறப்பாடு கண்டருளப்பண்ணுவது பாதுகைதாம்!
 
இந்த பாதுகைகளின் பெருமையை எழுதலாம் என்றால் இயலாத காரியம் என்கின்றார் ஸ்வாமி தேசிகர் ஆயிரத்தெட்டு பாசுரங்கள் பாடிய பின்பும்!. 
 
எழுதலாமாம்….! எப்படி..?  (ஸ்வாமி தேசிகரின் கற்பனை வளத்தினை பாருங்கள்…!)
 
ஆகாயம் முழுவதுமாக சேர்ந்து ஒரு காகிதமாய் மாற வேண்டும். 
ஏழு கடல் நீரும் சேர்ந்து எழுதும் மையாக உருமாற வேண்டும். 
பெருமைதனை விவரிக்க  ஆயிரம் வதனங்களையுடையவனாய்  அரங்கனே மாற வேண்டுமாம்.
 
ஏழ் கடலும் மையா, எழில் வானம் ஏடாக
ஏழுலகம் ஈன்றார்; எழுது மேல் – வாழ் அடியாய்!
உன் நலங்கள் ஓதலாம் மற்றொருவர் ஓதுதற்கு
நன்னில மாமோ நவில்!
 
நம்பெருமாளின் திருவடிகள்,  கல்லாய் சமைந்த அகலிகையை மீட்டது – சகடாசுரனை உதைத்த அழித்தது – வானம் வரை அளநது கங்கையை உண்டாக்கியது – திருபாதங்கள் நோக பாண்டவர்களுக்காக தூது சென்றது இப்படியாக காருண்யம், கடமை, கண்டிப்பு, கடாக்ஷம் ஆகிய அனைத்து குணநலன்களையும் கொண்ட இந்த திருக்கமலப் பாதத்தினைத் தாங்கும் பாதுகையை, நம் தலைமேல் நாம் சாதிக்கப் பெறுவதற்கு எத்தனை பாக்கியம் செய்திருக்க வேண்டும்?
 
நாம் இந்த ஸம்ஸாரமாகிய கடலைக் கடக்க, நம் பாவங்கள் யாவும் தொலைய ஒரு எளிமையான உபாயத்தினை ஸ்வாமி தேசிகன் பாதுகா ஸஹஸ்ரத்தில் ‘ப்ரபாவ பத்ததி’யில் 45வது சுலோகத்தில் சொல்கின்றார்.  ஆழ்ந்த பக்தியோடு கடைபிடியுங்கள். கடைத்தேறுவீர்!
 
45 ஸக்ருதபி கில மூர்த்நா சார்ங்கிண: பாதுகே த்வாம்
      மநுஜம் அநுவஹந்தம் தேஹபந்த வ்யபாயே
      உபசரதி யதார்ஹம் தேவவர்க்க: த்வதீய
     ஸ து நியமிதப்ருத்ய: ஜோஷம் ஆஸ்தே க்ருதாந்த:
 
பொருள் – சார்ங்கம் என்னும் வில்லை உடைய நம்பெருமாளின் பாதுகையே! உன்னை ஒரு மனிதன் தனது வாழ்நாளில் ஒருமுறையாவது தலையில் ஏற்றால் போதுமானது. அந்த மனிதனின் உடல் தரையில் விழும் காலத்தில் உனது வேலையாட்களான நித்யசூரிகள், அவனைச் சரியானபடி உபசாரம் செய்து அழைத்துப்போகின்றனர். இதனைக் காணும் யமன் தனது தூதர்களை அடக்கியபடி அங்கிருந்து மௌனமாகத் திரும்பி விடுகிறான்.
விளக்கம் – சடாரியைத் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது தலையில் ஏற்பவர்களை யமன் திரும்பிப்பார்க்கவும் அஞ்சுவான் என்று கருத்து. அவர்களுக்கு மீண்டும் ஸம்ஸார சுழற்சி என்பதே இல்லை

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: