Srirangapankajam

December 7, 2008

Pesum Arangam-02

Filed under: PESUM ARANGAM — Tags: — srirangapankajam @ 2:04 pm
Chapter-02
07.12.2008
 
 
 
பேசும் அரங்கம்…
 
 
பாதுகாதேவி அனைவருக்கும் எந்தவித பேதமும் இல்லாது அபயமளிப்பவள். 
 
மிக மிக உயர்ந்தவள்.
இந்த உயர்ந்தவள் ஒப்பில்லா முதல்வனோடு இருப்பதுதானே நியாயம்.  அதனால்தான் அரங்கனின் திருக்கமலப்பாதங்களோடு இணைந்தாள். 
 
இதில் பூர்வாச்சாரியார்கள் ‘திருக்கமலபாதம்’ என்பதை மூன்றாகப் பிரிக்கின்றார்.
1. திருப்பாதம்: ‘துயரறு சுடரடி” இது துயர்போக்கும் பேரருளாளன் காஞ்சி வரதனைக் குறிக்கும்.
2. கமலப்பாதம்: ”பூவார் கழல்கள்” – புஷ்பம் போல் தரிசித்த மாத்திரத்தில் மனதிற்கு ஹிதத்தைத் தரக்கூடிய திருவேங்கடமுடையானுடைய கமலப்பாதம்.
3. திருக்கமலப்பாதம்: ”பொது நின்ன பொன்னங்கழல்’
சமஸ்தலோகத்திற்கும், அனைவரையும் உஜ்ஜீவிக்கச் செய்யக்கூடியதான, எல்லாருக்கும் பொதுவான பாதங்கள். இது ஸ்ரீரெங்கநாதனுடையது!.
 
பராங்குசநாயகியான நம்மாழ்வார் திருப்புளியாழ்வாரினடியிலே ஏகாந்தமாய் அமர்ந்து, அமர்ந்தவிடத்திலேயே திவ்யதேசத்து எம்பெருமான்கள் அனைவரையும் தரிசித்துக்கொண்டிருந்தார் –  அந்த பராங்குசநாயகி பாதுகாதேவியான ஆன போது
இதற்கு விரோதமாக ஏகாந்தம் தவிர்த்து பிறவி பெருங்கடலை மக்கள் கடப்பதற்கு ஏற்ற கப்பலாய் காருண்யத்தோடு விளங்குகின்றாள்.
 
இந்த பாதுகையின் பிரபாவத்தினை, பெருமைதனை முதலில் உலகிற்கு உணர்த்தியவன் பரதன்.

பரதன் பூஜித்ததனால் பாதுகைக்கு ‘பாரதி’ என்றும் ஒரு பெயர் உண்டு.
 

இராமன் காட்டிற்குச் செல்கின்றான்.  காட்டிலிருந்து என்ன பயன்? கடமையுணர்வு மிகுந்த இந்த கருணைத்தெய்வம்
பரதனின் தலைமேல் அமர்ந்து நாட்டிற்குத் திரும்ப செல்கின்றாள்.  அவள் ஆண்ட அந்த பதினான்கு
வருடமும் தூய ஆட்சி!  துயரம் ஏதுமற்ற ஆட்சி!
 
தம் தலை மேல் தாங்கிய பரதன் சிந்தை மேன்மையுற்றது.  இன்று நாம் பெறும் ஸ்ரீசடாரிக்கு முன்னோடியானான்.  
 
பரதன் செய்தது பாதுகா ஆராதனம் மட்டுமே.  பாதுகாதேவி ஸர்வத்தையும் கவனித்துக் கொண்டாள்.

ஸ்வாமி தேசிகர் தமது பாதுகா ஸஹஸ்ரத்தில் ‘ப்ரஸ்தாவ பத்ததி’யில் கூறுகின்றார்.  எனக்கு ஒரு நேரத்தில் ஐந்து அல்லது ஆறு பதங்கள் மட்டுமே தோன்றுகின்றன (சுலோகம் 12) ஆனால் உன்னை துதிப்பதற்கு ஏதுவாக உன்னைப் பற்றிய பதங்கள் கங்கையின் பிரவாகத்திற்கு ஒப்ப தடையின்றி பெருக்கெடுத்து வரவேண்டும்” (சுலோகம் 14) என பிரார்த்திக்கின்றார்.  தன்னலம் அற்ற அந்த பிரார்த்தனையின் பலன்தாம் ஒரே ஜாமத்தில் பெருக்கெடுத்த பிரவாகமாகிய பாதுகா ஸஹஸ்ரம்.
 
12 மித ப்ரேக்ஷா லாபக்ஷண பரிணமத் பஞ்சஷபதா
     மத் உக்தி: த்வயி ஏஷா மஹித கவி ஸம்ரம்ப விஷயே
     ந கஸ்ய இயம் ஹாஸ்யா ஹரி சரணதாத்ரி க்ஷிதிதலே
     முஹு: வாத்யா தூதே முகபவந விஷ்பூர் ஜிதமிவ
 
பொருள் – ஸ்ரீ ஹரியான க்ருஷ்ணனின் பாதுகையே! அவனுடைய திருவடிகளைப் பாதுகாப்பவளே! உன்னுடைய தன்மைகளைப் பற்றி, பல உயர்ந்த கவிகள், உயர்த்தியாக ஸ்தோத்ரம் செய்யப்படுபவளாக நீ உள்ளாய். இப்படி இருக்கையில் என்னைப் போன்றவர்களின் ஸ்தோத்ரங்கள் அற்பமானவையே – காரணம் எனக்கு ஒரு நேரத்தில் ஐந்து அல்லது ஆறு பதங்கள் மட்டுமே தோன்றுகின்றன. இப்படி இருந்தாலும் நான் துதி செய்ய முயற்சிப்பது எப்படி உள்ளது என்றால் – பெரிய மரம் ஒன்றை வாய் மூலம் ஊதி அசைய வைப்பவனின் முயற்சி போன்றதாகும். வாய் மூலம் ஊதி மரத்தை அசைய வைப்பவனின் முயற்சி கண்டு உலகம் பரிகாசம் செய்வது போன்று, எனது கவிதையையும் கண்டு உலகம் பரிகாசம் செய்யாதோ?
 
விளக்கம் – ஒரு பெரிய மரமானது பலத்த காற்று வந்தால் கூட சிறிதே அசையும் தன்மை உடையது. அதனை ஒருவன் தனது வாயால் ஊதி அசைக்க முயன்றால் உலகம் அவனைக் கண்டு சிரிக்கும் அல்லவோ? இந்த முயற்சி போன்றே தன்னுடையதும் உள்ளது என்றார். இங்கு மேலும் ஒரு கருத்து உள்ளது. மரம் என்பதை ஸ்ரீரங்கநாதன் என்றும், காற்று என்பதை வேதங்கள் என்றும் கொள்ளலாம் . உயர்ந்த வேதங்கள் கூட அவனை நெருங்கி உணர இயலாமல் உள்ளபோது, அற்பமான தன்னால் இயலுமோ என்றார்.
14 ரங்கக்ஷ்மாபதி ரத்நபாது பவதீம் துஷ்டூஷத: மே ஜவாத்
     ஜ்ரும்பந்தாம் பவதீய சிஞ்ஜித ஸுதா ஸந்தோஹ ஸந்தேஹதா:
     ச்லாகா கூர்ணித சந்த்ரசேகர ஜடா ஜங்கால கங்காபய:
     த்ராஸாதேச விச்ருங்கல ப்ரஸரண உத்ஸிக்தா: ஸ்வயம் ஸூக்தய
 
பொருள் – உயர்ந்த கற்களால் இழைக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னைத் துதித்து கவி பாட வேண்டும என்ற ஆசை எனக்கு அதிகமாக உள்ளது. உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனின் மிக உயர்ந்த பக்தனான சிவபெருமான் தனது தலையை அசைக்கும்போது அவனது சடைமுடியில் மிகவும் வேகமாக ஓடிவரும் கங்கை நதியின் ஓசையானது, உன்னுடைய அமிர்தம் போன்ற இனிய நாதத்தைப் போன்று உள்ளது. அந்த கங்கை நதியானது, தான் ஓடிவரும் பாதையில் தனக்கு ஏதேனும் தடை வருமோ என்று அச்சம் கொள்ளாமல் கர்வத்துடன் ஓடிவருகிறது. அப்படி ஓடிவரும் கங்கை நீரின் வேகம் போன்று உன்னைப் பற்றிய சொற்கள் எனக்கு வர வேண்டும்.
 
விளக்கம் – வைஷ்ணவாநாம் யதா சம்பு: ஸ்ரோதாயாம் ஜாந்ஹவி யதா – சிவனை விட உயர்ந்த வைஷ்ணவர் வேறு யாரும் இல்லை. அப்படிப்பட்ட சிவனால் போற்றப்படும் பெருமாளின் பாதுகை என்றார். கங்கையின் வேகம் சிவனின் தலை அசைப்பால் மேலும் அதிகமாகிறது என்றார்.தன்னிடமிருந்து வெளிவரும் பாதுகைகள் பற்றிய கவிதைகள் கண்டு, அந்தச் சொற்கள் தடை ஏதும் இல்லாத தன்னையே தடுத்துவிடுமோ என கங்கை அஞ்சும்படியாக, கர்வத்துடன் சொற்கள் வெளிவரவேண்டும் என்றார் – இப்படியாகவும் கருத்து உரைக்கலாம்
 

யந்திரங்கள் ஏதும் வேண்டாம்.  மந்திரங்கள் பல ஜபிக்க வேண்டாம்.  பாதுகை ஒன்று போதும்.  நம் பாவங்கள் யாவும் தொலையும்.
Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: