Srirangapankajam

December 5, 2008

Pesum Arangam-01

Filed under: PESUM ARANGAM — Tags: — srirangapankajam @ 11:39 pm
Chapter-01
01.12.2008
 
 
 
பேசும் அரங்கம்…
 
அரங்கன் பேசினாற் போல் இப்போது அவனது அரங்கம் பேச வந்துள்ளது.
நண்பர் திரு.ஸ்ரீதரனிடம் இது பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது ‘பாதுகையிலிருந்து ஆரம்பியும்” என்று நியமித்துள்ளார்.
 
உண்மைதான்.  அவன் பாதம்தானே நமக்கு கதி.
அந்த பாதம் தாங்கும் பாதுகைதானே நாம் உய்ய ஒரே வழி!
 
எந்த திவ்யதேசத்து பெருமானிடத்தும் இல்லாத ஒரு தனித்துவம் அரங்கனிடத்து உண்டு.
 
அரங்கனுக்கு மட்டுமே பாதுகையுண்டு.
 
எப்படி தயாதேவியையும் ஸ்ரீனிவாசரையும் பிரிக்க முடியாதோ அப்படியே அரங்கனையும் அவனது பாதுகையையும் பிரிக்க முடியாது. 
 
ஸ்வாமி தேசிகர் இந்த தயா தேவிக்கு ‘தயா சதகமும்’  (108 சுலோகங்கள்) பெருமை வாய்ந்த பாதுகைக்கு ‘பாதுகா சஹஸ்ரமும்” (1008 சுலோகங்கள்)  அருளியுள்ளார். 
 
இதில் பாதுகா ஸஹஸ்ரம் ஒரேயொரு இரவில் கடைசி ஒரு ஜாமத்தில் அருளப்பட்டதாகும். 
 
தேசிகருக்கு ‘கவிதார்க்கிஹ சிம்ஹம்’ என்று அளிக்கப்பட்ட விருதின் பேரில் ஏற்பட்ட ஒரு சர்ச்சை நமக்கு ஒரு பெரும் பாக்கியத்தினை அருளியுள்ளது. 
 
இது எவராலும் இயலாத காரியம்.   ஸ்வாமி தேசிகரால் கூட இயலாத காரியம்.  அந்த பாதுகாதேவியே இவர் நாவில் வந்தமர்ந்ததினால் சாத்தியமான காரியம்!. 
 
நம்பெருமாளின் பாதுகை நம்மாழ்வார்! இந்த பாதுகா சஹஸ்ரத்தினை நம்மாழ்வாரின் ஸ்தோத்திரமாகவே பெரியோர்கள் கொள்வர்.  இந்த ஸம்ஸார பந்தத்தில் சிக்கி உழலும் நமக்கு அருமருந்து!.  வாழ்க்கைக் கடல் கடக்க உதவும் கப்பல்!
 
ஸந்த: ஸ்ரீரங்கப்ருத்வீச சரணத்ராண சேகரா: !
ஜயந்தி புவநத்ராண பத பங்கஜ ரேணவ: !!
 
சீரங்கர் சேவடியை சென்னிமிசை வைத்தேத்தும்
பாரங்கர் பாதம் படிவதால் – பாரெங்கும்
ஏதமிலா சேமமே எய்தும் அவர் தம் நல்
பாதம் பணிவாம் பரிந்து
 
ப்ரதாய பரம் நமோஸ்து தஸ்மை
ப்ரதமோ தாஹரணாய பக்திபாஜாம் !
யதுபஜ்ஞம சேஷத: ப்ருதிவ்யாம்
ப்ரதிதோ ராகவ பாதுகாப்ரபாவ: !!
 
சிந்தித்துச் சிந்தித்துச் செந்தாமரையடியை
வந்தித்து வந்தித்து வாயார – பந்தித்து
செம்மனத்தே வைத்துச் சிறையிட்ட சீரியரை
நம்மனத்தே வைத்தல் நலம்.

ஸ்வாமி தேசிகர் பாதுகையைப் பற்றிக் குறிப்பிடுகையில் இந்த பாதுகைதேவி இரண்டு இடத்தில் இருவரைத் தொடுவதாகக் கூறுகின்றார்.   நமக்கு சாதிப்பதனால் அவனது திருவடி நமக்காக கீழறங்குகிறது எனவும், நாம் அதனை சாதிக்கப் பெற்றமையினால் மேலுள்ள நல்லுலகு செல்கிறோம் என்கிறார்.
 
267. ஸ்ப்ருஸத் சிரஸா பதேந ச த்வாம்
                 கதிம் உத்திச்ய முகுந்த பாதுகே த்வௌ
         அவரோஹதி பச்சிம: பதாத் ஸ்வாத்
                 அதிரோஹத்யநக: ததேவ பூர்வ
:

பொருள் –  ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை இருவர் தொடுகின்றனர். ஒருவர் உன்னைத் தனது கால்கள் கொண்டு தொடுகிறார் (இது ஸ்ரீரங்கநாதன்), மற்றொருவர் உன்னைத் தனது தலையால் தாங்குகிறார் (இவர் சடாரி பெற்றுக் கொள்பவர்). தலையால் தொட்டவர் மேலே (பரமபதம்) ஏறியபடி உள்ளார். காலால் தொட்டவர் (ஸ்ரீரங்கநாதன் ஆசனத்தில் இருந்து இறங்க எண்ணி பாதுகை மீது திருவடி வைக்கிறான்) கீழே இறங்குகிறார்.
 
                                                                 -தொடரும்…
 

 
அன்பார்ந்த அரங்கன் அடியார்கள் அனைவருக்கும்,
 
அடியேனது சாஷ்டாங்க நமஸ்காரம்.
 
பேசும் அரங்கன் இவ்வலைத்தளத்தின் மூலமாக பேச வேண்டியதை அனைத்தும் பேசி விட்டான்.  
 
இனி அவனது அரங்கம் பேச வந்துள்ளது. 
 
இந்த அரங்கத்தில் நான், நீங்கள் அனைவருமே பேசலாம்.  ஒரேயொரு நிபந்தனை…  
 
தலைப்பு…?
 
அரங்கன், அவனது அரங்கம் (ஸ்ரீரங்கம்) மற்றும் அவனது அடியவர்கள் இதனைப் பற்றியே இருக்க வேண்டும்.
 
பேச ஆரம்பிப்போமா…..?
 
தாஸன்
-முரளீபட்டர்-
 
Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: