Srirangapankajam

November 14, 2008

PESUM ARANGAN-146

Filed under: PESUM ARANGAN — Tags: , — srirangapankajam @ 11:07 pm
Chapter-146
 13.11.2008
 
 

”பூத்வா பூயோ வரவரமுநிர் போகிநாம் ஸார்வபௌம
ஸ்ரீமத் ரங்கே வஸதி விஜயீ விஸ்வ ஸம்ரக்ஷணார்த்தம்
ஆதிசேஷன் உலகைக் காப்பதற்காக மறுபடியும் மணவாள மாமுனிகளாக அவதரித்து ஸ்ரீரங்கத்தில் மிகவும் மேம்பட்டு வாழ்கின்றார்.
 
அரங்கன் அயோத்தியிலிருந்து வருவதற்கு முன்பே இங்கு ஆதிசேஷன் சூக்குமமாக படுக்கை விரித்து காத்திருந்தது.
 
வீபிடணன் அவனையுமறியாமல் அந்த சேஷ பீடத்தின் மேல் ஸ்ரீரங்கவிமானத்தினை எழுந்தருளச் செய்தான்.
 
ஆதிசேஷனும் சரி, அரங்கனும் சரி  எங்கு எழுந்தருளினால் இவ்வுலகம் உய்யும் வண்ணம் வைணவம் தழைத்தோங்கும் என்பதனை அறிந்து அரங்கமாநகரினை தேர்ந்தெடுத்தனர்.
 
ஸ்ரீரங்கஸ்ரீ நன்றாகயிருந்தால்தான் வைணவம் உலகம் செழித்தோங்கும்.
வைணவத்தின் ஆனிவேர் ஸ்ரீரங்கம்தான். 
 
எப்போதெல்லாம் ஒரு தேக்கம் ஏற்படுகின்றதோ அப்போதெல்லாம் அரங்கன் ‘ஸ்வயமே கார்யயிதி‘யாய் சித்து செய்து வைணவ சித்தாந்தத்தை நிலைநிறுத்திக் கொண்டுள்ளான்.
இந்தமுறை ஆதிசேஷனை அவதரிக்கச் செய்து ஆட்டுவிக்கின்றான்.
 
ரஹஸ்யகிரந்த தத்வேஷூ ரமயாமாஸ தத்ப்ரியம்
வாக்யஸங்கதி வாக்யார்த்த தாத்பர்யாணியதாச்ருதம்
வ்யாகுர்வந்நேவ பூர்வேஷாம் வர்த்தமாந: பதே பதே
ஸ்வமநீஷாகதாம் நைவ கல்பயந் கிஞ்சிதப்யயம்
குப்தாம ஸர்வைர் குருத்வேந கூடாநர்த்தாநததீஸத்
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸஸ்ச ஸ்ருத்யந்தை பாஞ்சராத்ரத:
தேசிகநாம் நிபந்த்ரூணாம் தா;ஸயந்தேக கண்டதாம்
வாக்யாலங்கார வாக்யாகி வ்யாசக்ஷாணோ விசக்ஷண:
ஸூதீய: ஸ்வாதயாமாஸ ஸ்வஸ்வரூபம் ஸூதுர்க்ருஹம்
 
மேவுத்தவத்து வரயோகியிட்ட வியாக்கியையால்
தேவுந்திகைக்கும், நற்றத்துவரகஸ்யத்துடனே
தாவும் பெரும் புகழாசாரிய விதயத்திற்குமா
தாவும் பொருள்செறிச் சொல்லாபரணச் சுருதிக்குமே
 
இந்த மணவாள மாமுனிகள் முன்னோர் மொழிந்த முறைகளைக் கடைப்பிடிப்பவராய், ஒவ்வொரு சொல்லுக்கும் தம் மனதில் தோன்றிய கருத்துக்களை ஏதும் கூறாமல் தம் ஆச்சார்யர்கள் மூலமாய் கேட்ட அர்த்தாநுகுணமாக வாக்யங்கள், ஸங்கதிகள், வாக்யார்த்தங்கள், அந்த வார்த்தையின் இடம்பெற்றுள்ள இடத்தின் பாவார்த்தங்கள் இவற்றை விசேஷமாக அருளிச்செய்து கொண்டு,  தமக்கு முன்னிருந்த பூர்வாச்சாரியர்கள் அர்த்த கௌரவத்தினால் மறைத்து வைக்கப்பட்ட ரஹஸ்யமான விசேஷார்த்தங்களையும் தமது கிருபையினால் வெளியிட்டார்.  இப்படியாக ரஹஸ்யார்த்தங்களில் ஈடுபட்டவர்களை அதனுடைய தத்வார்த்தங்களை விரிவாக கூறி மகிழச்செய்தார்.  மேலும் வேதங்கள், உபநிடதம், ஸ்ம்ருதிகள், இதிகாசங்கள், பாஞ்சராத்ரம் இந்த ப்ரமாணங்களால் பூர்வாச்சார்யர்களின் க்ரந்தங்களையருளிச் செய்து, மஹாநிபுணராய் ஸ்ரீவசனபூஷண சூர்ணிகை வாக்யங்களை வ்யாக்யானம் செய்தருளுமவராய், அறிவதற்கு அரிதான ஆத்ம ஸ்வரூபத்தை ஞானிகளுக்கு அநுபவிப்பித்து மகிழ்வித்தார்.
 
திருவாய்மொழி விஷயமாய் திருவாய்மொழி நூற்றந்தாதி என்னும் அற்புத அந்தாதி பாமாலையினையருளினார்.  பூர்வாச்சார்யார்களின் உபதேசங்களை, பரம்பரை பரம்பரையாக, ப்ராப்தமாய் வந்த தர்சந தாத்பர்யங்களையெல்லாம், ரத்தினமாலை போல் கவனமாக கோர்த்து ‘உபதேச ரத்னமாலை’ எனும் அற்புத க்ரந்தத்தினையும் அருளிச்செய்தார்.
பொருளில் பற்றின்றி, தமது ஸந்நியாச தர்மத்தினை குறைவற ஒழுகி, பலரை பலவாறு திருத்திப்பணி கொண்டு, ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணத்தினை எல்லோருக்கும் புகட்டி வைணவ தர்ஸனத்தினைப் பிரகாசிக்கச் செய்கின்றார். 
 
காஞ்சிபுரம், திருமலை போன்ற பல திவ்ய க்ஷேத்திரங்களுக்கும் சில முறை விஜயம் செய்கின்றார். 
 
ஸ்ரீரங்கத்தில் ஆவணி மாதம் திருப்பவித்ரோற்சவம். 
 
அன்று சாற்றுமுறை.
அரங்கன் அர்ச்சகரின் மேல் ஆவேசித்து, ‘நமக்கு அழகிய மணவாள மாமுனியிடத்திலே த்ராவிட வேதமான நாலாயிரம் திவ்ய ப்ரபந்த வ்யாக்யானங்களையும் கேட்டருள அபிநிவேசமாயிருக்கின்றது.  ஆகையினாலே இந்த மணவாள மாமுனியை  அழைப்பியும்” என்று மணவாளமாமுனிகளை அழைக்கின்றான்.  
 
மணவாள மாமுனிகள் அரங்கனின் கட்டளையை சிரஸாவகிக்கின்றார்.
அரங்கன், ”நாளை முதலாக நம்முடைய பெரிய திருமண்டபத்திலே பெரியவண்குருகூர் நம்பியான ஆழ்வாருடைய திருவாய்மொழிப் பொருளை ஈடு முப்பதாறாயிரத்துடனே நடத்தும்” என்று அனுக்ரஹிக்கின்றார்.
அரங்கனின் ஸ்ரீசடகோபம் மாலை, பிரஸாதம் மரியாதைகளைப் பெறுகின்றார்.
அரங்கனின் அந்தரங்க ஆசையினை நிறைவேற்றத் தொடங்கினார்.
 
நாமார்? பெரிய திருமண்டபமார்? நம்பெருமாள்
தாமாக நம்மைத் தனித்து அழைத்து – நீ மாறன்
செந்தமிழ் வேதத்தின் செழும் பொருளை நாளுமிங்கே
வந்துரையென்றேவுவதே வாய்ந்து
 
என்று உகந்து, எண்ணியெண்ணி மகிழ்ந்து, மறுநாள்,
((கலி 4533, பரீதாபி வருடம் ஆவணி மாதம் 31ம் தேதி,  வெள்ளிக்கிழமை (16-09-1432)) அணியரங்கன் திருமுற்றத்தடியார், ஆச்சார்யபுருஷர்கள், ஜீயர்கள்,  ஸ்ரீவைஷ்ணவர்கள், அரங்கனின் அனைத்துக் கொத்து கைங்கர்யபரர்களுடன்,  அரங்கனை மங்களாசாஸனம் செய்கின்றார்.

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: