Srirangapankajam

November 12, 2008

PESUM ARANGAN-144

Filed under: PESUM ARANGAN — Tags: — srirangapankajam @ 11:05 pm
Chapter-144
 11.11.2008
 
 
அவரவர் தம் அதிகாரத்தினை ஆராய்ந்து பயன்படுத்துதல் வேண்டும்.   அதிகாரம்தான் உள்ளதேயென்று அகப்பட்டவர்களிடத்திளெல்லாம் ஆராயாது காண்பித்தால்,  அரங்கன் கண்டிப்பாக ஒரு பாடம் புகட்டுவான். 
 
நம்பெருமாள் முதலில் கந்தாடையண்ணன் கனவில் கசையால் அவரை அடித்தும், சிங்கராயர் என்பவரது கனவில் ஆதிசேஷனை காண்பித்து, இவர்தான் மணவாள மாமுனிகள் இவரோடு ஸம்பந்தம் உண்டாக்கிக்கொள் என்று உத்தரவு பிறப்பித்தும் மாமுனிகளிடத்து பலரை ஆஸ்ரயிக்க வைக்கின்றார். 
 
ஒரு நாள் மணவாள மாமுனிகள் நம்பெருமாளை மங்களாஸாசனம் செய்யப் புறப்படுகின்றார். 
 
நம்பெருமாளுக்கு திரையிட்டு ஏகாந்தமாய் திருவாராதனம் நடந்து கொண்டிருக்கின்றது.
 
மணவாள மாமுனிகள் பால் போன்ற வெண்மை நிறம் உடையவராயிருப்பார்.  உத்தமநம்பிக்கு இந்த நிறம் ஏதோ ஒரு வியாதியாயிருக்குமோ! என்று எண்ணம். 
 
உத்தமநம்பி நம்பெருமாளுக்கு திருவாலவட்டம் (விசிறி கொண்டிருப்பது) கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். 
 
உத்தமநம்பிகள் மணவாள மாமுனிகளைப் பார்த்து ‘தேவரீர் இங்கே நீண்டபொழுது எழுந்தருளியிருக்க வேண்டாம்”   என்கின்றார்.  இது கேட்ட மாமுனிகள் ஏதும் மறுத்து கூறாது உடனடியாக அவ்விடம் விட்டு அகன்று தம் மடத்திற்குத் திரும்பினார்.

நம்பெருமாளுக்கு ஒரு க்ஷணம் கூட மாமுனிகளை உத்தமநம்பி நடத்தியவிதம் பொறுக்க முடியவில்லை.  திருவாலவட்டம் விசிறிக்கொண்டிருந்த உத்தமநம்பிக்கு அப்போதே அசாத்தியமான ஒரு அசதி உடலில் ஏற்பட்டது.  அந்த அசதியினால் நின்றபடியே அருகேயிருந்த பலகணி கதவின் மேல் சாய்கின்றார்.  நின்றபடியே அசதியினால் தூங்குகின்றார்.  இந்த சில நிமிடநேர தூக்கத்திற்குள் கனவில் அரங்கன் தோன்றுகின்றான். திருப்பவளச் செவ்வாயில் முறுவலுடன் (கலாபத்திற்குப் பின் உத்தமநம்பி செய்த கைங்கர்யங்கள் அபாரமானது.  இதனால்தான் அரங்கன் அவரிடத்து கோபம் கொள்ளாமல் முறுவலுடன் திருத்திப் பணிக்கொள்கின்றான் போலும்! )    அணி விளங்கும் உயர் வெள்ளையணையான திருவநந்தாழ்வானை தொட்டுக்காட்டி, ”இவர்கிடீர்ளாக ஜீயராக வந்து அவதரித்தருளினார்.  அவருடைய நிறம் வெளுப்பு.  விஸ்வயித்திரும்!”  என்றருளி மறைகின்றார். 
 
ஸ்வப்நம் கலைந்து கண் விழிக்கின்றார் உத்தமநம்பிகள். 
தாம் அபசாரப்பட்டதை எண்ணியெண்ணி கலங்குகின்றார்.

 
உத்தமநம்பி அண்ணன் திருமாளிகையடைந்து அண்ணனிடத்தில் தாம் கண்ட கனவினைத் தெரிவிக்கின்றார்.  அண்ணனும் அவரும் அப்போதே மாமுனிகளின் இருப்பிடம் செல்கின்றனர்.  மாமுனிகள் திருப்பள்ளிப்பலகையிலே அப்போது சயனித்துக் கொண்டிருந்தார்.

இந்த இருவரின் கண்களுக்கும் அவர் பள்ளிக் கொண்டிருப்பது ஆதிசேஷன் சுருண்டு பள்ளிக் கொண்டிருப்பது போல் காட்சியளிக்க, இருவரும் கைதொழுது அப்போது அது சமயமல்ல என்று திரும்பி மறுநாள் சென்று நடந்த விவரங்களைக் கூறி அபராத க்ஷமாபணம் (தாம் செய்த தவற்றிக்கு மன்னிப்பு) பண்ணிக்கொள்கின்றனர். 
 
மணவாளமாமுனிகள் இவற்றையெல்லாம் ஏதும் பொருட்படுத்தாது உத்தமநம்பியினைக் கடாக்ஷித்து அவரை கோயிலண்ணன் திருவடிகளில் ஆஸ்ரயித்திருக்கும்படி நியமித்தருளினார்.
 

இன்றளவும் கோயில் மணவாள மாமுனிகளின் சந்நிதியினில் ஆதிசேஷ அவதாரமாய் மாமுனிகள் கோயிண்ணனுக்கும் உத்தமநம்பிக்கும்
ஸேவை சாதித்தமையை சித்ரரூபமாய் நாம் ஸேவிக்கலாம். 

ஒரு தூணில் ஆதிசேஷவாகனத்துடன் மணவாளமாமுனிகளையும் பக்கவாட்டில் ஒரு பக்கம் கோயிலண்ணனும், இன்னொரு பக்கத்தில் உத்தமநம்பியும் கைகூப்பி எழுந்தருளியிருக்கும் காட்சியினை தரிசிக்கலாம்.  இவர்களுக்கு நித்ய திருவாராதனமும் நடந்து வருகின்றது.

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: