Srirangapankajam

November 11, 2008

PESUM ARANGAN-143

Filed under: PESUM ARANGAN — Tags: — srirangapankajam @ 11:36 pm
Chapter-143
 6.11.2008
 
 
பூமியில் பிறந்த எவரும்,  எதுவும் இன்பத்தினை
மட்டுமோ அல்லது துன்பத்தினை மட்டுமோ நிரந்தரமாக அனுபவித்துக் கொண்டிருப்பது என்பது இப்புவியின் தர்மத்திற்கு மாறுபட்டதாகும். 
 
இரண்டும் கலந்து வருவதுதான் வாழ்க்கை. 
 
ஞானியர் இரண்டையும் சமமாகவேக் கருதுவர்.
 
அப்புள்ளார் தமது ஸ்ரீஸைலேச வைபவம் என்ற நூலில்
 
ஆதியிலே அரவரசை அழைத்து அரங்கன்
அவணியிலே இருநூறாண்டு இரும் நீர் என்ன,
பாதியிலே உடையவராய் வந்து தோன்றி
பரமபதம் நாடி அவர் போவேன் என்ன,
மீதியாய் முன்போல நிற்க – நாடி
நிலுவைதனை நிறைவேற்றி வாரும் என்ன,
சாதாரணம் எனும் மாவருடம்தன்னில்
தனித்துலா மூல நாள்தான் வந்தாரே!
 
என்று குறிப்பிடுகின்றார்.  இராமானுஜராய் தோன்றிய அரவரசு படாதபாடு பட்டது.  அலையாய் அலைந்து திரிந்து வைணவ தர்ஸனத்தினை நாட்டியது.  இருநூறாண்டு இருக்கவேண்டிய அது 120 ஆண்டுக்குள் பரமபதம் நாடிச் சென்றது.  பின்னொரு நாளில் கதியின்றி ஸ்ரீரங்கம் நிற்கும் அப்போது வைணவத்தினை நிலைநாட்டி மீண்டும் எழுச்சியுறச் செய்ய ஒரு அவதாரம் தேவை என்று அதுவும் அறிந்திருந்தது. அந்த அரங்கனும் அறிந்திருந்தான்.
 
அரங்கனும் புவிதர்மத்திற்கேற்ப அல்லலுற்று அலைந்து திரிந்து ஆஸ்தானம் அடைந்தபின், எடுத்தது முற்பிறவியின் தொடர்ச்சியை மாமுனியாய் அது. 
 
முற்பிறவியில் அது பட்ட கஷ்டம் போதுமெனக் கருதிய அரங்கன், பரிவுடன்தாமே தம்மை அணைத்து வந்த அதனை தாம் அரவணைத்து, இதன் பெருமை அறியாதாரை அறியச் செய்தான்.

முற்பகுதியில் கஷ்டப்பட்ட அதனை, அரங்கன். மாமுனியாய், தம்முடைய ஆச்சார்யனாக எண்ணி, ஏற்றம் கொடுத்து. தன் அணைப்பில் கிடத்தி வளர்த்தான்.  அது வைணவத்தினை வளர்த்து ஸ்ரீரங்கத்திலிருந்தபடியே ‘லோகைக தீபாங்குரமாய்’ பிரகாசித்துக் கொண்டிருந்தது.
ஆச்சார்யனுக்கு ஏதேனும் அவமரியாதை ஏற்படின் சிஷ்யனின் உள்ளம் பொறுக்குமோ? 
 
எறும்பி என்ற ஊரிலே அப்பா என்றவொரு வைணவர்.  அவர் நன்கு சாஸ்திரம் அறிந்தவர்.  மாமுனிகளின் பிரபாவங்களையெல்லாம் கேள்விப்பட்டு ஸ்ரீரங்கத்திற்கு வருகின்றார். 
 
இவர் கோயில் பெரிய கந்தாடை அண்ணன் ஸ்வாமிக்கு ஆத்மபந்து. 
 
மாமுனிகளின் திருமாளிகையடைகின்றார். 
 
மாமுனிகள் இவர் ஒரு பெரிய வித்வான் என்று அறிகின்றார். 
 
மாமுனிகளின் உபந்யாஸத்தினைக் கேட்ட அவர்,  ”ஜீயருக்கு தமிழொழிய ஸம்ஸ்கிருதத்தில் பரிச்சயமில்லையென்று கேட்டிருந்தோம்.  இவர் உபயவேதாந்தத்திலும் நிபுணராயிருக்கிறார்” என்று அதிசயிக்கின்றார். 
 
மாமுனிகள் இவரை மடத்தில் அமுது செய்ய பிரார்த்திக்கின்றார். 
 
சாஸ்திரம்,
”யத்யந்நம் யதிபாத்ரஸ்ந்நம் யதிநா ப்ரேஷிதம்ச யத்
அந்நத்ரயம் நபோக்தவ்யம் புக்த்வா சாந்தரயணம் சரேத்
ஸந்யாசிகளுடைய அந்நமும், ஸந்யாஸிகளுடைய பாத்ரத்திலுள்ள அன்னமும், ஸந்யாசிகளால் அனுப்பப்பட்ட அன்னமும் இப்படி மூன்றும் புசிக்கத் தக்கவையன்று.  அப்படி புசித்தானாகில் சாந்த்ராயண வ்ரதத்தை அனுஷ்டிக்கக்கடவன்
என்று கூறுகின்றது. 
 
இந்த சாமான்ய சாஸ்திர ஞானமுடையவராய், அதிலே பற்றுடையவராய், அன்னத்தினை மறுத்து மாமுனிகளின் திருவடிகளில் ஆஸ்ரயிக்காமல் தம்மூரேற எழுந்தருளுகின்றார்.
 
ஊர் போய் சேர்ந்தவர் அடுத்தநாள் திருவாராதனம் பண்ணுவதற்காக தம் திருவாராதன மூர்த்தியான சக்ரவர்த்தித் திருமகனின் திருவடி விளக்குவதற்காக கோயிலாழ்வாரின் திருக்காப்பினை நீக்க முயற்சிக்கின்றார்.  
 
என்ன முயன்றும் கோயிலாழ்வாரின் அந்த சிறு கதவினைத் திறக்க முடியவில்லை.  மிகவும் துக்கித்தவராய் அன்று திருவாராதனம் செய்யமுடியாமல், தாமும் அமுது செய்யாமல் சோகமாய் கண்வளர்கின்றார்.  அவ்வளவில் அந்த எறும்பி அப்பாவின் ஸ்வப்னத்தில்
சக்ரவர்த்தி திருமகன் இராமன் தோன்றுகின்றார்.
 
சேஷ: ஸ்ரீமாநஜநிஹிபுரா ஸௌம்யஜாமாத்ருயோகீ
போகீ பூதஸ் ததநுபகவாந் ராகவஸ்யாநுஜந்மா
பூத்வாபூயோ வரவரமுநிர் பூயஸாபாஸமாந:
ரக்ஷத்யஸ்மாந் ரகுகுலபதே ராஸ்திதோபத்ரபீடம்
பூத்வாபவ்யோ வரவரமுநிர் போகிநாம் ஸார்வபௌம:
ஸ்ரீமத்ரங்கே வஸதிவிஜயீ விஸ்வஸம்ரக்ஷணார்த்தம்
தத்வம் கந்தும் வ்ரஜ ஸரணமித்யாதிஸத் ராகவோயம்
ஸ்வப்நே ஸோயம் வரவரகுருஸ் ஸம்ஸ்ரயோ மாத்ருஸாநாம் !!
 
இந்த மணவாளமாமுனிகள் முதன்முதலில் கைங்கர்யஸ்ரீயையுடைய திருவனந்தாழ்வானாக இருந்தார்.  அவ்வரவரசனே பின்பு இராமபிரானுடைய தம்பியான லக்ஷ்மணனாகப் பிறந்தான்.  பின்பு ஆஸ்ரித சுலபரான மணவாள மாமுனிகளாக அவரே அவதாரம்.  சக்ரவர்த்தி திருமகனுடைய மங்களமான சிம்மாஸனத்தில் வீற்றிருந்து நம்மை ரக்ஷிக்கின்றார்.

திருவனந்தாழ்வான் ஆச்ரிதசுலபரான மணவாள மாமுனிகளாக அவதரித்து லோகத்தை ரக்ஷிப்பதற்காக ஸ்ரீரங்கத்தில் எல்லாரினும் மேம்பட்டு வாழ்கின்றார்.  தத்வஞானம் பெறுவதற்காக அவரை நீர் தஞ்சமாகப் பற்றுவீராக என்று உத்திரவிடுகின்றார். 
 
மேலும் ‘நீர் சேஷாவதாரமான ஜீயர் திருவடிகளிலே அபசாரப்பட்டு வந்தீர். 
பகவத் பக்தஸம்புத்த பாத்ர சிஷ்டோதநாதராத்
கோபிதாஸீ ஸூதோப்யாஸீ ஸம்ருதோ வை நாரதோ பவத்
பகவத் பக்தரொருவர் அமுது செய்த பாத்திரத்தில் மிச்சமான பிரஸாதத்தை அன்போடு உண்டதனால் வேசியின் மகனொருவன் இறந்த பின்பு மறுபிறவியில் நாரதராக பிறந்தான்
 

என்ற ஸ்ரீநாரதரின் உத்பத்தி பற்றி கேட்டறியீரோ? ஜீயர் திருவடிகளிலே ஆஸ்ரயித்து அபராதக்ஷமாபணம் (தவற்றிக்கு மன்னிப்பு) பண்ணிக் கொண்டு வந்தாலேலொழிய உம்முடைய கையினாலே நாம் திருவாராதனம் கொள்ளக் கடவோமல்லோம்.  சடக்கென போகீர்” என்று நியமித்தருளுகின்றார்.
 
(இராமாயணத்தில் இராமன் இலக்குவனுக்குக் கொடுத்த ஏற்றம் பற்றி நாம் அனைவரும் அறிவோம்.  தம் குறை வேணுமானாலும் அவன் பொறுப்பான்.  இலக்குவனைக் குறை கூறின் வெகுண்டெழுவான்.
அர்ச்சையில் கூட இலக்குவனின் அம்சமாகிய மாமுனிகளிடத்துக் குறைக் கண்டபோது, தம் பக்தன் தமக்குச் செய்யும் திரு
வாராதனத்தைக் கூட ஏற்க மறுத்து விரட்டியடிக்கின்றார்).
 
அப்பா திருக்கண் விழிக்கின்றார்.  உடனே ஸ்ரீரங்கத்திற்குப் புறப்படுகின்றார்.
 
அங்கேகவேராகந்யாயாஸ்துங்கே புவநமங்களே!..
ரங்கே தாம்நி ஸூகாஸீநம் வந்தே வரவரமுநிம்
 
திருக்காவேரி மத்யத்திலே, உலகங்களுக்கு மங்களாவஹமாய் விளங்கும் திருவரங்க திருப்பதியில் இனிதாக எழுந்தருளியுள்ள மணவாள மாமுனிகளை அடிபணிகின்றேன் என்று அநுஸந்தித்தவாறே மாமுனிகளின் திருவடிகளில் வேரறுந்த மரம் போன்று வீழ்கின்றார். 
 
மாமுனிகள் அவரை குளிர கடாக்ஷிக்கின்றார்.
 
பஞ்ச சம்ஸ்காரம் எறும்பியப்பாவிற்கு செய்கின்றார்.  எறும்பியப்பா,
‘போனகஞ்செய்த சேடந்தரு வரேல் புனிதமன்றோ” என்னும்படி
ஸூபாவனமான மாமுனிகள் திருவராதனம் செய்து பெருமாளுக்கு கண்டருளி தாம் போனகஞ்செய்த (அமுதுண்டது போக) சேடந்தருவரேல் (மீதமுள்ளதை தருவரேல்) அது புனிதமானது அன்றோ! என்று உகந்து
அவரிட்ட அன்னம் ஏற்று தம் பாவம் நீக்குகின்றார்!
Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: