Srirangapankajam

November 6, 2008

PESUM ARANGAN-142

Filed under: PESUM ARANGAN — Tags: — srirangapankajam @ 11:50 pm

மணவாள மாமுனிகளுக்கு அரங்கனால் அருளப்பட்ட பல்லவராயன் மடத்தினை வானமாமலை ஜீயர் உள்ளிட்டோர் செப்பனிடுகின்றனர். 

 
மாமுனிகள் பிள்ளைலோகாச்சாரியார் திருமாளிகையிலிருந்து சேகரிக்கப்பட்ட மண்ணைக் (ரஹஸ்யம் விளைந்த மண்) கொண்டு தாம் எழுந்தருளியிருக்கும் இடத்தினை மண்காப்பு சாத்துவித்து, அந்தவிடத்தினை உலகாசிரியன் உலாவும் இடமாகவேக் கருதி குருகுலவாஸமாக அந்த அறையினை எண்ணிப் போற்றி பேணி வந்தார். 
 
காலக்ஷேபம் செய்வதற்கு ஒரு பெரிய கூடம் கட்டுகின்றார்.  அதற்கு திருமலையாழ்வார் கூடம் என்று திருவாய்மொழிப்பிள்ளையின் ஞாபகம் உந்த திருநாமமிடுகின்றார். 
 
சுகாஸீனராய் இனிதேயமர்ந்து, தம்முடைய உபந்யாஸங்களினால் கவரப்பட்ட சிஷ்யர்கள்
 
ரங்கமங்களதுர்யாய ரம்யஜா மாத்ருயோகிநே
 
என்கிறபடி ஸ்ரீரங்கத்திற்கு மங்களாசாஸனபரரான மணவாள மாமுனிகளுக்கு மங்களமுண்டாகுக,
 
என்று சதா வேண்டியவண்ணம் இருந்தவர்களாய்,  கோயிலுக்கு மிகவும் மங்களாசாஸனபரராய் எழுந்தருளியிருக்கின்றார்.
 
ஆசாரஜ்ஞாநவைராக்யை ராகாரேணச தாத்ருஸ:
ஸ்ரீமாந் ராமாநுஜஸ்யோயமித்யாஸம் ஸந்மித: ப்ரஜா:
 
ஆசாரத்தினாலும், ஜ்ஞாநத்தினாலும், வைராக்யத்தினாலும், ஆகாரத்தினாலும்,  எம்பெருமானாரைப் போலவே இந்த மணவாளமாமுனிகளும்  உள்ளமையினால் ஸ்ரீமாந் ராமானுஜனே இவர் என்று ஜனங்கள் பரஸ்பரம் புகழ்ந்து பேசிக்கொண்டனர்.
 
திருவரங்கன் திருமுற்றத்து அடியார்களெல்லாம்
‘இவர் எம்பெருமானாரே மீண்டும் அவதாரம்!” என்று அறுதியிட்டு இவர் திருவடிகளிலே ஆஸ்ரயிக்கின்றனர்.
 
பரமபதநபோநிவாஸ பணிபுங்கரங்கபதோர்பவநமிதம் ஹிதாயஜகதோ பவதாதிகதம்
 
பரமபதத்தில் எழுந்தருளியிரா நின்ற திருவநந்தாழ்வானே! இந்த அழகிய மணவாளனுடைய வாஸஸ்தானமான இத்திருவரங்கமானது தேவரீரால் லோகக்ஷேமத்தின் பொருட்டு அடையப்பட்டது
 
என்றபடி  ‘வன்பெருவானமுய்ய, அமரருய்ய, மண்ணுய்ய, மண்ணுலகில் மனிசருய்ய, துன்பமிகு துயரகல, அயர்வொன்றிலாச் சுகம் வளர, அகமகிழுந்தொண்டர் வாழ அன்போடு தென்திசை நோக்கிப் பள்ளிகொள்ளும்
(பெ. திரு.1-10) பெரியபெருமாளே ஜகத்ரக்ஷணார்த்தமாக இங்கேயெழுந்தருளினாற் போலாயிற்று இவர் இங்கே எழுந்தருளினது என்று மிகவும் ஆதரித்துக் கொண்டு அடியார்கள் கூட்டம் கூட்டமாக இவரது திருவடிகளில் ஆஸ்ரயித்த வண்ணமிருக்கின்றனர்.
 
ஸ்ரீரங்கம் எம்பெருமானார் எழுந்தருளியிருந்தபோது எப்படியிருந்ததோ அந்த நிலைக்குத் திரும்பி வைணவ சமுத்திரமாய் காட்சியளித்தது. 
 
மாமுனிகளின் புகழ் அகிலமெங்கும் பரவியது.
 
ஸ்ரீரங்கஸ்ரீயின் மங்களதீபமாய் மாமுனிகள் பிரகாசித்துக் கொண்டிருந்தார்.  தம்மை அண்டியோர் அனைவரையும் தமது பரம கிருபையாலும், சௌலப்யத்தாலும் திருத்தி திருமகள் கேள்வனுக்காக்கி,  அவர்களது குற்றம் தள்ளி குணம் பெருக்கி பரம அனுகூல்யராய் பகவத் விஷயங்களை பிரஸ்தாபித்து அவர்களனைவரும் ஆச்சார்ய அபிமானத்தினாலே கட்டுண்டு இருந்தனர்.
 
இவரது புகழ் வளர வளர, ஸ்ரீரங்கத்திலுள்ள சில முக்ய கைங்கர்யபரர்களின் பொறாமையும் வளர்ந்தது
 
அப்போதெல்லாம் அரங்கன் அர்ச்சாவதாரத்வத்தின் மெய்ப்பாட்டினை – பேசாமலிருக்கும் ஸ்வபாவத்தை உதறித்தள்ளி விட்டு எவரெல்லாம் இவரை விரோதியாக பாவித்தனரோ அவர்களது ஸ்வப்நத்தில் சிலரிடத்தில் கனிவாகவும், சிலரிடத்தில் கடுமையாகவும், சிலரிடத்தில் ஆணையிட்டும், ”நாமே இப்படி ஆச்சார்யரூபேண அவதரித்தோம்.  ஸம்ஸாரபந்தத்தினை விடுவிக்கும் நாமே மாமுனிகள் என்று அறியக்கடவீர்” என்று அதிசேஷனை முன்னிறுத்தி,  மாமுனிகளிடத்து செய்த அபசாரத்திற்கு ஈடு செய்யும் வகையில் அவர்களை இவரது திருவடியை ஆஸ்ரயிக்குமாறு திருத்திப் பணி கொண்டான்.
 
புநஸ்ஸ்வப்நாபதேசேந தேசே தேசே நிரங்குச:
அயமர்ச்சாவதாரத்வ ஸமாதிமவதீரயத்
அத்யமர்த்யந் ததேதஸ்ய தத்வமாத்யந்திகம் ஹிதம்
அஸங்குசிதமாசக்யௌ புஜங்கசயந: புமாந்

(அரவணையில் துயிலும் பரமபுருஷன் மறுபடியும் ஒவ்வோரிடத்திலும், ஸ்வப்நம் என்கின்ற வ்யாஜ்யத்தினால், தன்னைத் தடுப்பார் யாருமில்லாமையாலே – அர்ச்சாவதாரத்வத்தின் மெய்ப்பாட்டினை – பேசாமலிருக்கு ஸ்வபாவத்தினை – உதறி தள்ளிவிட்டு, தேவர்களையும் விஞ்சிய – இம்மாமுனிகளுடைய உண்மைத் தன்மையும் மோக்ஷத்திற்கு உபாயமாகயிருக்கும் தன்மையையும் விவரமாக அருளிச் செய்தான்.)
                                                      
எம்பெருமானார், பெரியநம்பிகள், கூரத்தாழ்வான், பிள்ளைலோகாச்சாரியார், ஸ்வாமி தேசிகர் போன்றோர்கள் எல்லோரும் எவ்வளவு கஷ்டபட்டிருக்கின்றனர்? அப்போதெல்லாம் கனவில் தோன்றி நாலூரானாயோ, அல்லது அந்த கொடுமையான சோழ மன்னனையோ, உலுக்கானையோ மாற்றமுடியாதா என்ன? அப்போதெல்லாம் மௌனியாயிருந்த, பரியாத அவன், இப்போது மட்டும் ஏன் இப்படி…….?

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: