Srirangapankajam

November 5, 2008

PESUM ARANGAN-141

Filed under: PESUM ARANGAN — Tags: — srirangapankajam @ 11:43 pm

Chapter-141
 4.11.2008

 

இல்வாழ்க்கையில் சங்கடங்கள் என்று பெரிதாய் ஏதும் அனுபவியாதவர் மணவாள மாமுனிகள்.

இருப்பினும் கைங்கர்யத்திற்கு இடையூறாக இந்த
இல்லற பந்தம் இருக்கக்கூடாது என்ற ஒரே
காரணத்தினால் ஸந்யாஸம் மேற்கொண்டவர் மணவாள மாமுனிகள். 
மாமுனிகளின் கைங்கர்யருசி
அவரை ஸந்யாஸம் மேற்கொள்ள வைத்தது.
 
மாமுனிகள் ஸந்யாஸம் எங்கு, எப்போது பெற்றார் என்பது குறித்து சில வேறுபாடான கருத்துக்கள் நிலவுகின்றது. 
 
மாமுனிகளுக்கு நம்மாழ்வாரின் மேல் அலாதி பிரியம்.  அரங்கனிடம் கேட்கின்றார் தாம் ஸந்யாஸம்
மேற்கொண்டு சடகோப ஜீயர் என்று திருநாமம் பெற்றுக் கொள்வதற்கு!. 
 
அரங்கன் மறுக்கின்றான்!

உம்முடைய இயற்பெயரான மணவாளன் என்ற திருநாமத்தையே தாங்கள் வைத்துக் கொள்ள
வேண்டும் என்று கூறுகின்றான். 
 
இதில் அரங்கனது சுயநலமும் உள்ளது. 
 
அரங்கன் எத்தனையோ கோலங்களில் விளையாடியுள்ளான்.  ஒன்றேயொன்று பாக்கி.  அது சிஷ்யன் என்ற கோலம்.
மாமுனிகளுக்கு தாமே சிஷ்யனாக விரும்பினான். 
 
வைணவத்தில் பெரியோர்கள் பொதுவாக தம் குழந்தைகளுக்கு தம் ஆச்சார்யனின் பெயரைச் சூட்டி, நினைத்தலும், அந்த நினைவில் மகிழ்தலும் வழக்கம். 
 
அந்த வகையில் அரங்கனுக்கு இயற்கையிலேயே அழகிய மணவாளன் என்று பெயர் அமைந்தது, அவனுடைய சிஷ்ய பாவத்திற்கு உகந்ததாய் ஆனது. 
 
எனவே மாமுனிகளுக்கு அனுமதி மறுத்து அவரது இயற்பெயரையே சூட்டிக் கொள்ளுமாறு பணித்தான்.
தனக்கு அழகிய மணவாளன் என்ற திருநாமம் தமக்கு சிஷ்ய பாவத்தினை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைந்தது கண்டு பெருமிதம் அவனுக்கு!

 
ஸந்யாஸத்தினை ஆழ்வார் திருநகரியின் ஜீயராயிருந்த சடகோப ஜீயரை ஆஸ்ரயித்து அவரிடமிருந்து
பெறுகின்றார்.
 
ஸந்யாசியான மாமுனிகள் அரங்கனை மங்களாஸாஸனம் செய்கின்றார்.
 
மங்களம் ரங்கதுர்யாய நம:  பந்நகசாயிநே
மங்களம் ஸஹ்யஜாமத்யே ஸாந்நித்யக்ருத சேதஸே
(ஸ்ரீரங்கநாதனுக்கு மங்களமுண்டாகவேணும்.  அரவணை மேல் துயிலும் பெருமாளை அடி பணிகின்றேன்.
உபயகாவேரி மத்தியில் நித்யஸாநித்யம் பண்ணியிருப்பதில் நிலைத்த திருவுள்ளமுடைய பெருமாளுக்கு மங்களமுண்டாகுக!)
 
என்று மங்களாஸாஸனம் பண்ணியவாறு எழுந்தருளுகின்றார். 
 
நம்பெருமாள் பூரித்து,  ”உமக்குப் பல்லவராயன் மடத்தினை ப்ரஸாதிக்கின்றோம். உம் சரீரம் உள்ளவரையில் எம்பெருமானாரைப் போலே இங்கே இரும்!’ என்று சாதித்தருளுகின்றார்
 
 நம்பெருமாள் உத்தமநம்பிகள் உள்ளிட்ட அனைத்து பரிகரர்கள் அனைவரையும் அழைக்கின்றார். 
 
மாமுனிகளுக்கு தீர்த்த ப்ரஸாதம், பரிவட்டம், ஸ்ரீசடகோபம் அனைத்தையும் பிரஸாதித்து அருளி ” நம்முடைய அழகிய மணவாளனை மடத்திலே விட்டு வாருங்கோள்”  என்று உத்திரவிடுகின்றார்.

அவர்கள் அனைவரும் மாமுனிகளை வணங்கி போற்றி மடத்திலே எழுந்தருளப்பண்ணி,  ”அடியார்கள் வாழ, அரங்கநகர் வாழ,………. மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்” என்று ஸேவித்து தம்மிடம் மீண்டனர்.
 

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: