Srirangapankajam

November 2, 2008

PESUM ARANGAN-140

Filed under: PESUM ARANGAN — Tags: , — srirangapankajam @ 9:27 pm
Chapter-140
 2.11.2008
 
இந்த தொடரின் முதல் வரியே மணவாள மாமுனிகளை சம்பந்தபடுத்தி அரங்கனுக்குக் கூறும் கட்டியத்துடன் ஆரம்பித்தேன். 
 
தற்சமயம் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் தொடங்கி மணவாள மாமுனிகள் குறித்துத் தொடர் வரும் இந்த நேரத்தில் மணவாள மாமுனிகளின் திருநட்சத்திரம் இன்று,  ஸர்வதாரி வருடம், ஐப்பசி (மூலம்) 17ம் தேதி, (2.11.2008) கொண்டாடப்படுவதை நினைக்கும்போது மனம் பூரிக்கின்றது.  மாமுனிகளின் திருவடிகளில் மானசீகமாக வீழ்ந்து கிடக்கின்றது.   இது நாம் அனைவரும் செய்த பரம பாக்யம். 
 
நாம் அனைவரும் மாமுனிகளை நினைந்து போற்றி தொடங்குவோம்.
 
ஸ்ரீசைலேசதயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம்
ஸ்ரீசடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம்
ஸ்ரீமத்யதீந்த்ரப்ரவணம் ஸ்ரீலோகாசார்யமுநிம் பஜே!
 
குருநாதனெங்கண் மணவாளயோகி குணக்கடலைப்
பலநாளு மண்டிப்பருகி களித்திந்தப் பாரினுள்ளே
உலகாரியன் முனிமேகமிந்நாளென்னுள்ளங் குளிர
நலமான சீர்மை மழைநாளும் பொழிந்ததிந்நிலத்தே
!
 
அரங்கத்தரவணைப் பள்ளியானை, படுத்தபைந்நாகப்பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு பாடுகின்றார் மாமுனிகள்.
சேரபாண்டியன் சிம்மாசனத்திலே மலர்மடந்தை, மண்மடந்தையோடு எழுந்தருளியிருக்கும் நம்பெருமாளை ஸேவிக்கின்றார். 
 
மதிநுதல் கஸ்தூரி திருநாமத்தையும், முறுவல் பூத்த பவளவாயையும்,
கவித்த கதிராயிரம் இரவி கலந்தெறித்தலுக்கு ஒத்த நீண்முடியையும்,  கையினார் கரிசங்கன வாழி எழிலையும்,  அஞ்சேலென்ற கையையும், 
திரு அரை பூத்தாற் போலிருக்கின்ற அந்திபோல் நிறத்தாடையையும், ஆஸனபத்மத்திலே அழுத்தின செம்பங்கயத்தாள்களையும், ”கோல மணியாரமும் முத்துத் தாமமும், முடிவில்லதோரெழிலையும் கண்வாங்க மாட்டாதே, 
 
‘திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும்,  வைத்தஞ்சலென்ற கையும், கவித்த முடியும், முகமும், முறுவலும், ஆஸநபத்மத்திலே அழுத்திய திருவடிகளுமாய் நிற்கிற நிலையே நமக்கு தஞ்சம்! (முமுக்ஷூப்படி
த்வயம்-21)
 
என்று நம்பெருமாளின் திருவடித்தாமரைகளில் தாம் ஆத்மசமர்ப்பணம் செய்வித்து, அசையாது, அநிமிஷராயநுபவித்து (ஒரு நிமிடம் கூட வீணாக்காது ஒவ்வொரு நிமிடமும் அநுபவித்து) உகக்கின்றார்.
தீர்த்தப்பிரஸாதம், ஸ்ரீசடகோபம், திருமாலை ப்ரஸாதிக்கப் பெற்று, தென்னரங்கர் சீரருளுக்கிலக்காகினார். 
 
நம்பெருமாள் திருப்பவளச் செவ்வாயினால், ‘நம் உடையவரைப் போலே நீரும் நம் வீட்டில் கார்யத்தினையும், தர்சந ரஹஸ்யங்களையும் ஆராய்ந்து கொண்டு உம்முடைய சரீராவாஸானத்தளவும் இங்கே இரும்” என்று அருளுகின்றார்.  இவரும் ‘மஹாப்ரஸாதம்” என்று அங்கீகரிக்கின்றார்.
 
அண்ணன் திருமாளிகையில் அன்று அமுது செய்து, பூர்வர்கள் எழுந்தருளியிருந்த திருமாளிகைதோறும் சென்று ஸேவித்து பிள்ளைலோகாச்சாரியாரின் திருமாளிகையடைந்து வாசலிலே தெண்டன் சமர்ப்பித்து, அஞ்ஜலிஹஸ்தராய்
 
வாழியுலகாசிரியன் வாழியவன் மண்ணுலகும்
வாழிமுடும்பையென்னும் மாநகரம் – வாழி
மனஞ்சூழ்ந்த பேரின்மல்கு மிகு நல்லார்
இனஞ்சூழ்ந்திருக்குமிருப்பு
 
என்று உலகாசிரியனைப் போற்றி, அந்த வீட்டு மண்ணை ‘ரஹஸ்யம் விளைந்த மண்ணன்றோ! என்று உகக்கின்றார்.
நம்பெருமாளின் நியமனப்படியே ரஹஸ்ய ப்ரபந்தங்களையெல்லாம் திருக்கண் சார்த்தி அவற்றை ஜீர்ணோத்தாரணம் (புதுப்பித்து) பண்ணியருளி,
 
பண்டு பலவாரியரும் பாருகோருய்யப்
   பரிவுடனே  செய்தருளும் பல்கலைகள் தம்மை,
கண்டதெல்லாமெழுதியவை கற்றிருந்தும், பிறர்க்குக்
   காதலுடன் கற்பித்தும் போக்கினேன் போது
                                                                (ஆர்த்தி பிரபந்தம் 28)
 
என்கின்றபடியே அவற்றின் பொருளை உபந்யாஸம் செய்து ப்ரகாசப்பித்துக் கொண்டும், நம்பெருமாளை சதா ஸேவித்தும், த்யானித்தும், அவர் திருவடிவாரத்திலே வாழ்ந்து வருகின்றார்.
Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: