Srirangapankajam

November 1, 2008

PESUM ARANGAN-139

Filed under: PESUM ARANGAN — Tags: — srirangapankajam @ 11:25 am
Chapter-139
 31.10.2008
 
மணவாள மாமுனிகள் கங்கையினும் புனிதமான, வைகுண்டத்தில் ஓடும் விரஜாநதிக்கு சமமான காவிரியில் நீராடி தம்முடைய நித்ய அனுஷ்டானங்களையெல்லாம் முடித்த போது, திருவரங்கத்திலிருந்த ஸ்ரீவைஷ்ணவர்களில் அநேகம் பேர் மாமுனிகளை அழைத்து போக திரண்டிருந்தனர்.
 
பூமிபிராட்டி வெகுநாட்கள் கழித்து நடக்கின்ற இக்கோலாகல வைபவத்தினால் குளிர்ந்து மகிழ்ந்திருந்தாள்.  
 
குளிர்ந்த பூமியின் முகம் கண்ட வருணன் தானும் மகிழ்ந்து தன் பங்கிற்கு பூமாரி பெய்து கொண்டிருந்தான். 
கரை சேர்ந்த மாமுனிகள் திருவரங்கபெருநகரையும், அணியரங்கன் திருமுற்றத்தார்களையும் நோக்கி நமஸ்கரிக்கின்றார்.  மண்ணுய்ய வந்த மணவாள மாமுனிகளைக் கண்ட ஜனசமுத்திரம் ஆர்ப்பரித்தது.
இருபுறமும் ஜனத்திரளோடு நடுவே வரும் ரதம் போன்று,  அரங்கம்வாழ் அந்தணர்கள் நடுவே தேஜஸ்வியாய் மாமுனிகள் வண்டினமுரலுஞ்சோலையாம் திருவரங்கம் எழிலினை அனுபவித்த வண்ணம்,
 
மாடமாளிகைசூழ் திருவீதியும் மன்னுசேர் திருவிக்கிரமன் வீதியும்
ஆடல்மாறன் அகளங்கன் வீதியும், ஆலிநாடனமர்ந்துறை வீதியும்
கூடல் வாழ் குலசேகரன் வீதியும் குலவுராச மகேந்திரன் வீதியும்
தேடுதன்மவன்மாவின் வீதியும், தென்னரங்கர் திருவாவரணமே
 
என்கிறபடி அரங்கனுக்கு மாலை போன்ற ஆவரணங்களாகிய திருவீதிகளையும், திருமதிள்களையும், திருக்கோபுரங்களையும் கண்டு களித்து தம்முடைய ஆச்சார்யரரான திருவாய்மொழிப்பிள்ளைக்கு நெருக்கமான கோட்டூரிலண்ணர் என்பவரது திருமாளிகையினை அடைகின்றார். 
 
கோட்டூரிலண்ணர் இவரது அவதார விசேஷத்தினையறிந்து மிகவே ஆதுரத்துடன், இவருடன் கூட அப்போது கோயில் நிர்வாகத்தினை நடத்திக் கொண்டிருக்கும் திருமாலை தந்த பெருமாள் பட்டர் என்னும் பராசரபட்டர் வம்சத்தவர் வீட்டிற்கு அழைத்துப் போகின்றார்.  பட்டரும் வெளியில் வந்து மாமுனிகளை நமஸ்கரித்து, உபசரித்து ”தேவரீரை ஸேவிக்கப் பெற்றோமே” என மகிழ்கின்றார். 
 
திருவாய்மொழியிலிருந்து ‘துவளில் மாமணிமாடம்” எனத் தொடங்கும் பாசுரத்தினை பொருளாகக் கொண்டு பட்டரின் திருமாளிகையில் உபந்யாஸிக்கின்றார். 
 
பட்டர் ”இவர் முப்பத்தாறாயிரப் பெருக்கர்”: என்ற முடிவுக்கு வருகின்றார். 
 
பெருமாளை மங்களாசாஸனம் பண்ணியருள  மாமுனிகள் பட்டரோடு கோவிலுக்குப் புறப்படுகின்றார்.
 
முதலில்,
 
இவ்வுலகந்தன்னில் எதிராசர் கொண்டருளும்
எவ்வுருவும் யான் சென்றிறைஞ்சினக்கால் – அவ்வுருவம்
எல்லாமினிதேலு மெழிலரங்கத்திருப்புப்போல்
நில்லாதென்னெஞ்சு நிறைந்து
 
என்று இராமானுஜரைப் போற்றி,  பொன்னரங்கமென்னில்,
 
 மயலேபெருகமிராமனுசன் மன்னுமா மலர்த்தானயாகிய
 
இராமானுஜரினை, ‘ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே”  என்று அனுசந்தித்து,  இராமானுஜரை முதலில் போற்றிப் பரவுகின்றார்.
 
பூமகள் கோன் தென்னரங்கன் பூங்கழற்குப் பாதுகமாய் தாம் மகிழுஞ் நம்மாழ்வாரை ஸேவிக்கின்றார். 
 
அப்படியே பிரதட்சிணமாக ஸ்ரீரங்கராஜ மஹிஷி ஸ்ரீரங்கநாச்சியாரின் திருவடி தொழுது, மணல்வெளி வழியே வந்து ஸ்ரீபலிபீடத்தினருகே தண்டன் சமர்ப்பித்து உள்ளில் திருச்சுற்றையும் பிரதட்சிணமாக வந்து வேதஸ்ருங்கமாம் ப்ரணவகார விமானத்தினையும், சேனை முதல்வரையும் ஸேவித்தருளி, பூர்வாச்சார்யார்கள் அனைவரும் மண்டி கிடந்த அழகிய மணவாளன் திருமண்டபத்தில்,
 
”ஆழி வண்ண! நின் அடியிணையடைந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே!” 
 
என்று ஆனந்த கண்ணீர் மல்க,  பெரிய திருவடியினை ஸேவித்து,  துவாரபாலகரை கைதொழுது உள்புகுந்து ‘பழுதே பலபகலும் போயின” என்று
இது நாள் வரை அரங்கனை ஸேவிக்காது இழந்த நாட்களுக்கு வருந்தி அரங்கத்தரவணைப் பள்ளியான் கண் வளர்தருளுகின்ற சேர்த்தியை, அந்த அரங்க சோதியை,   இந்த அரவுக்கரசுக் கண்களால் தீண்டி மகிழ்ந்தது.
 
Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: