Srirangapankajam

October 30, 2008

PESUM ARANGAN-137

Filed under: PESUM ARANGAN — Tags: , , , — srirangapankajam @ 11:37 pm
Chapter-137
 29.10.2008
 
 
அழகிய மணவாளன் தம் தந்தையிடமிருந்து அருளிச்செயல்களையும், ரஹஸ்யங்களையும் சிரத்தையாகக் கற்றுத் தேர்ந்தார். 
 
உரிய காலத்தில் சாஸ்திரோக்தமாக அழகிய மணவாளனுக்குத் திருமணமும் செய்விக்கப்பட்டது. 
 
அழகிய மணவாளனுக்கு ஒரு திருமகனும் பிறந்தார்.  அவருக்கு  ”எம் ஐயன் இராமானுஜன்” என்று எம்பெருமானாரின் திருநாமம் சூட்டி மகிழ்ந்தார். 
 
சிலகாலஞ்சென்றதும் அழகிய மணவாளனின் தந்தை பரமபதித்தார். 
 
அழகிய மணவாளன் தம் தந்தை பரமபதித்தவுடன், சிக்கில் கிடாரத்திலிருந்து கிளம்பி ஆழ்வார் திருநகரியினையடைகின்றார். அங்கு ஸ்ரீவைஷ்ணவ தர்ஸந ப்ரவர்த்தகராயிருந்த திருமலையாழ்வார் என்கிற திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகளிலே ஆஸ்ரயிக்கின்றார்.
 
 
திருவாய்மொழிப்பிள்ளை தமது சீடரான அழகிய மணவாளனை மிகவும் உகந்து திவ்யபிரபந்தங்களின் தாத்பர்யங்களையும்,  ஸம்ஸாரத்தையறுப்பதான எல்லா அருளிச்செயல்களின் தாத்பர்யங்களையும் உபதேசிக்கின்றார். 
 
அழகிய மணவாளன் இவ்வருளிச்செயல்களில் ஆழ்கின்றார். 
 
உடையவரின் திருவடிகளை இறுக்கப் பற்றுகின்றார். 
 
உடையவருக்கு தமது ஆச்சார்யனின் பரிபூர்ண கிருபையினாலும், தயவினாலும் ஒரு தனிக்கோவில் ஸ்தாபித்து, இராமானுஜ சதுர்வேதி மங்கலம் என்கிற திருவீதிகளையும் உண்டாக்கி, யதிராஜ விம்சதி என்னும் அற்புத பாமாலையையும் சமர்ப்பிக்கின்றார் அழகிய மணவாளன். 
 
அழகிய மணவாளனின் இராமானுஜ பக்தியை மெச்சிய திருவாய்மொழிப்பிள்ளை ஒரு அற்புத அரிய இராமானுஜரின் திருமேனியை அவருக்கு அருளுகின்றார்.  இந்த இராமானுஜ திருமேனி மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் கட்டளைப்படி தாமிரபரணி நீரை காய்ச்சிய போது முதலில் அவதரித்த திருமேனியாகும்.  ஆழ்வார் திருநகரியிலிருந்து நம்மாழ்வாரின் திருமேனி, உலுக்கான் படையெடுப்பின் போது, வலசையாக எழுந்தருளியபோது, இதனை அங்கிருந்த திருப்புளிஆழ்வார் மரத்தினடியில் புதைத்து வைத்து பின்னர் திருவாய்மொழிப் பிள்ளையால் கண்டெடுக்கப்பட்டதாகும்.
 
அளவிலா ஆனந்தம் அழகிய மணவாளனுக்கு!.  எம்பெருமானாரையே பரதெய்வமாக நித்யமாய் ஆழ்வாருக்கும், எம்பெருமானாருக்கும் கைங்கர்யமே புருஷார்த்தமாகக் கொண்டு திருநகரியிலே கைங்கர்யஸ்ரீயுடன் வாழ்ந்தருளினார்.
 
உத்தமனே!  உலகாரியனே!  மற்றொப்பாரையில்லா
வித்தகனே!  நல்ல வேதியனே!  தண்முடும்பை மன்னா!
சுத்த நன்ஞானியர் நற்றுணையே!  சுத்த சத்துவனே!
எத்தனை காலமிருந்து உழல்வேன் இவ்வுடம்பைக் கொண்டே?
 
என்று பிள்ளைலோகாச்சாரியாரிடத்து திருமேனியோட்டை அறுதியிட்டு, திருவாய்மொழிப்பிள்ளை, தமக்கு விமோசனத்தினை வேண்டுகின்றார். 
 
அந்த சமயம் திருவாய்மொழிப்பிள்ளை தம் அந்திம காலம் நெருங்குவதையறிந்து அழகிய மணவாளனை அழைக்கின்றார். ”காலம் கலிகாலமாகையாலே
ஆழ்வார்களின் திவ்யஸூக்திகளான அருளிச்செயலிலே ருசியும், விசுவாசமும் கொண்டு இத்தை வளர்த்துப்போவார் யார்?”
என்று மிகவும்
க்லேசமுடையவராய் கேட்கின்றார். 
 
அழகிய மணவாளனுக்கு உள்ளுணர்வு உணர்த்துகின்றது.  தம்மை மனதில் வைத்துதான் பிள்ளைக் கேட்கின்றார் என்று. 
 
திருவடி பணிந்து ‘அடியேன் அப்படியே செய்கிறேன்” என்கின்றார் குரு உகக்கும் வண்ணம். 
 
பிள்ளை ”கேவலம் வார்த்தை போராது” என்கிறார். 
 
குருவின் திருவடிகளைப் பிடித்து சபதம் செய்கின்றார். 
 
குருவும் இந்த தீவிரமான சிந்தையைதானே எதிர்பார்த்திருந்தார்!  அந்த தாக்கத்தினை ஏற்படுத்திய மகிழ்வோடு அழகிய மணவாளனுக்குச் சில கட்டளையிடுகின்றார்.
 
-” ஸ்ரீபாஷ்யத்தினைக் கற்று ஒரு முறை அனைவருக்கும் காலக்ஷேபம் செய்யவும்.
 
ஸம்ஸ்கிருத சாஸ்திரங்களிலே பல காலும் கண் வையாமல், நமக்கும் எம்பெருமானாருக்கும் ப்ரியமான திருவாய்மொழி முதலான அருளிச்செயல்களிலே அநவரதமும் பரிசீலனைச் செய்து, அனைவருக்கும் அதன் உட்பொருளை பிரஸாதிக்கவும். 
 
பூர்வர்களைப் போல  மங்களாசாஸனபரராய் ஸ்ரீரங்கத்தில் நித்யவாஸம் செய்து, கைங்கர்யங்களை செய்து வரவும்.”
என்று நியமிக்கின்றார். 
 
அங்கு கூடியிருந்தோர் அனைவரிடத்தும் இவரிடத்துக் காட்டிக் கொடுத்தருளி, ”இவரை சாதாரணமாக நினைக்காதீர்கள்.  இவர் ஒரு அவதார விசேஷம்.  ஆதரித்து போருங்கள்” என்று அருளுகின்றார்.
 
வைணவ தர்ஸனத்திற்கு ஒரு அவதார புருஷர் கிடைத்ததையெண்ணி பெருமிதத்துடன், நிறைவுடனே எந்த கவலையுமின்றி, ‘மாகவைகுந்தம்
காண்பதற்கு என் மனமேகமென்னும்
” என்கிறபடியே தம் ஆச்சார்யன் பிள்ளைலோகாச்சாரியாரின் திருவடிகளைக் கண்மூடி தியானிக்கின்றார்.

ஆச்சார்யனின் திருவடி ஸம்பந்தத்தினால் விஷ்ணுதூதர்களுடன் விமானத்தில் மண்ணுலகை துறந்து விண்ணுலகிற்கு பயணிக்கின்றது அவரது சூக்கும சரீரம்!
Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: