Srirangapankajam

October 20, 2008

PESUM ARANGAN-131

Filed under: PESUM ARANGAN — Tags: — srirangapankajam @ 11:28 pm
Chapter-131
18.10.2008
 
அழகிய மணவாளனுக்கும், புதிதாய் வந்த அர்ச்சை மூர்த்திக்கும் தனித்தனியே திருமஞ்சனம் நடக்கின்றது.  பல நாட்கள் கடந்து நடந்த இத்திருமஞ்சனத்திற்கும், அரங்கன் யார்?  என்ற புதிருக்கு விடை காணவும் ஏராளமான வைணவர்களும், அரசரும், கோபண்ண
உடையாரும், பொதுமக்களும் அரங்கன் திருமுற்றத்தில் நிறைந்திருந்தனர்.
 
பல வருடங்கள் கழித்து, அரங்கனடியார்களால் பொலிவுறுகின்றது ஸ்ரீரங்கம்.  மீண்டும் தன்னடியார்களைக் கண்ட அரங்கனது திருமுகம் பூரிக்கின்றது. 

அவனது திருமேனி இப்பூரிப்பினால் மாற்றமடைந்து,
சுகந்த மணம் கமழ்ந்தது. 
முதலில் அரங்கனாய் இதுகாறும் மக்கள் நினைத்திருந்த அந்த அர்ச்சையின் தீர்த்த பிரஸாதம் வண்ணானுக்கு அருளப்பட்டது.  அரங்கனின் திருமேனி சுவையறிந்து பண்பட்ட அவனது முகத்தில் எந்த சலனமும் காணப்படவில்லை.  ‘இதுவன்று அழகிய மணவாளன்”  என்றுரைத்தான்.
 

அடுத்ததாக அரங்கனின் ஈரவாடை தீர்த்தம் வண்ணானுக்கு அருளப்பட்டது.

பல வருடங்களாய் சுவைத்து,  நடுவில் 60 வருடங்களாய் இத்தெய்வீகச் சுவை விடுபட்டு, ஏங்கியிருந்த அவன் நாவு இந்த அமிர்தத்தையுணர்ந்தது!
நாவின் உணர்வு நரம்புகள், உடலில் மின்சாரம் போன்று பாய்ந்தது!
உணர்வு பிழம்பானான் வண்ணான்.  ஆர்ப்பரித்தான்! 
 
‘இவரே நம் பெருமாள்! இவரே நம்பெருமாள்” என்று கதறியழுதான்!.   கண்களில் கண்ணீர் பெருக்க மூர்ச்சையானான்.   தெளிந்தான்!  மீண்டும் அழுதான்!  மீண்டும் மயக்கமடைந்தான்!
 

கொடவரும் உணர்வுகள் கொந்தளிக்க, ‘ரங்கா! ரங்கா!’ என்று கதறியழுதார். 
 
அழகிய மணவாளன் வண்ணானால் ‘நம்பெருமாள்” ஆனான்!. 
 
நம்பெருமாள் என்ற பெயர் – அந்த வண்ணான் வைத்தப் பெயர்தான்,  இன்றும்,  அவனுக்கும் நமக்கும் உகப்பாகயிருக்கின்றது!.  அவன் நம்மோடு கலந்தவன்! 
நம்மோடு நம்பக்கம் இருப்பவன்!.   நம்மை உகப்பவன்!.   நம்மை காப்பவன்!.  நம் நலம் விரும்புபவன்!.    நம் வீட்டுப் பிள்ளை!.   நம் குழந்தை!.    நம் ஜீவன்!. நம்மை ஆள்பவன்!.
 
இனியறிந்தேன் ஈசற்கும் நான்முகுற்கும் தெய்வம்
இனியறிந்தேன் எம்பெருமான்!  உன்னை – இனியறிந்தேன்
காரணன் நீ  கற்றவை நீ கற்பவை நீ – நற்கிரிசை
நாரணன் நீ நன்கறிந்தேன் நான்.
                                                                 -நான்முகன் திருவந்தாதி-96-
 
 
அரங்கன், தனியொருவராக தம்மை ஆராதித்து பாதுகாத்த வ்ருத்தரான அந்த கொடவரை அருகில் அழைக்கின்றான்.  அவரை ‘திருத்தாழ்வாரை தாஸர்” என்று அருளப்பாடிட்டு உகக்கின்றான்.
 
வண்ணானுக்குஈரங்கொல்லி” என்று அருளப்பாடிட்டு அழைத்து, மன்னன் மூலமாக பஹூமானங்கள் பல செய்து கௌரவிக்கின்றான்!
 
அரையருக்கு ‘இசையறியும் பெருமாள் கூட்டத்தார்” என்று அருளப்பாடிட்டு கௌரவிக்கின்றான்
 
ஸ்ரீரங்கத்திலிருந்து சுல்தான் தளபதியை கண்ணனூருக்கு அழைத்துச் சென்று, ஸ்ரீரங்கத்திற்கு மேலும் சேதம்வராமல் தம் கற்பைக் கொடுத்துக் காப்பாற்றிய தாஸியினை அழைக்கின்றார்.  போர உகந்தருளி ”உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்று திருவாய் மலர்கின்றார்.

தாஸி ஒரு வரம் கேட்கின்றாள்.  ‘தம்முடைய வர்க்கத்தார்களில் யாரேனும் திருநாடு
அலங்கரிப்பாராகில் (இறப்பார் ஆகில்) நம் கோவில் திருமடைப்பள்ளியிலிருந்து
தாங்களை தகனம் செய்வதற்கு நெருப்பும்,  திருக்கொட்டாரத்திலிருந்து வாய்க்கரிசியும்,
அரங்கனது திருமாலையும், எந்த காலத்திலும் சாதிக்க வேண்டும்”
என்று தனக்காக ஏதும் வேண்டாது,
தன்னலம் கருதாது தம் வர்க்கத்தார்களின் நலத்திற்காக அரங்கனிடத்து யாசித்தாள். 
 

அரங்கன் உளம் குளிர்ந்து ‘அப்படியே ஆகட்டும்” என்று ஆசீர்வதிக்கின்றான். 

(இந்த வரத்தால் 1953ம் ஆண்டு தாஸிகள் ஒழிப்புச் சட்டம் அமுல்படுத்திய நாள் வரை,  திருவரங்கத்து தாஸிகள் யாரும் பரமபதிப்பார்களாகில், இந்த மரியாதைகள் செவ்வனே  நடைபெற்று வந்தது)
 
அரங்கன் அன்றிரவு சோழ மன்னனின் கனவில் தோன்றி, நடந்த வ்ருத்தாந்தங்களை சாதித்தருளினான். 
 
(ஸ்ரீரங்கம் கோவிலின் சம்பிரதாயங்கள் பல பலரது தியாகங்கள், அதனது பிரதிபயனாக அரங்கனோ அல்லது நமது பூர்வாச்சார்யர்களாலோ ஏற்படுத்தப்பட்ட பழக்கங்களைக் கொண்டதாகும்.  இங்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தருணத்தில் கௌரவம் உண்டு.  இந்த கௌரவத்தில் சமுதாய பிரிவுகளோ, வகுப்புணர்வுகளோ, ஏற்றத்தாழ்வுகளோ இல்லை.  சாதிப்பாகுப்பாடு இல்லை என்பது இக்கோவில்
சம்பிரதாயங்கள் நன்கறிந்தவர்களுக்கு விளங்கும்.)
Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: