Srirangapankajam

October 13, 2008

PESUM ARANGAN-127

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 7:38 pm

திருமலையின் அடர்ந்த காடுகளின் ஊடே இருந்த திருவரங்கனை ஒரு நாள் இரண்டு இருளர்கள் தரிசித்தனர். அரங்கனை ஆராதனை செய்து கொண்டிருந்த வயோதிகக் கொடவர், இவர்கள் இருவரிடமும் நடந்த விவரங்களைக் கூறி, உதவி செய்யுமாறு கூறுகிறார். அந்த இரு இருளர்களும் திருமலை அரசனான சந்த்ரகிரி மன்னனிடத்துச் செய்தியை தெரிவித்தனர். மன்னன் ஆச்சர்யம் அடைந்தான். உடனே ஒரு சிறிய குழுவை அனுப்பி, திருமலையின் குகையில் இருந்த அரங்கனையும் அந்தக் கொடவரையும் மீட்டு, திருமலையின் கோயிலின் முன்பண்டபத்தில் அரங்கனை எழுந்தருளச் செய்து, அந்தக் கொடவருக்குத் தக்க மருத்துவ உதவிகளும் வேறு பல சன்மானங்களும் கொடுத்து கௌரவித்து, அரங்கனை அதீத ப்ரீதியுடன் ஆராதனை செய்து வந்தான் (அரங்கன் எழுந்தருளியிருந்த மண்டபம் இன்றும் திருமலையில் “ரங்க மண்டபம்” என்ற பெயருடன் கம்பீரமாக உள்ளதைக் காணலாம். கோயிலின் உள்ளே நுழைந்தவுடன், த்வஜஸ்தம்பத்தின் இடது பக்கம் உள்ளது). இதற்கிடையே திருவரங்கத்தில் அரங்கன் வெளியேறிய ஒரு சில வருடங்களுக்குள், சிங்கபிரானுடைய உதவி கொண்டு, அரங்கனைக் காணாமையால், வேறு ஓர் அர்ச்சை (விக்ரஹம்) நம்பெருமாளுக்குப் பதிலாக ஒரு வைணவனால் எழுந்தருளப் பண்ணப்பட்டது. பாண்டிய மண்டலம் முழுவதும் மொகலாயர்களால் கைக்கொள்ளப்பட்டது. தொண்டை மண்டலத்தில் ஹரிஹர ராயர் (இவர் விஜயநகரத்தினை தோற்றுவித்த ஹரிஹரர், புக்கர் ஆகிய இருவரில் புக்கரின் மூத்த மைந்தர் ஆவார்). இவர் இரண்டாம் ஹரிஹர ராயர் எனப் பெயர் பெற்றுத் திகழ்ந்தார். இவரது சிறந்த தோழனாக செஞ்சியினை ஆண்ட கோபண்ண உடையார் விளங்கினார். ஒருநாள் செஞ்சியிலிருந்து திருமலைக்கு கோபண்ணர் திருவேங்கடமுடையானைத் தரிசிக்கும் பொருட்டு சென்றார். அங்கு முன் மண்டபத்தில் கம்பீரமாக நின்ற அரங்கனைக் கண்டார். தன்னைக் கண்டவரை தனது அழகால் மட்டுமே வீழ்த்தும் அரங்கன், இவரை விட்டுவைக்கவா போகிறான்? இவரும் அவனது காதல் வலையில் சிக்கினார்.

Blog at WordPress.com.

%d bloggers like this: