Srirangapankajam

October 11, 2008

PESUM ARANGAN-126

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 6:49 pm
ஸ்ரீரங்கம் கோவிலில் கைங்கர்யம் பண்ணிவந்த கொடவர்
எனப்படும் வம்சத்தவர்களின் குடும்பம்தான் எஞ்சியிருந்து
நம்பெருமாளை திருநாராயணபுரத்திலிருந்து திருப்பதியின்
மலைகளின் ஊடே எழுந்தருளப் பண்ணிவந்தார்கள்.
அப்போது நம்பெருமாளைக் கைப்பற்ற ஒரு முகமதியர்கள்
படையும் அங்கே திரிந்து கொண்டிருந்ததைக் கண்ட
கொடவர்கள் திகிலடைந்தனர்.
அந்த கொடவர்களில் பெரியவர், நம்பெருமாளை
நிறைய பச்சிலைகளினால் மூடினார்.   அதுபோன்று
உபயநாச்சிமார்களையும் பச்சிலைகளால் மூடி
தம்மையும் விக்ரஹங்களையும் அங்கு வளர்ந்துள்ள கொடி,
செடிகளால் சுற்றிக்கொண்டு, திருமலையிலே பாம்பின்
படம் போன்று நிமிர்ந்து காட்சியளிக்கும் ஒரு சரிவிலே
மலையுச்சியிலிருந்து மைத்துனனும், அவரது
குமாரனும் இந்த கொடவரை நம்பெருமாள்,
உபயநாச்சிமாரோடு கீழே இறக்குகின்றனர்.
அலர்மேல் மங்காபுரத்திற்கு வடக்குப்புறம் ஒரு
சரிவிலே அரங்கனும் உபயநாச்சிமாரும், கொடவரை
தம் திருமேனியோடு பந்தனம் செய்து கொண்டே
ஒரு நல்ல சுனையின் அருகே இறங்குகின்றனர்.
பெரியவரின் திருமேனி முழுதும் ஒரே சிறாய்ப்பு! இரத்தக்கறை!
அரங்கனின் திருமேனியில் எந்த பங்கமும் வராமல்
அனைத்து உபத்ரவங்களையும் தாம் தாங்கிக் கொண்டு,
சுனையின் அருகில் ஒரு குகையில் எழுந்தருளப்
பண்ணுகின்றார். (ஸ்ரீரங்கம் கோவிலின் கோவிலொழுகு
இந்த சம்பவத்தினை சுரதாணி என்கின்ற
துலக்கநாச்சியாரின் வைபவத்தோடு சம்பந்தபடுத்தி
கூறுகின்றது.)
நம்பெருமாளை பத்திரமாக எழுந்தருளப்பண்ணிய பிறகு
கொடவரின் மைத்துனரும், அவரது மகனும் நம்பெருமாளை
இறக்கிய அந்த காத்திரமான கொடியினைப் பற்றிக்
கொண்டு தாங்களும் பள்ளத்தாக்கில் இறங்கி
அரங்கனை இனிதே ஏகாந்தமாய் ஆராதனைச்
செய்து வரலானார்கள்.
வருடங்கள் சில இந்தவிடத்திலேயே கழிந்தன.
பெரியவரான கொடவரும் அவரது மைத்துனரும்
பரமபதிக்கின்றனர்.
எஞ்சியுள்ள கொடவரின் மகன் மாத்திரம் அங்கேயுள்ள
மூலிகை மற்றும் கிழங்குவகைகளை புசித்து, அரங்கனுக்கும்
சமர்பித்து, அரங்கனைக் காப்பாற்றி வந்தார். ஆடைகள்
இல்லாததினால், கமுகுப் பட்டையினை கௌபீனமாக தரித்து,
தேக்கு மடலாலே ஆச்சாதநமும் (மேல் வஸ்திரம்) தரித்து,
யஞ்ஞோபவீதத்திற்கு பதிலாக கொத்தான் கொடியை
யஞ்ஞோபவீதம் போன்று தரித்து, ஜடாமுடியுடன்
வயோதிக தோற்றமுடையவராய் அரங்கனே கதியென்று
எவருமின்றி தனி ஒருவராக நம்பெருமாளிடத்து அதீத
ப்ரீதியுடையவராய் எப்படியேனும் அரங்கனைத் திருவரங்கத்தில்
மீண்டும் எழுந்தருளப்பண்ணவேண்டும்

என்ற வைராக்கியத்துடன், கைங்கர்யங்கள் செய்து கொண்டிருந்தார்.

Blog at WordPress.com.

%d bloggers like this: