Srirangapankajam

October 9, 2008

PESUM ARANGAN-125

Filed under: PESUM ARANGAN — Tags: , — srirangapankajam @ 8:03 am
Chapter-125
06.10.2008
 
திருக்கணாம்பியிலிருந்து அரங்கனுடன் ஆழ்வாரையும் எழுந்தருளவிடாமல் செய்தது ஆழ்வார் கூடவே வந்த கோவிலின் ஸ்தலத்தார், ஸ்தாநத்தார் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள்தாம். 
 
ஆழ்வார்  அங்கிருந்து புறப்பட்ட சமயம் எல்லா திசைகளிலும் கள்வர் அல்லது உலுக்கானின் ஆட்கள் நிறைந்திருந்தனர். 
 
ஆழ்வார் அங்கிருந்து தென்மேற்காய் பயணிக்கின்றார்.  வெகுதூரம் பயணித்தப்பின் முந்திரிப்பு என்னும் மலையாள தேசத்திலுள்ள ஒரு மலைப்பிரதேசத்தினை அடைகின்றனர்.
 
ஒரு கள்வர்கள் கூட்டத்தினை கண்ட கோவிலார்கள் இனி தப்பிக்கமுடியாது என்றறிந்து, ஆழ்வாரை ஒரு திருப்பெட்டகத்திலே எழுந்தருளப்பண்ணி,  மலையுச்சியில் ஒரு மரணப்பள்ளத்தாக்கினைத் தேர்ந்தெடுத்து அந்த பெட்டகத்தினைக் கயிற்றில் கட்டி மெதுவாக பள்ளத்தாக்கினில் ஆழ்வாரை பெட்டகத்தோடு இறக்கி, கயிற்றையும் அறுத்து விட்டெறிந்து விடுகின்றனர். 
 
எதிர்பட்ட கள்வர்கள் கூட்டம் இவர்களது சொற்ப உடைமைகளையும் பறித்து அடித்து விரட்டுகின்றது.  ஆளுக்கொரு மூலையாக சிதறுகின்றனர்.
 
 
இவர்களில் தோழப்பர் என்பவர் ஆழ்வார் திருவடிகளில் அத்யந்த அபிமானியிருந்தவர்,  ஆழ்வாரின் நிலைக் கண்டு நெஞ்சு பொறுக்கமாட்டாதவராய், மதுரை செல்கின்றார். 
 
பாண்டியநாட்டின் ஒரு பகுதியினை அரசாண்டுவந்த திருமலையாழ்வாரிடத்து நடந்தவைகளை எடுத்துரைக்கின்றார்.  திருமலையாழ்வார், திருவாங்கோட்டூர் என்னும், அந்த பகுதியின் மலையாளத்து அரசனுக்கு ஒரு ஸ்ரீமுகம் கொடுத்தனுப்புகின்றார்.  கூடவே சில அந்தரங்க கைங்கர்யபரர்களையும் துணைக்கு அனுப்புகின்றார். 
 
தோழப்பர் திருவாங்கோட்டூர் அரசனை சந்தித்து திருமலையாழ்வாரின் ஸ்ரீமுகத்தினைக் கொடுக்கின்றார்.  அந்த அரசன் உடனடியாக இந்த ஸ்ரீமுகத்தினை சிரஸ்ஸில் தரித்து, கண்களில் ஓற்றி, சிறந்த மலையேறும் பயிற்சி பெற்ற வீரர்களையும், தேர்ந்த படைவீரர்கள் சிலரையும், வழிச்செலவிற்கு தனத்தையும்,  சங்கிலிகள், ஊஞ்சல் பலகைகள் போன்றவைகளையும் இவருடன் கூட கொடுத்தனுப்புகின்றார். 
 
நம்மாழ்வாரை இறக்கிய பள்ளத்தாக்கிற்கு அனைவரும் விரைகின்றனர்.   சரிவைக்கண்ட அனைவரின்  தலையும் கிறுகிறுத்தது.  மரணபயம் உண்டாயிற்று.  ‘சரிவிலேயிழிவாரார்?” என்று வினவ அனைவரும் பின்வாங்கினர்.  தோழப்பரே முன்வருகின்றார்.

அப்போது அந்த கோவிலின் ஸ்தலத்தார் இவரின் தீரத்தினைக் கண்டு, ‘உமக்கு ஆழ்வார்  சந்நிதியிலே வகுளாபரண பட்டரோடு ஒத்த ஸ்வதந்திரத்தினையும், திருமஞ்சன காலத்திலே ஆழ்வாருக்கு சஹஸ்ரதாரை திருமஞ்சனமும், திருவந்திகாப்பும் ஆனவுடன், ஆழ்வார் திருமுடியிலே சாத்தியிருக்கும் துளசி, பூ தொடரினை,  “அருளப்பாடு  ஆழ்வார் தோழப்பர்” என்று அருளப்பாடிட்டு உமக்கு நித்யமாக சாதிக்கின்றோம்” என்று உறுதி கூறுகின்றனர். 
 
தோழப்பர் உகப்புடனே ஏற்று தாம் ஒரு எழுதுகோலும், பனைஓலைகளையும் கைவசம் தயார் செய்து கொண்டு,  சங்கிலியால் இணைக்கப்பட்ட ஊஞ்சலின் சங்கலிகளை இறுக்கப்பற்றிக் கொண்டு, தன்னுயிர் பற்றிய கவலை மறந்து, ஆழ்வாரை நினைந்து உருகி, உருகி, கண்ணீர் பெருக்கி, மெதுவே பள்ளத்தாக்கில் இறங்குகின்றார். 
 
பள்ளத்தாக்கில் இலைச்சருகுகளும் தூசியும் பெட்டகத்தினை அறவே மறைத்துவிட்டிருந்தது.  ஆழ்வாரை நினைத்து கவலையினால் கண்ணீர் பெருக்கி நிற்க, ஒரு க்ஷேமகாரிபட்சி (கருடன்..?) அந்த பெட்டகம் உள்ள இடத்தின் மேலே அமர்ந்து சப்தம் செய்கின்றது.  இவர் அந்த இடத்தினை நெருங்கவும் அது விலகுகின்றது.
திருப்பெட்டகத்தினைத் திறந்து ஆழ்வாரை கண்குளிர தரிசிக்கின்றார்.  நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் எழுதி, ஓலைப்படுத்தி, பெட்டகத்தோடு வைத்து ஊஞ்சல் பலகையில் பெட்டகத்தினை இறுக்கக் கட்டி சங்கிலியை ஆட்டுகின்றார்.  சமிக்ஞை புரிந்து மேலேயிருந்தவர்கள் பெட்டகத்தினை பத்திரமாக மீட்கின்றனர். 
 
மீண்டும் ஊஞ்சல் கீழேயிறக்கப்படுகின்றது.  முன்புபோல் தாம் ஊஞ்சலின் மீது அவர் ஏறி சங்கிலியை கெட்டியாகப் பற்றிக்கொள்ள ஊஞ்சல் மேலே ஏறுகின்றது.  நடுவழியில் ஒரு தடங்கல் ஏற்பட்டு ஊஞ்சல் தடுமாறுகின்றது.  நிலைகுலைந்து கீழே விழுந்த தோழப்பர், ஆழ்வார் திருவடிகளையடைகின்றார். 
 
கீதையில் கண்ணன் கூறுகின்றார், ”குருவியானது தான் கூடு கட்டிய மரம் வெட்டப்படும் போது, கூட்டின் மீது பற்று நீங்கிப் பறந்து போகும்.  அதுபோல் பக்தனும், இந்த உயிர் நீங்கும் போது, உடல் நீக்கிப் பற்றில்லாமல் உயிர் நீக்க வேண்டும்”
நம்மாழ்வாருக்காக உயிர்தியாகம் செய்கின்றார் பற்றறுத்த தோழப்பர்.

ஆழ்வாரை திருப்பல்லக்கில் எழுந்தருளப் பண்ணுவித்து அனைத்து பரிகரத்துடன் திருக்கணாம்பி திரும்ப அடைந்து, ஐந்து நாள் ஸம்ப்ரோக்ஷணம் செய்து, நித்யபடி திருவாராதனம் முதலான விசேஷங்களை நடத்தி, தோழப்பரின் வாரிசுகளுக்கு ஏற்கனவே தோழப்பருக்கு உறுதியளித்தப்படி ஸ்வதந்திரமும், அருளப்பாடும் வழங்கி, ஆழ்வார் திருவடிகளிலே அதிப்ரவணராய், அபிமானிகளாய் வாழ்ந்து கொண்டிருந்தனர் ஆழ்வார் திருநகரி கோவிலார்கள். 

 
அங்கு வாழ்ந்து வந்த கள்ளர்களும் மனம் திருந்தி தாம் கொள்ளையடித்தவற்றையெல்லாம் ஆழ்வாருக்கு திரும்ப தந்து ஆழ்வாருக்கு பாதுகாப்பாகயிருந்தனர். 
 
ஆழ்வார் எழுந்தருளியிருந்த கோவில் மரத்தில் ஒரு கருட பட்சியும் கூடு கட்டி ஆழ்வாரை தினசரி மங்களாசாஸனம் செய்தபடியிருந்தது.

 
Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: