Srirangapankajam

October 5, 2008

PESUM ARANGAN-123

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 10:53 pm
Chapter-123
02.10.2008
 
திருமாலிருஞ்சோலை வனாந்திரத்திலே ஏகாந்தமாய்,
ஒரு வருடம் எழுந்தருளியிருந்த நம்பெருமாளின் பாதுகாப்பினைக் கருதி அங்கிருந்து
‘கொல்லிக்காவலன் கூடல்நாயகன் கோழிக்கோன் குலசேகரன்’ என்று அதுவே நிரூபணமாம்படியான ஸ்ரீகுலசேகர ஆழ்வார் ஆட்சி செய்தருளிய சேர நாட்டின் பல பகுதிகளிலும் ஆங்காங்கு விரும்பி எழுந்தருளி,
கோழிக்கோடு எனும் ஊரினை அடைகின்றார்.   
 
இதுநாள் வரை உபயநாச்சிமாருடன் அலைந்த நம்பெருமாளின் திருவுள்ளம் இனி உகக்கும்படியாக ஆழ்வார் திருநகரியிலிருந்து, கலாப பயத்தினால் எழுந்தருளப்பண்ணிக் கொண்டுவந்த நம்மாழ்வாரும் பலவிடங்கள் அலைந்து திரிந்து, நம்பெருமாளை நேரில் அருகில் தம்முடைய அர்ச்சை திருமேனியின் மூலம் தரிசிக்கின்றார். 
 
நம்பெருமாள் போர உகந்தருளி தமது வட்ட மணையிலேயே அவரை அமரச்செய்து,   தாம்  ஆழ்வாருடனே சேவை சாதித்தருளுகின்றார்.  
நம்மாழ்வார் மட்டுமின்றி பல திவ்யதேசத்து பெருமான்களும் இந்த கோழிக்கோட்டில் (தற்போது
இது கண்ணனூர் என்ற அழைக்கப்படுகின்றது) எழுந்தருளியிருந்ததாக குருபரம்பரை நூல்கள் தெரிவிக்கின்றன.  கலாபத்தில் இதுவே மிகுந்த பாதுகாப்பான இடமாயிருந்திருக்க வேண்டும்!.
 
எத்தனை வைணவர்கள் இந்த காலகட்டத்தில் எவ்வளவு கஷ்டபட்டிருக்கின்றார்கள்! 
 
எவ்வளவு வைணவர்கள் உயிர் துறந்திருக்கக்கூடும்! 
 
தங்களுடைய மனைவி, மக்கள், உடைமைகளை இழந்திருக்கக்கூடும்! 
 
எவ்வளவு துன்பங்களை சகித்திருக்கக்கூடும்!. 
 
எந்த சக்தி இவ்வளவு தடைகளையும் மீறி இவர்களை நடமாடச் செய்திருக்கும்? 
 
தம் உயிர் போயினும் சரி தங்கள் பெருமாள் காக்கப்பட வேண்டும் என்ற உந்துதல் எது தந்தது?…

சந்தேகமேயில்லாமல் அவர்களது ஆன்ம பலமும், அரங்கனது அருகாமையும்தான்! 
 
இந்த ஆன்ம பலம் அவர்கள்தம் ஆச்சார்யர்கள் தாம் வாழ்ந்து காட்டி அவர்களுக்கு ஊட்டியது!
 

 

கிருஷ்ணர் கூறுகின்றார், ‘எப்படி விதையிலிருந்து செடிகள் உண்டாகி, பூக்கள் உண்டாகி, மீண்டும் விதைகளைக் கொடுத்துவிட்டு செடி அழிந்து போகின்றதோ, அதுபோல் ஞானியானவன் தன்னுடலும் தோன்றி வளர்ந்து அழிவதைக் காண்பான்.  கவலைப்பட மாட்டான்.  உடலின் மீதுள்ள பந்தத்திலிருந்து விடுபட்டவனாவான்” என்கின்றார். 
 
நமது பூர்வாச்சார்யர்கள் எல்லோரும் இப்படித்தான் இருந்திருக்கின்றனர்.  தமது சீடர்களையும் பக்குவப்படுத்தியிருந்தனர்.  தானே வயோதிகமுற்று இறந்தாலும் சரி,   வழியில் கள்வர்களாலோ, பகைவர்களாலோ இறப்பு நேரிட்டாலும் சரி அவர்கள் கவலைப்படவில்லை. 
 
அவர்களது தற்போதைய கவலையெல்லாம் அரங்கனுக்கும்,  மற்றைய அர்ச்சைகளுக்கும் எந்தவித தீங்கும் ஏற்படக்கூடாது என்பதுதான்.
 

Blog at WordPress.com.

%d bloggers like this: