Srirangapankajam

October 1, 2008

PESUM ARANGAN-121

Filed under: PESUM ARANGAN — Tags: , — srirangapankajam @ 12:20 am
Chapter-121
29.09.2008
 
பிள்ளைலோகாச்சாரியரும்,  திருமலையாழ்வாரின் தாயாருக்கும் செய்ய வேண்டிய சரம கைங்கர்யங்கள் அனைத்தையும் நிறைவாகச் செய்தனர் பிள்ளைலோகாச்சாரியாரின் சீடர்கள்.  
 
நம்பெருமாள் எழுந்தருளியிருக்கும் பாண்டிய மண்டலத்திலும் சுல்தான்கள் படையெடுப்புக்கள் அடிக்கடி நிகழ்வதும்,  மக்கள் பீதியில் அவ்வப்போது ஆழ்வதுமாக நிகழ்ந்து கொண்டிருந்தது. 
 
ஜ்யோதிஷ்குடியில் நம்பெருமாள் இனியும் எழுந்தருளியிருப்பது ஆபத்தாகும் என்றுணர்ந்த அடியார்கள்,  நம்பெருமாளையும், ஸ்ரீதேவி, பூதேவியையும் எழுந்தருளப்பண்ணி,  அடர்ந்த வனம் போல் விளங்கும், எளிதில் யாரும் நெருங்கமுடியாத,  சிலம்பாறு பாயும் தென்திருமாலிருஞ்சோலையில், ஒரு ஏகாந்தமான இடத்தில் எழுந்தருளப்பண்ணுகின்றனர்.  அங்கேயே ஒரு கிணறையும் நம்பெருமாளின் கைங்கர்யத்திற்காகத் தோண்டுகின்றனர். 
அந்த கிணறு அழகிய மணவாளன் கிணறு என்று பெயரிடப்பெற்று நம்பெருமாளின் கைங்கர்யத்திற்கு உகந்ததாயிற்று. (இந்த கிணற்றினுள் நம்பெருமாளை மறைத்து வைத்ததாகவும் ஒரு கூற்று உண்டு!)  கூரத்தாழ்வான் சிலகாலம் ஸ்ரீரங்கத்தினைப் பிரிந்து கைங்கர்யம் செய்து வந்த திருமாலிருஞ்சோலையில்,  நம்பெருமாளும் வனவாச வாஞ்சையை உடையவராய், வன கிரி பிரஸ்தமான அந்த பிரதேசத்தில் அனைத்து பரிசரகர்களுடன் நித்ய பூஜைகள் கண்டருளி வனாந்திரத்தில் எழுந்தருளுகின்றார்.
 
கி.பி.1323ம ஆண்டின் பிற்பகுதியில், உலுக்கான் தாம் கொள்ளையடித்த பெருஞ்செல்வத்துடன், டில்லி சென்றடைந்து தம்முடைய பெயரை முகம்மது-பின்-துக்ளக் என்று மாற்றம் செய்து கொண்டான்.  மதுரையினை தலைமையிடமாகக் கொண்டு அங்கே தென் மண்டலம் முழுமைக்கும் தம்முடைய பிரதிநிதியாக ஜலாலுதீன் ஹாஸன்ஷா என்பவரை நியமிக்கின்றான்.   இவன் சுமார் 15 ஆண்டுகள் முகம்மது-பின்-துக்ளக்கிற்கு நம்பிக்கைக்குரியவராக செயல்பட்டு, பின்னர் தன்னை சுதந்திர மன்னனாக பிரகடனப்படுத்திக் கொண்டான். 
கி.பி 1340ல் தம்முடைய அரசாங்க அதிகாரிகளில் ஒருவரான அலாவுதீன் உடால்ஜி என்பவரால் கொல்லப்பட்டான்.  அலாவுதீன் உடால்ஜி ஒரு சூதினால் கொல்லப்பட்டான்.  இவ்வாறு ஒருவரையொருவர் கொன்றும், சிலர் அப்போது பரவிய கொடிய ஒரு நோயால் இறந்தும்,  ஒரு கட்டத்தில் ஒரு குதிரைப்படை வீரனான ஜீயாதுதீன் தமகானிஷா என்பவன் தம்மை மதுரை சுல்தானாக பிரகடனப்படுத்திக்கொண்டான்.   இவனது தளபதிகளில் ஒருவர் கண்ணனூரில் (சமயபுரத்தில்) கோட்டை எழுப்பி சோழமண்டலத்தினை கவனித்து வருகின்றார்.  அவருடன் ஸ்ரீரங்கத்திலிருந்து போன தாஸியும், தம் நம்பிக்கைக்குரிய ஒரு சில ஒற்றர்களுடன் இவர்களை அங்கேயிருந்து ஒழித்துக்கட்டுவதற்கு சமயம் பார்த்துக் காத்திருக்கின்றாள். இவர்கள் படையெடுப்பிற்கு முன்னர் 1323ம் ஆண்டு வரை மூன்றாம் வீர வல்லாளன் என்னும் ஹொய்சாள மன்னர் கண்ணனூரினை தலைநகராகக் கொண்டு சில சோழமண்டல பகுதிகளுக்கு மன்னராயிருந்துள்ளான்.  இவன் மீண்டும் ஒரு சிறு படைத் திரட்டி கண்ணனூரில், ஏறத்தாழ தம்முடைய 80வது வயதில், மனத்தில் வலிமையுடனும், நெஞ்சுரத்துடனும் கடுமையாகப் போரிடுகின்றான்.  போரில் வீரவல்லாளன் தோற்கடிக்கப்படுகின்றான்.   அவனது ஏராளமானச் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு,  இந்த வீரவல்லாளனைக் கொன்று, அவனது உடலை வைக்கோல் கொண்டு பதபடுத்தி, மதுரை அரண்மனைச் சுவற்றில் தொங்கவிட்டு காட்சிப் பொருளாய் வைக்கின்றான்.  அந்த சமயம் இபின்படுடா என்னும் உலக வரலாற்று ஆசிரியர் இந்த சம்பவத்தினை தமது நாட்குறிப்பில் குறிப்பிடுகின்றார்.  இவனை ஒரு மனித உருக்கொண்ட பேய் என்றும், ஈவு இரக்கமற்ற, கொள்கைப் பிடிப்பற்ற கொடுங்கோலன்! துரோகி! என்று குறிப்பிடுகின்றார்.  தாம்,  வீர வல்லாளன் மதுரை அரண்மனைச் சுவற்றில்,  பிணமாய் தொங்கியதைப் பார்த்ததாகவும் கூறுகின்றார்.  இந்த பேய் குணமுடைய இரக்கமற்றத் துரோகி, 1342ல் மதுரையில் கடுமையாக பரவியிருந்த ஒரு தொற்று நோய் தாக்கி,   இறக்கின்றான்.
Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: