Srirangapankajam

September 27, 2008

PESUM ARANGAN-119

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 11:36 pm
Chapter-119
25.09.2008
 
இராமானுஜரும் ஒரு குழந்தையைப் போலவேதான் செல்லப்பிள்ளையை பாவித்திருக்கிறார்.  டில்லி வரை
இந்த குழந்தையைத் தேடிச் சென்றிருக்கின்றார்.   டில்லியில் அந்த துலுக்க இளவரசி தம் மேல் கொண்ட அன்பைக் கண்டு அவளோடு இந்த செல்லப்பிள்ளை விளையாடியிருக்கின்றான்.  ”செல்லப்பிள்ளையே வாராய்!”
என்று தாயன்போடு இராமனுஜர்,   சேயைப் பிரிந்த தாயைப் போல,   தழுதழுக்கக் கூப்பிட தளிர் நடையிட்டு அவர்தம் மடிமேல் குழந்தைப் போன்றே அமர்ந்துள்ளான் இக்கள்ளன்!
 
 
மேல் கோட்டையினை விட்டு பிரிய முடியாமல் பிரிகின்றார்  இராமானுஜர்.    அங்கே உள்ளவர்களிடம் “செல்லப்பி்ள்ளையைக் கிணற்றடியில் விளையாடும் பிள்ளையைப் போன்று வெகுஜாக்கிரதையாக கவனித்துக் கொள்ளுங்கள்” என்று கண்ணீ்ர் மல்க கேட்டுக்கொள்கின்றார்.
 
பி்ள்ளைலோகாச்சாரியார்  இந்த மனோபாவத்துடன்தான்  நம்பெருமாளை விட்டு சற்றும் பிரியாமலிருந்தார்.  ஆனால் பிரியக்கூடிய சந்தர்ப்பம் நெருங்கியது.
 
தம்முடைய 120 வயதில் (கி.பி.1325) அலுப்பில்லாது அலைந்த பிள்ளைலோகாச்சாரியார்,  தமக்கு அந்திம காலம் நெருங்குவதை உணர்ந்தார். 
 
தம்முடைய சீடர்கள் அனைவரையும் அழைக்கின்றார்.  தாம் திருநாட்டுக்கு எழுந்தருள்வது பற்றிக் கூறி, கூரகுலோத்துமதாஸர் என்ற சீடரிடத்து ரஹஸ்யங்களையும், அர்த்தங்களையும் திருமலையாழ்வாரிடத்து பிரஸாதித்தருளும்படியும்,  திருக்கண்ணங்குடிப் பிள்ளையிடத்தும், திருப்புட்குழி ஜீயரிடத்தும், திருவாய்மொழி பிரஸாதித்தருளும்படியும்,
நாலூர் பிள்ளையிடத்து மூவாயிரம் வ்யாக்யானம் பிரஸாதித்தருளும்படியும்,  விளாஞ்சோலை பிள்ளையிடத்து ஸப்தகாதை முதலான சில அர்த்த விசேஷங்களை பிரஸாதித்தருளும்படியும் பணித்து, அனைவரும் சேர்ந்து திருவாய்மொழிப்பிள்ளையை தர்சந ப்ரவரத்தகராகும்படி,  அதற்கேற்ப தகுதி பெற,   உறுதுணையாகயிருக்க வேண்டும் என்று நியமித்தருளுகின்றார்.
 
தாயைப்போல பரிவுடன் தாம் போற்றிய அரங்கனின் திருவடிகளைப் பணிந்து கன்னங்களில் நீர் வழிந்தோட அரங்கனிடத்து விடைபெறுகின்றார்,  தமக்கென எதுவும் நாடாத,  வேண்டாத, அரங்கனுக்கென்றே அரும்பிறவியெடுத்த அந்த அண்ணல்!
 
இவரது அன்பினால் கட்டுண்ட அரங்கனே கலங்குகிறான் ஒரு க்ஷணநேரம்.   பிள்ளைலோகாச்சாரியாரை கருணையோடு நோக்குகின்றார்.  தம் சோதி வாய் திறந்து அருளுகின்றார்.  ‘உமக்கும்,  உம்முடைய தொடர்பு பெற்றவர்களுக்கும் மோக்ஷம் தந்தோம்” என்றருளுகின்றார்.  எதற்கும் ஆசைப்படாத பிள்ளைலோகாச்சாரியார் இப்போது ஆசைப்படுகின்றார்.  அந்த க்ஷண நேரத்திற்குள்,  தம் இன்னுயிர் பிரிவதற்குள் அருகில் ஊரும் எறும்பு முதலானவற்றை ஸ்பரிசிக்கின்றார்.  கண்ணுக்கெட்டிய தூரம் வரை தமக்கு அடைக்கலம் தந்த அந்த மலையும், குட்டையும், மரங்களும், செடிகளும், ஊர்வனவும், பறப்பனவும் அனைத்தும் மோக்ஷம் பெறட்டும் என்ற உயரிய எண்ணத்தில் எல்லாவற்றையும் கருணைப்பொங்கப் பார்க்கின்றார்.  அருகில் வளர்ந்துள்ள புற்களைக் கூட விடாது தம் மாரோடு அணைக்கின்றார்.    தம் ஆச்சார்யரான  வடக்குத் திருவீதிப்பிள்ளையின்  திருவடிகளைத் தியானித்தவாறே திருநாட்டிற்கு எழுந்தருளுகின்றார்.
 
பிள்ளைலோகாச்சாரியாரின் பிரிவினால் கதறுகின்றனர் அங்கிருந்தோர்.  அங்கே நம்பெருமாளின் மாலை, பரிவட்டம் முதலான மரியாதைகள் அவரது சரம திருமேனிக்குச் செய்யப்பட்டது.  ஜ்யோதிஷ்குடியிலேயே அவருக்கு ஸம்ஸ்காரம் நடந்து பெருக்க திருவத்யயனமும் செய்தார்கள்.   பத்தாம் நாள் திருமலையாழ்வாரின் திருத்தாயாரும் இவரது பிரிவு தாங்கப்பெறாமையினால் பரமபதித்தாள்.

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: