Srirangapankajam

September 23, 2008

PESUM ARANGAN-118

Filed under: PESUM ARANGAN — Tags: , , , — srirangapankajam @ 10:49 am
Chapter-118
22.09.2008
 
 ஆனைமலைத் தொடரின் கிழக்கு அடிவாரத்திலுள்ள ஏகாந்தமான ஒருவிடத்தில் அரங்கன்,  ஸ்ரீரங்கத்திலுள்ள அகண்ட திருமண்டபங்களையெல்லாம் மறந்து, ஒரு சிறு குகையினுள் தங்குகின்றான்.  அப்போது மதுரையிலுள்ள திருமலை ஆழ்வார் (திருவாய்மொழிப்பிள்ளையும் இவரே!)  என்னும் ஒரு ஆச்சார்யபுருஷரின் திருத்தாயார் (கி.பி.1323 முதல் கி.பி.1326 வரை ஹிமாச்சலம் முதல் சேதுக்கரை வரை இந்தியா முழுதும் முகமதியர்கள்தான் எங்கும் ஆண்டு வந்தனர்.  உலுக்கான் பின்னர் முகமது-பின்-துக்ளக் என்று பெயர் மாற்றம் பெற்று அழைக்கப்படலானார்.  மதுரையினை மீட்க பாண்டியர்கள் ஒரு பெரிய போரை சுந்திரபாண்டியனின் தலைமையில் நடத்துகின்றனர். சுந்தர பாண்டியனின் பெருமதிப்புக்குரியவராக விளங்கியவர் மதுரையையடுத்த கொந்தகையில் அவதரித்த திருமலை ஆழ்வார் என்கிற ஒரு பெரிய வைணவ ஆச்சார்ய பெருந்தகையாவார்.  சுந்தர பாண்டியனின் மகன் பராக்ரம பாண்டியன் பத்து வயதே நிரம்பிய பாலகன்.  சுந்தரபாண்டியன் இந்த ஆச்சார்ய பெருந்தகையினை அடிபணிந்து ஒருக்கால் தாம் நடக்கவிருக்கும் போரில் இறந்தால்,  தம் மகன் பராக்ரம பாண்டியன் அரியணைக்குரிய தகுதி பெறும் வரை, இவரையே ஆட்சி நடத்துமாறு பணிக்கின்றார்.  போரில் எழுச்சி கொண்ட பாண்டியர்கள் வென்றனர்.  ஆனால் போரை முன்னின்று நடத்தி வெற்றி பெறக் காரணமாயிருந்த சுந்தர பாண்டியன் உயிரிழந்தான்.  திருமலையாழ்வார் செம்பொன் செங்கோல் ஏந்தி, அரியணையில் வீற்றிருந்து, ராஜ்ய கார்யங்களை திறம்பட எட்டு ஆண்டுகள் நிர்வஹித்து வந்தார். இன்றும் திருமலை ஆழ்வாரை செங்கோலோடு வீற்றிருந்த திருக்கோலத்தில் கொந்தகையில் ஸ்ரீதெய்வநாயகப்பெருமாள் சன்னிதியில் நாம் தரிசிக்கலாம்.  திருமலை ஆழ்வார் ஓராண்வழி ஆச்சார்யர்களில் ராஜ்யத்தினை ஆண்ட பெருமைப்படைத்தவர்) அரங்கனிருக்குமிடமறிந்து அங்கு தன்னால் இயன்ற கைங்கர்யங்களை செய்து வந்தாள்.       
 
ஒருநாள் பிள்ளைலோகாச்சாரியார் திருமலையாழ்வாரின் திருத்தாயாரை அழைத்து “நம்பெருமாளுக்கு வியர்க்கும் விசிறி கொண்டு விசிறி விடு” என்கிறார். 
 
திருமலையாழ்வாரின் தாயார் விசிறி கொண்டு அருகில் சென்ற போது, அரங்கனின் அருள்முகத்தில் அரும்பரும்பாய் வியர்வைத்துளிகள்.  அதிர்ந்தாள் அவ்வம்மை. 
 
”ஸ்வாமி! திவ்யமான திருமேனியும் புழுங்குமோ?” என்று வினவுகின்றார்.  பிள்ளைலோகாச்சாரியார், ஆழ்வார் திருமகளாம் ஆண்டாளின் நாச்சியார் திருமொழியை (12-6) ”வேர்த்து பசித்து வயிறசைந்து” எனும் பாசுரத்தினை மேற்கோள் காட்டி,
 
(கார்த்தண் முகிலும் கருவிளையும்
  காயா மலரும் கமலப் பூவும்
  ஈர்த்திடுகின்றன என்னை வந்திட்
  டிருடீகேசன் பக்கல் போகேயென்று
  வேர்தது பசித்து வயிறசைந்து
  வேண்டடிசில் உண்ணும் போது – ஈதென்று
  பார்த்திருந்து நெடுநோக்குக் கொள்ளும்
  பத்த விலோசநத் துய்த்திடுமின். )
 
 
 ‘அம்மையே புழுங்கும் காண் – ஆண்டாளும் ஓதினாள் காண்”  என்றருளுகின்றார்.  திருமலையாழ்வாரின் திருத்தாயார் சற்றே விசிறியவுடன் நம்பெருமாளின் வியர்வையும் அடங்கியது.  இதனைக் கண்ட அவ்வம்மையார் பரவசமடைந்து பலமணி நேரம் தன்னிலை மறந்தாள்.
 
 
இதில் சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.  ஈன்ற தாய்க்குத்தான் தம் குழந்தைக்கு எப்போது பசிக்கும்? எப்போது அழும்? போன்ற குழந்தையின் உணர்வுகள் புரியும்.  சிசுவிற்கு பசிக்குமாயின் ஈன்றவளின் முலைக் கனக்கும்.   நம்பெருமாளுக்கு வியர்க்கப்போவதை முன்கூட்டியே அறிகின்றாரே பிள்ளைலோகாச்சாரியார். எவ்வளவு தாயன்பு அரங்கனிடத்து அவருக்கிருந்திருக்க வேண்டும்!?
 
அருளாளப்பெருமானுக்கு அமுது படைக்கும் நேரம்.  அருளாளன் அன்பு கொண்ட கச்சிநம்பியை ஊட்டி விடச்சொல்கிறான். திருகச்சிநம்பி ஊட்டி விடுகின்றார்.  பாத்திரம் காலியானது.  வெளியிலுள்ள பலரும் நம்பவில்லை.  நம்பி உண்டிருப்பாரோ என்று சந்தேகிக்கின்றனர்.   நம்பி மனம் புழுங்குகின்றார்.  அருளாளன் அன்றிரவு ஒரு பெரிய தணிகனின் கனவில் தோன்றி ஆயிரம் தடா அக்கராவடிசில் அமுது செய்ய பணிக்கின்றான்.  1000 வட்டிலில் சமர்ப்பிக்கின்றான் தணிகன்.  திரை நீக்கிப் பார்த்தால் பாத்திரங்கள் அனைத்தும் காலி.  அனைத்தையும் ஒருவரே சாப்பிடமுடியுமா இந்த உலகுண்ட வாயனைத் தவிர!.  வாயடைத்து நின்றனர் ஏசியவர்கள்.  மீண்டும் திரையிட ஆணையிடுகிறான் அருளாளன்.  இம்முறை திரை நீக்கிப் பார்த்தால் அனைத்து வட்டில்களிலும் அக்காரவடிசில்.  ஏதுதான் முடியாது அவன் நினைத்தால்?
 
அன்புதான் பக்தி! இந்த அன்புக்குத்தான் அந்த பரமன் அடிமை!  இந்த அன்புக்குதான் அவன் ஏங்குகிறான்!  தம்மை ஒரு குழந்தை போல் கொஞ்ச வேண்டும் என்று ஏங்குகின்றான்!  இந்த அன்பைத் தேடித்தான் அவன் இறங்கி வந்துள்ளான்!
பின் வருவதை முன்னரே நன்கறிவார்கள் சான்றோர்கள்.  அதனை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள்.  இந்த கலாபத்தினைப் பற்றியும் நன்கறிவார்கள்.  அதற்குத் தக்கவே நடந்து கொண்டார்கள்.  எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அதற்குக் கொடுத்தார்கள்.  நாம் இறந்தாலும் இறக்கலாம் அரங்கனுக்கு ஏதும் நேரக்கூடாது என்பதில் கவனமாயிருந்தனர்.  அனைத்தும் அறிந்த அரங்கனோ, ஏதுமறியா குழந்தையாய் மாறுகின்றான்.  இந்த கலாபத்தினை அவனால் தடுக்க முடியாதா? அவர்களது கொட்டத்தினை அடக்கமுடியாதா?  12000 வைணவர்கள் பலியானதைத் தடுக்க முடியாதா?
 
அசுரர் பலரையும், அரக்கர்களையும், ஹிரண்யாக்ஷனையும், ஹிரண்யகசிபுவையும், கம்ஸனையும், சிசுபாலனையும், கௌரவர்களையும் ஆடவிட்டு ….  அடக்கவில்லையா?
 
இப்போது உலுக்கான் ஆடுகின்றான்…..
 
நம்பெருமாள் ஒரு சிலையோ அல்லது பொம்மையோ சத்தியமாக இல்லை!  அவன் அர்ச்சையின் உன்னதம்! அர்ச்சையின் விநோதம்! அர்ச்சையின் தலைவன்! முதல்வன்!  முதலில் தோன்றிய அர்ச்சையே இவன்தான்! நாம் அன்போடு நெருங்குவோமாயின் பாசமுடன் அணைப்பான்!  அடியேனே சமயத்தில் கிரீடங்களைக்  கலையும் போது உள்ளே முத்து முத்தாய் வியர்வை அரும்பியிருப்பதைக் கண்டிருக்கின்றேன்.  யாரிடத்தும் இதுவரைச் சொன்னதில்லை.  இப்போது உணர்வுகள் பொங்குவதால் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.   
 
வேளச்சேரிக்கருகில் ஜலதாம்பேட் எனும் ஊரில் திருநாராயணபுரம் செல்லப்பிள்ளைக்கு ஒரு கோவில்கட்டி அன்போடு அவனை ஆராதித்து வரும்  அந்த அம்மையாரிடம்,  ”எப்படி இவ்வளவு சிரத்தையாக நீங்கள் ஆராதிக்கின்றீர்கள்?” என்று ஒரு நாள் கேட்டேன். 
 
அதற்கு அவர்கள் சொல்கிறார்கள்.   ”என்ன செய்வது….? 
என் செல்லப்பிள்ளைச் சொல்கிறான்.  அன்போடு நீ என்னை நெருங்கும்போது உன்னோடு நான் பேசுகிறேன்.    அவசரத்தில் கடமையெனச் செய்யும் போது சிலையாக மாறுகிறேன்.    இதில் எனக்கு ஒரு கஷ்டமுமில்லையே! என்கிறான்.  எப்படி நான் கடமையே எனச் செய்வேன் இக்குழந்தைக்கு?”
என்று நா தழுதழுக்கக் கூறுகின்றார்.

நாளை முதல் உங்கள் வீட்டு ஆராதனைக் கடவுளை நீங்கள் எப்படி வழிபடப் போகின்றீர்கள்?…..
 
                                                           -Posted on 22nd September’ 2008-

 

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: