Srirangapankajam

September 22, 2008

PESUM ARANGAN-117

Filed under: PESUM ARANGAN — Tags: , — srirangapankajam @ 10:15 am

 

 

Peruvala Vaikal

Peruvala Vaikal

21.09.2008

 
ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்ட ஸ்ரீவேதாந்த தேசிகர்,  ஸ்ரீரங்கத்திற்காக தம் இன்னுயிரைத் துறந்த ஸ்ரீசுதர்ஸனபட்டரின் இரு குமாரர்களான ஸ்ரீவேதாந்தாசார்யபட்டர். மற்றும் பராங்குச பட்டர் (இவர்களை பராசரபட்டர், பராங்குச பட்டர் என்று கோவிலொழுகு குறிப்பிடுகின்றது – ஆனால் ஸ்ரீவேதாந்த தேசிகரின் வைபவப் பிரகாசிகை ஸ்ரீவேதாந்தச்சார்யபட்டர், பராங்குசபட்டர் என்று குறிப்பிடுகின்றது) ஆகிய இருவருடனும் அரங்கனை அங்குமிங்கும் தேடியலைந்து எங்கும் காணப்பெறாமையினால் அவ்விரு அறியா பாலகர்களையும் தம் கண்ணைப் போல் காத்து, தாயைப் போல் அன்பு சொரிந்து, ஒரு வழியாக கர்நாடக மாநிலம் சத்யாகாலம் வந்து சேர்ந்தார்.  அங்கு தம் மகன் வரதனுடன் இவ்விருவரையும் சேர்த்து மூவருக்கும் காலத்தே செய்யவேண்டிய கர்மாக்கள் அனைத்தையும் செய்வித்து,  வேத, இதிகாச, புராண, தத்வார்த்த ரஹஸ்யார்த்தங்கள் மற்றும் ஸ்ருதப்ரகாசிகை ஆகியவற்றைப் போதித்து வந்தார்.
 
அரங்கனையும், ஸ்ரீரங்கத்தினைப் பற்றிய கவலையும் மிகவே கொண்டார்.
 
 
இனி ஸ்ரீரங்கத்தில் நாம் நிம்மதியாக வாழமுடியாது என்றெண்ணிய மீதமுள்ள வைணவக் குடும்பங்கள் ஸ்ரீரங்கத்தினை விட்டு, தோழப்பர் என்ற ஒரு ஆச்சார்யனைத் தலைமையாகக் கொண்டு அருகிலுள்ள கிராமங்களான பாச்சூர், கோவர்த்தனக்குடி (தற்போது கோவத்தக்குடி என்றழைக்கப்படுகின்றது), திருவரங்கப்பட்டி, கோபுரப்பட்டி ஆகிய கிராமங்களில் வசிக்கலாயினர். இவர்களால் பெரியபெருமாளையும், நம்பெருமாளையும் விட்டு பிரிந்து வாழ முடியவில்லை.  அருகிலுள்ள கண்ணனூர் எனும் சமயபுரத்தில் ஹொய்சாள சிற்ப கலைஞர்கள் நிறைய வாழ்ந்து வந்தனர்.   உலுக்கானின் படையெடுப்பு இவர்களையும் பாதித்தது.  இவர்களும் தப்பிப்பிழைத்து இந்த கிராமங்களில் குடியேறினர். 
 
இவ்விரு குழுவினரும் சேர்ந்து ஒரு அழகான ரங்கநாதர் கோவிலைக் கோபுரப்பட்டியில் கி.பி 1323ம் ஆண்டு கட்டத்தொடங்கினர்.  கோபுரப்பட்டியும் ஒரு புறம் பெருவள வாய்க்கால், மறுபுறம் கம்பலாறு ஆகிய இரு நீரோட்டத்திற்கு நடுவே ஸ்ரீரங்கத்தினை நினைவுப்படுத்துவது போலிருந்தது சற்றே இவர்களுக்கு ஆறுதலையளித்தது.   
இருக்கின்ற குறைந்தபட்ச நிதிஆதாரங்களினால் இந்த கோவில் அஸ்திவாரமே அமைக்கப்படாமல் கட்டப்பட்டது. (இது தற்சமயம் இக்கோவிலில் புனருத்தாரணம் செய்து வருவதால் தெரியவருகின்றது).  இக்கோவிலிலுள்ள ஒரு கல்வெட்டு இக்கோவிலை ‘புதுக்கிடக்கை‘ என்று குறிப்பிடுகின்றது.  இதன்மூலம் பழைய கிடக்கை ஸ்ரீரங்கம் என்பதனை அறிவிக்கின்றனர். ஹொய்சாள சிற்பக் கலைஞரின் அற்புத கைவண்ணத்தினால் சிறப்புறக் கட்டப்பெற்று வழிப்பட்டு வந்தனர்.  இங்குள்ள பெரியபெருமாளின் மூலவிக்ரஹம் ஹொய்சாளர்களின் சிற்பக்கலையின் உன்னதமாகும்.  இங்குள்ள அனைத்து வைணவர்களும் ஸ்ரீரங்கத்தில் இறந்த 12000 பேர்களுக்கும் திதி, தர்ப்பணம் முதலானவைகளை பெருவளவாய்கால் கரையில் செய்துள்ளனர்.  ஆடி அமாவாசை வழிபாடு சிறப்புற நடந்திருக்கின்றது. இதனை இந்த கோவிலின் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.  கி.பி 1342ம் ஆண்டு ஒரு முறையும், கி.பி1498ல் இலங்கைஉலகன் என்று அறியப்பட்ட தோழப்பன் என்பவரால் மறுமுறையும் திருப்பணி நடந்து குடமுழுக்கு நடைபெற்றதையும் விவரிக்கின்றது இக்கோவிலுள்ள கல்வெட்டுகள்.
 
(ஏறத்தாழ 660 ஆண்டுகள் கழித்து, எல்லாமும் சேதமுற்ற நிலையில் தற்சமயம் அரங்கனது கிருபையினால் மீண்டும் திருப்பணிகள்  திருப்திகரமாக நடைப்பெற்று வருகின்றது.  தாங்களைனைவரையும் இவ்வரிய திருப்பணியில் பங்கேற்குமாறு அன்புடன் வரவேற்கின்றேன்.  இதுப்பற்றிய விவரங்களைத் தாங்கள் www.gopurapatti.blogspot.com
என்ற வலைத்தளத்தின் மூலமாக அறியலாம்.  நம் முன்னோர்கள் செய்த முயற்சிக்கு உறுதுணையாய் பல நூற்றாண்டுகள் கழித்து இந்த தலைமுறையில் நாம் பங்கேற்கும் ஒரு அரிய வாய்ப்பு இது.  நழுவ விடாதீர்கள்.  தயவு செய்து தாங்களால் ஆன சிறு உதவியினைத் தவறாது அளியுங்கள்). 
 
ஸ்ரீரங்கம் மீண்டும் உன்னத நிலைக்குத் திரும்பும் வரையில் அங்கு பெரியபெருமாளுக்கு நடைபெற்ற வைபவங்களைனைத்தையும் இங்கு நடத்தி மகிழ்ந்திருந்தனர் எஞ்சியோர்…
 
  

                                                            -Posted on 21st September’ 2008-

 

 

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: