Srirangapankajam

September 21, 2008

PESUM ARANGAN-116

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 9:30 pm
Chapter-116
20.09.2008
 
இங்கிருந்து அரங்கன் மற்றும் உபயநாச்சிமாரோடு கிளம்பிய பிள்ளைலோகாச்சாரியார்,  உடனடியாக சில மைல்கள் கடந்து நொச்சியம் என்ற சிற்றூரினைக் கடந்து,  அழகிய மணவாளம் என்னும் கிராமத்தினை அடைந்து,  அங்கு இருக்கும் ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோவிலினையடைந்தார்.
 
(இங்குள்ள ஸ்ரீசுந்தரராஜப்பெருமாளை ஸ்ரீரங்கம் வரும் அனைவரும் அவசியம் தரிசிக்க வேண்டும்.  ஆஜானுபாகுவாய், ஸ்ரீதேவி பூதேவி சமேதரராய் அற்புதமான திருமேனி.  ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் 15 கி.மீ தூரம்தான் இருக்கும்)  அங்குள்ள முன்மண்டபத்தில் பிரத்யேக மண்டபம் அமைத்து நம்பெருமாளுக்கு திருவாராதனம் முதலான கைங்கர்யங்களைச் செய்து சில நாட்கள் அந்த குக்கிராமத்தில் தங்கினர்.
 
இதற்கிடையே உலுக்கானின் ஒற்றர்கள்
திருச்சியினைச் சுற்றி நம்பெருமாளைத் தேடி வந்தனர்.  தப்பிப்பிழைத்த சிலரும், ஸ்வாமி தேசிகரும் தேடினர். 
 
ஆனால் நம்பெருமாளோ அழகிய மணவாளத்தினை
விட்டு அகன்று கடும் கானகத்திற்கு ஊடே புகுந்து
தெற்கு நோக்கி பயணித்தார்.

 

வழியில் கள்வர்கள் கூட்டம்.  நம்பெருமாளையும், உபயநாச்சிமார் விக்ரஹங்களைத் தவிர்த்து மீதமுள்ள அனைத்து நகைகளையும் கூடவிருந்தோரின் செல்வத்தினையும் அபகரித்துக் கொண்டது. 
 
எல்லா ஆபத்துகளையும் சஹித்து கொண்டு
நம்பெருமாளுடன் கூடவே அங்கு மதுரை ஆனைமலையடிவாரத்தினை அடைந்தது.  அங்கு சற்றே அலைந்தபோது ஒரு குகையும் அதன் வெளிப்புறத்தில் ஒரு தெள்ளிய நீர் குட்டையும், மிக ரம்மியமான, அவ்வளவு எளிதில் யாராலும் கண்டுபிடிக்க முடியாத, ஒரு நல்ல இடத்தினைத் தேர்ந்தெடுத்து நம்பெருமாளை அங்கே எழுந்தருளப்பண்ணி, சற்றே நிம்மதியடைந்தார் பிள்ளைலோகாச்சாரியார். 
அந்த இடம் ஜ்யோதிஷ்குடி என்ற ஒரு அழகான இடம்.  திருமோகூருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு ரம்மியம்.
 
நம்பெருமாளைப் பொறுத்தவரை அடியேனுடைய ஒரு அனுபவத்தினை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஒரு சில சமயம் அவரை எழுந்தருளப்பண்ணும் போது மூன்று அர்ச்சகர்களிருந்தால் கூட அவர் கணத்திருப்பார்.
ஏளப்பண்ணுவதற்குள் மூச்சு வாங்கிவிடும்.  ஒரு சில நாட்கள், ஒரு புறப்பாட்டிற்கு இரண்டு புறப்பாடாக,  வந்து சேரும்.  (பெரும்பாலும் கணு, சங்கராந்தி போன்ற நாட்களில் இரண்டு புறப்பாடுகள் வந்தமையும்) இங்குமங்கும் தோளுக்கினியானில் எழுந்தருளப்பண்ணி மீண்டும் மண்டபத்தில், மீண்டும் தோளுக்கினியானில், மீண்டும் வாகனத்தில் என்று மூச்சு விட நேரமிருக்காது.  அந்த மாதிரி சமயங்களிளெல்லாம் அவரது எடை மிகவே குறைந்தது போலிருக்கும்.  மிகவும் இலகுவாக எழுந்தருளுவார்.  காரியங்கள் அதிகமாயிருந்தாலும் சிரமம் என்பதே தெரியாது.  கைங்கர்யங்கள் எல்லாம் முடிந்து வீட்டிற்குத் திரும்பும்போது நாமா இவ்வளவும் செய்தோம் என்ற மலைப்பு உண்டாகும்.  இது எங்களுக்கு மட்டுமல்ல.  அனைத்து கைங்கர்யபரர்களுக்கும்தான்.  அலுப்பு என்பது அரங்கன் அருகிலிருக்கும் வரை கிடையவே கிடையாது.  அவனது கார்யங்களை அவனே பார்த்துக்கொள்வான்.  சுயமேவகார்யபரன்.  நாம் சும்மா ஒரு கருவிதான். 
 
கண்டிப்பாக இவர்கள் நம்பெருமாளைத் தூக்கிக் கொண்டு இங்குமங்கும் அலைந்த போதும் அவர்களை நிச்சயமாக அலுப்படையாமல் பார்த்துக் கொண்டிருப்பான்
 
நம்பெருமாள்தான் எல்லா உலகின் ஒளி.
நம்பெருமாள்தான் வைணவத்தின் ஜீவன்.  நம்பெருமாள்தான் ஒவ்வொரு வைணவனின் ஊணிலும் உயிரிலும் குடி கொண்டவன்.
அரங்கன்தான் சர்வம். 
அரங்கன்தான் பூஜ்யம். 
அரங்கன்தான் பூர்ணம்.
அவன்தான் ஆதி.  அனாதி.  அந்தம்.
 
அவன் ஒரு பொம்மையாயிருந்தால் இவர்கள் இத்தனைப் பாடுபடுவார்களா?  அவன் இந்த தருணத்தில் மௌனமாயிருக்கின்ற போதும் அவர்களனைவரையும் அலுப்படையாமல் இயக்கிக் கொண்டிருந்தான்.  இவனது அஞ்சேல் என்ற அருமை ஹஸ்தத்தினையும், குறும்புன்னகை பூத்த திருமுகத்தினையும் தரிசித்தாலே போதும் நம்முடைய உடலும் உள்ளமும் புத்துயிர் பெறும்.  புதுப் பெரும் நல்உணர்வு பெறுவோம். 
 
ஆனைமலையிலும் கள்வர்களிருந்தனர்.  அந்த கள்ளர்கள் அனைவரும் இந்த பெருங்கள்ளனிடத்து மையலுற்றனர். அடிமையாயினர்.  பிள்ளைலோகாச்சார்யர் அவர்களைத் திருத்திப் பணி கொண்டார்.  அவர்களும் தம் உயிரினைக் கொடுத்தாவது அரங்கனைக் காப்போம் என்ற வைராக்கியத்தில் அரங்கனைக் காத்தும், அன்றாடம் தாங்களால் இயன்ற கைங்கர்யங்களையும் செய்து வந்தார்கள்.
 
 
  

                                                             -Posted on 20th September’ 2008-

 

<div style=”width:480px; text-align: center;”><embed type=”application/x-shockwave-flash” wmode=”transparent” src=”http://w216.photobucket.com/pbwidget.swf?pbwurl=http://w216.photobucket.com/albums/cc210/muralibattar/Website/9f7654f6.pbw” height=”360″ width=”480″><a href=”http://photobucket.com/slideshows” target=”_blank”><img src=”http://pic.photobucket.com/slideshows/btn.gif” style=”float:left;border-width: 0;” ></a><a href=”http://s216.photobucket.com/albums/cc210/muralibattar/Website/?action=view&current=9f7654f6.pbw” target=”_blank”><img src=”http://pic.photobucket.com/slideshows/btn_viewallimages.gif” style=”float:left;border-width: 0;” ></a></div> 

 

 

 

 

 

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: