Srirangapankajam

September 20, 2008

PESUM ARANGAN-115

Filed under: PESUM ARANGAN — Tags: , , — srirangapankajam @ 11:21 pm
Chapter-115
19.09.2008
 
ஆங்காங்கே எதிர்பட்ட அனைவரையும் கொன்று வீழ்த்தி ரத்தம் தோய்ந்த கால்களுடன் தாயார் ஸந்நிதியின் முகப்பிற்கு வந்து அங்குள்ள பெருங்கதவைத் திறக்க எத்தனிக்கின்றார்கள். 
 
அங்கு எதிரிலுள்ள ஜீயர் மடத்தினுளிருந்த வைணவர்களின் தலைகளைக் கொய்கின்றனர். 
 
யானைப்படை உதவிகொண்டு கதவினை உடைத்து உள்ளே செல்கின்றது வெறிப்படை.  எதிரில்பட்ட நிராயுதபாணிகளனைவரையும் கொல்கின்றது கொலைப்படை.  மணல்வெளி வழியாக பிரதட்சிணமாகவும் அப்பிரதிட்சணமாகவும் செல்கின்றது அப்படை.  அப்போது அந்த மதில்களின் மேலிருந்து, பெரியகோவிலின் உள்ளே இவர்கள் செல்வதை தடுப்பதற்காக,  கொதிக்கும் எண்ணையும் நெய்யும் தைலமும் இவர்களது மேல் வீசப்படுகின்றது.  ஈவிரக்கமற்ற அக்கும்பல் ஒரு க்ஷணம் ஸ்தம்பித்து துடித்தது.  பலரைக் கொன்ற அந்த கும்பலில் சிலர் மட்டும் துடித்து இறந்தனர். ஆயினும் இப்போராட்டம் சிறிது நேரம்தான் நீடித்தது.

வைணவப்போராளிகள் வாளிற்கு துண்டு துண்டாய் இரையாயினர்.  அந்த நான்காம் பிராகாரம் முழுதும் பிணக்குவியல்தான்.  அங்கு மணல்வெளியில் ஸ்வாமிதேசிகரும், சுதர்ஸன பட்டரின் இரு குமாரர்களும் பிணக்குவியல்களுக்கு இடையில் இறந்தவர்களின் ரத்தக்கறைகள் இவர்கள் உடல் முழுதும் தோய்ந்திருக்க கவிழ்ந்துபடுத்து இறந்தவர் போன்றே இருந்தனர்.  ‘ஸ்ருதப்பிரகாசிகை’ அங்குள்ள மணலில் கைக்கு எட்டும் தூரத்தில் புதைக்கப்பட்டிருந்தது.  வெறியர்கள் கோவில் முழுதும் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். 
 

நள்ளிரவு வந்தது.  தேசிகர் ஸ்ருதப்ரகாசிகையை பத்திரப்படுத்தி எடுத்துக்கொண்டு இரு குழந்தைகளுடனும் ஸர்வஜாக்கிரதையாக யார் கண்ணிலும் படாமல் ஸ்ரீரங்கத்தினை விட்டு வெளியேறினார்.  அரங்கனைத் தேடத் தொடங்கினார்.
 
சந்தனு மண்டபத்தில் உலுக்கான் தங்கினான்.  இவனோடு கூடிய படை அங்குள்ள தூண்களையும் துவாரபாலகர்களையும் சேதப்படுத்தத் தொடங்கியது. 
 
அப்போது அங்கே மறைந்திருந்த கோவில்
தேவதாஸிகளிலேயே மிக அழகான ஒருவள் படைத்தளபதி நோக்கி, கண்களில் காமம் கொண்டு, மனதினில் இவனை எப்படியாவது தம் வசப்படுத்தி, பெருத்தசேதம் ஏற்படாமல் கோவிலினைக் காக்க வேண்டும் என்ற தர்ம சிந்தனையுடனும், அழகான மயிலொன்று அசைந்தாடுவது போன்று, முன்னேறினாள்.  தளபதியினை வீழ்ந்து வணங்கினாள்.
 
துடைத்துவிட்ட வெண்பளிங்கு போன்ற நிறமுடைய இவளின் வசீகரம் கண்டு வெகுசீக்கிரமே இவளின் வசமானான் தளபதி. கொலைவெறி  தணிந்தது. காமவெறி மிகுந்ததுஅசுரர்களை ஆட்கொண்ட மோகினி அவதாரம் போன்று,  இந்த நரகாசுரனை முழுதும் தன் வசப்படுத்திய அவள், சிலநாட்களிலேயே சந்தனு மண்டபத்திலிருந்து அவனுடன் வெளியேறி, கண்ணனூரில் (சமயபுரம்) ஒரு கோட்டை ஏற்படுத்தி அவனின் போகப்பொருளாய், ஸ்ரீரங்கத்தில் மேலும் அழிவு ஏற்படாவண்ணம் தன்னைக் கொடுத்து, தான் கெட்டு, ஸ்ரீரங்கத்தினைக் காப்பாற்றினாள்
 
சிங்கபிரான் என்னும் அழகிய மணவாள கிராமத்தினைச் சார்ந்த அந்தணர்,  இவர்கள் பேசும் உருது நன்கறிந்தவர்,  இந்த தாஸியின் சிபாரிசினால் இந்த தளபதிக்கு அறிமுகமானார்.  அவனுக்கு பொன்னும், போகத்திற்கு பெண்களையும் கொடுத்து தம் நட்பை அவனிடத்து நெருக்கப்படுத்தினார்.  அவனோடு கூடவே பழகி, பெரியகோவிலுக்கு சேதம் ஏற்படாவண்ணம் கவனமாக பார்த்துக்கொண்டார்.
 
 
  

                                                            -Posted on 19th September’ 2008-

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: