Srirangapankajam

September 19, 2008

PESUM ARANGAN-114

Filed under: PESUM ARANGAN — Tags: , — srirangapankajam @ 11:23 pm
Chapter-114
18.09.2008
 
 
ஸ்ரீரங்கம் கோவிலின் பல பகுதிகளிலும் பொக்கிஷங்கள் வைக்கும் கருவூல அறை முன்னும், சில முக்கிய அறைகள் முன்னும், ரங்கநாச்சியார் மற்றும் பெரியபெருமாள் மூலஸ்தானம் முன்பும் முன்கூட்டியே அதனை அடைப்பதற்கு ஏற்றாற் போல் கற்களும் காரைகளும், படையெடுத்து வருபவர்களின் குணம் தெரிந்து,  தற்காப்புக்காக எடுத்து வைத்திருந்தனர். 
 
மரத்தினால் சில விக்ரஹங்களும் செய்து வைத்திருந்தனர்.  ரெங்கநாச்சியார் சன்னிதியில் அங்குள்ள தலவிருட்சம் அருகில் ஒரு பெரியபள்ளம் தோண்டி வைத்திருந்தனர்.  நல்ல உடல்வலிமை கொண்ட சில வைணவ இளைஞர்கள் குழு ஒன்றும் தயாராகயிருந்தது. 
 
ஸ்ரீசுதர்ஸன பட்டரும், ஸ்வாமி தேசிகரும் மற்றும் முக்கிய கோவிலார்களும் ஓடோடி வருகின்றனர்.  இரு குழுவாக பிரிகின்றனர்.

ரெங்கநாச்சியாரின் மூல விக்ரஹத்தினை அங்குள்ள தலவிருட்சம் புன்னை மரத்தினடியில் புதைக்கின்றனர்.  ரெங்கநாச்சியார் உற்சவர் விக்ரஹத்தினை மூலஸ்தானத்தில் வைத்து (தற்சமயம் ரங்கநாயகி தாயார் வீற்றிருப்பது அர்த்த மண்டபத்தில் – ஸ்ரீதேவியுள்ள இடத்தில்தான் அக்காலத்தில் மூலவரும் உற்சவருமாக தாயார் வீற்றிருந்தாள்) தயாராக வைத்திருந்த கற்களைக் கொண்டு வித்யாசமாக ஏதும் தெரியாதபடி திறம்பட மூடிவிட்டனர்.  வெளியில் மரத்தலான தாயாரை அழகுற எழுந்தருளச்செய்து விட்டனர். (இந்த தாயாரை நாம் இன்றும் தாயார் ஸந்நிதியில் க்யூ வரிசை போகும் வழியில் தரிசிக்கலாம் – கலாப சம்ரட்சகித் தாயார் என்று இவருக்குத் திருநாமம்.  கலாபம் என்றால் இந்த தீவிரவாதிகள் நாசப்படுத்திய கலவரக்காலத்திற்குப் பெயர்.  அந்த கட்டத்தில் கல்திரைக்குள்ளிருந்த தாயாரை இந்த தாயார் காப்பாற்றியதால், இந்த தாயார் அந்த தாயாரை சம்ரக்ஷணம் பண்ணியதால் அந்த பெயர்.  ஆனால் கோவிலொழுகில் தாயாரையும் சேர்த்தே எழுந்தருளப் பண்ணினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சரியான விவரம் தெரியவில்லை.  ஆனால் நம் சிந்தனைக்கு மேற்குறிப்பிட்டதுதான் சரியெனப்படுகின்றது)
 

மற்றெரு குழுவினர் பெரியபெருமாளின் முன்பும் இதேப் போன்று குலசேகரன்படியையொற்றி கல்திரை ஒன்றை நயம்பட அமைத்து அங்கும் ஒரு விக்ரஹத்தினை எழுந்தருளப்பண்ணி மீதமுள்ள முக்கியமான அறைகள் அனைத்தையும் கற்களால் மூடி விட்டனர்.
 
அனைத்தையும் செய்து முடித்தபின் ஸ்ரீசுதர்ஸனபட்டா; தாமும் நிச்சயமாக இறந்து விடுவோம் என்றுணர்ந்தார்.  ஸ்வாமி தேசிகனை கண்ணீரும் கம்பலையுமாய் ஆரத்தழுவுகின்றார்.  தாம் இதுகாறும் தம் உயிரினும் மேலாக காப்பாற்றி வந்த ‘ஸ்ருதபிரகாசிகை’யை அவரிடத்து அளித்து பாதுகாக்கும்படியும், அதனைப் பரப்பும்படியும் வேண்டுகின்றார்.  தம் இரு குழந்தைகளையும் காப்பாற்றும்படி வேண்டி, தம் இரு குழந்தைகளிடத்தும் ஸ்வாமிதேசிகனை இனி ஆஸ்ரயித்து அவர் சொல்படி கேட்டு நடக்கச்சொல்லி அன்புடன் அறிவுறுத்தி, குழந்தைகளை ஆரத்தழுவி கதறுகின்றார்.  ஸ்வாமி தேசிகர் அவரைத் தேற்றுகின்றார்.  அந்த க்ஷணத்திலேயே அந்த குழந்தைகளிருவரையும் தம் குழந்தைகளாகவே பாவிக்கின்றார். 
 
அங்கு, மண்டபத்தினுள் வெகுநேரமாக மணிசப்தம் கேட்கின்றதே என்று சிலர் உள்ளே திரைவிலக்கிப் பார்க்க அங்கு நம்பெருமாள், உபயநாச்சிமார் இல்லாமல் ஒருவர் மட்டும் சிலையாக நம்பெருமாளின் பிரிவாற்றமையால் உணர்வுகள் செத்து, ஆச்சார்யனின் கட்டளையை சிரமேற்கொண்டு மணியை விடாது அடித்துக்கொண்டிருக்கின்றார்.  அவரைப் பிடித்து கூட்டம் உலுக்க நடந்ததை கூறுகின்றார்.  ரங்கா! ரங்கா! என்று அனலில் இட்டப்புழு போல துடிக்கின்றது அக்கூட்டம்.  அங்குமிங்கும் சிலர் பித்து பிடித்தாற் போல் ஓடுகின்றனர்.  சிலர்.

மூர்ச்சையாய் சிலர் வீழந்து கிடக்கின்றனர்.  தலையில் அடித்துக்கொண்டு கதறி தீர்க்கின்றது.  சிலர் மூலஸ்தானம் நோக்கி விரைகின்றனர்.  அவர்களோடு சேர்ந்து ஊரிலுள்ள ஏராளமானோரும் கோவிலினுள் விரைகின்றனர்.
 
கோவிலின் மூன்று கதவுகளும் சாத்தப்படுகின்றது. 
 
நான்காவது திருச்சுற்றின் மேல் மடப்பள்ளியிலுள்ளப் பானைகளும், பெரிய கொப்பரைகளையும் அங்கேயே அடுப்பை மூட்டி கோவிலுள்ள எண்ணையையும் நெய்யையும் கொதிக்க வைக்கின்றனர் சில இளைஞர்கள்.

 
கொடுவாள் கொண்டு வாளின் கூர்மை மின்னல் போன்று பளபளக்க ஒரு பெரும்படை,  பன்றியாழ்வான் மண்டபத்தினை கொலைவெறி கூச்சலுடன் அடைந்தது.  திரை விலக்கி உள்ளேச் சென்றது.  அரங்கனைத் தேடியது.  அரங்கனோடு தப்பிவிட்டார்கள் என்றறிந்ததும் இளநீர் சீவுவது போன்று அங்குள்ள வைணவர்கள் அனைவரின் தலையையும் சீவியது.

பன்றியாழ்வானின் விக்ரஹத்தை சீர்குலைத்து கொள்ளிடத்தில் விட்டெறிந்தது.  அந்த கோவில் முழுமையும் நிர்மூலமாக்கியது.  கொள்ளிடம் ஆறு ரத்த ஆற்றுடன் கலந்து சிவந்து ஓடியது.  இந்த நிகழ்ச்சி ‘பன்னீராயிரவர் முடிதிருத்திய பன்றியாழ்வான் மேட்டுக் கலகம்” என்று கோவில் சரித்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.
 

பெரும் காலாட்படையுடனும் குதிரைப்படையுடனும் யானைப்படையுடனும் வழியில் எதிர்படும் அனைவரது தலையையும் துண்டித்தப்படியே அரங்கனின் கருவறை நோக்கி பயணிக்கின்றது அக்கொடியவர்களின் கூட்டம்…
 

 

                                                            -Posted on 18th September’ 2008-

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: