Srirangapankajam

September 18, 2008

PESUM ARANGAN-113

Filed under: PESUM ARANGAN — Tags: — srirangapankajam @ 11:38 pm
Chapter-113
17.09.2008
 
 
ஒரு பெரும்படை கொலைவெறியோடு ஸ்ரீரங்கம் நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கின்றது.  இங்கு நம்பெருமாள், உபயநாச்சிமாரோடு பன்றியாழ்வான மேட்டிலுள்ள பன்றியாழ்வான் கோவிலிலின் அழகான முன்மண்டபத்தில் உற்சவம் கண்டருளிக் கொண்டிருக்கின்றார்.

அப்போது 12000 வைணவர்கள் அரங்கனைத் தரிசிக்க அங்கு குழுமியிருந்தனர். (ஸ்ரீரங்கத்திலிருந்து கொள்ளிடம் பாலம் செல்லும் வழியில் கொள்ளிடக்கரையோரமாக இப்போது நமது பூர்வாச்சார்யர்களின் பிருந்தாவனத்திற்கு அருகாமையில் தற்போதுள்ள ரயில்வே கேட்டினையொற்றி இந்த பன்றியாழ்வான் கோவில் அப்போது அமைந்திருந்தது.  மணவாள மாமுனிகளின் சிதைந்துள்ள திருவரசிற்கு எதிரேயுள்ளது.  இந்த பகுதி பன்றியாழ்வான் மேடு என்றழைக்கப்பட்டு வந்தது.  உபயநாச்சிமாரோடு நம்பெருமாள் இருப்பதால் அநேகமாக ஏழாம் திருநாளாகயிருக்கலாம்!).  விலையுயர்ந்த ஆபரணங்களால் அரங்கன் அலங்கரிக்கப்பட்டு அறியாத குழந்தைபோல் புன்முறுவலுடன் சிம்மாஸனத்தின் மீது உபயநாச்சியார்களுடன் வீற்றிருக்கின்றார்.
 
நம்பெருமாளுக்கு மண்டப திருவாராதனத்திற்கு தயார் செய்து கொண்டிருந்தனர். 
 

சூரியன் நடக்கவிருப்பதை காணவிரும்பாமல் மறையத் தொடங்கினான். இருள் சூழத் தொடங்கியது. அந்தி சாயும் வேளை அங்கிருந்த 12000 வைணவர்களுக்கும் அந்திம வேளை. 
 
ஆங்காங்கு தீவட்டிகள் எரிந்து கொண்டிருந்தன. 
 
பாதுகாப்பாக உலுக்கானின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க கோவிலார்களால் அனுப்பப்பட்ட ஒற்றன் ஓடோடி வருகிறான்.  கொலைவெறியர்கள் நெருங்கிக் கொண்டிருப்பதை அறிவிக்கின்றான்.
 
ஸ்ரீபிள்ளைலோகாச்சாரியார், ஸ்ரீதேசிகன், ஸ்ரீசுதர்ஸனபட்டர் மற்றும் முக்கியஸ்தர்கள் அனைவரும் அவசரமாகக் கூடினர்.

எப்படியும் நம்பெருமாளையும் உபயநாச்சிமாரையும் கொள்ளைக் கொண்டு, இருப்பவர்களையும் கொலை செய்வார்கள் என்பதனை உறுதிபட அறிந்தனர். 

 
மண்டபத்திற்குத் திருவாராதனத்திற்காகத் திரையிட்டனர். 
 
பெருமாளையும் உபயநாச்சிமாரையும் திருவாபரணங்களோடு அவர்கள் வந்த பல்லக்கில் எழுந்தருளப்பண்ணிப் பல்லக்கைச்சுற்றித் திரையிட்டனர்.
 
நடக்கவிருப்பதையறிந்தால் 12000 வைணவர்களும் நம்பெருமாளை விட்டுப் பிரியமாட்டார்கள்.  இவர்களது கலவரம் கொள்ளையர்கள் அடையாளம் காண சுலபமாகப் போய்விடும் என்று தீர்மானித்து,  திருவாராதனம் நடப்பது போல் திரைக்குள் மணியை இடைவிடாது அடிக்கச் செய்தனர்.
 
நல்ல உடற்கட்டுடன் கூடிய தேர்ந்த ஸ்ரீமாந்தாங்கிகள் பன்னிருவர், அர்ச்சகர் ஒருவர்,  இரண்டு பரிசாரகர்கள், நல்ல திடமாகயுள்ள எதையும் தாங்கும் வல்லமையுள்ள சில சிஷ்யர்களை இருட்டோடு இருட்டாக மண்டபத்தின் வேறெருப்பக்கமாக அனுப்பிவைத்து,   ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகரையும், ஸ்ரீசுதர்ஸனபட்டரையும் மற்றும் சில முக்கியஸ்தர்களையும் பெரியபெருமாளையும் கோவிலையும் பார்த்துக்கொள்ள அனுப்பிவைத்தார்.
 
தம்பியோடு தாமொருவர்தம் துணைவி காதல் துணையாக (பெரிய திரு 5-10-5) என்கிறபடியே,  நம்பெருமாள் தம் அந்தரங்க பரிசகர்களுடன் வலசையாக எழுந்தருளுகின்றார்.
 

தம்முடைய 118 வயதில், மனதில் வலிமை குன்றாமல், நம்பெருமாளை எப்படியும் காப்பாற்றுவோம் என்ற மஹாவைராக்கியத்துடன், வாளும் வில்லுங்கொண்டு இராமனைப் பின்தொடர்ந்தடிமை செய்த இளையாழ்வாரைப் போல,   த்வயமநுசந்தானம் செய்தபடி, நம்பெருமாளின் பின்னால் சர்வ ஜாக்கிரதையுடன், கண்களில் கண்ணீர் தாரையாய் கொட்ட பின்தொடர்கின்றார் பிள்ளைலோகச்சார்யார்….
 

 

 

                                                             -Posted on 17th September’ 2008-

 

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: