Srirangapankajam

September 17, 2008

PESUM ARANGAN-112

Filed under: PESUM ARANGAN — Tags: , , , — srirangapankajam @ 11:29 pm
 
Chapter-112
16.09.2008
 
 
ஸ்ரீரங்கத்தினை பல நாட்டு மன்னர்கள் கைப்பற்றி ஆண்டிருக்கின்றனர்.  அதில் சில மன்னர்கள் வைணவ துவேஷிகளாய் இருந்த போதிலும் ஸ்ரீரங்கம் அளவு கடந்த பாதிப்புக்குள்ளானதில்லை.  பெரும் கொள்ளைகளும் நடக்கவில்லை. 
 
உலுக்கான்……..!
 
அரங்கமாநகரை உலுக்கிய தீவிரவாதி.  எதையும் விட்டு வைக்காத வெறியன்.  ஒன்று கொள்ளை அல்லது நிர்மூலம்  – இதுதான் இவனது தாரகமந்திரம். 
 
ஸ்ரீரங்கம் ஏறத்தாழ நான்கு முறை   முகமதியர்கள்  படையெடுப்பால் பெரும் துன்பத்திற்குள்ளானது.
 
அதில் ஒன்று இராமானுஜர்  காலத்திற்கு சற்று முற்பட்டு நடந்திருக்கலாம்.   இராமனுஜர் காலத்தில் நடந்திருந்தால் எம்பெருமானார் சும்மாயிருந்திருக்க மாட்டார்.  நம்பெருமாளை கொள்ளைக் கொண்டு டில்லிக்குக் கொண்டு போயினர்.  அச்சமயம் ஸ்ரீரங்கத்தினைச் சோ்ந்த ஒரு பெண்மணி இவர்கள் பின்னாலேயே தொடர்ந்து சென்று ஸ்ரீரங்கம் மீண்டும் வந்து கோவிலார்களை இங்கிருந்து அழைத்துச் சென்று நம்பெருமாளை மீட்டதாக வரலாறு.  இவளது பெயர் தங்க விமானத்திலேயேப் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.   ஆனால் சரித்திரம் இவளைப் பின்தொடர்ந்த வல்லி என்றுதான் குறிப்பிடுகின்றது.  அப்போதுதான் சுரதாணி எனும் துலுக்கர் இளவரசி இந்த அரங்கனிடத்து அதீத பக்தியுடனிருந்து ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்திலேயே நம்பெருமாளைக் காணாமல் தன் இன்னுயிர் துறந்து கோவில் வளாகத்திற்குள்ளேயே அர்ஜூன மண்டபத்தில் கோவில் பெற்ற பெரும்பேறுடையவள் ஆனாள்.
 
கி.பி.1311 அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக்காபூர்.   தென்னிந்தியாவின் பல இந்து ஆலயங்களை நிர்மூலமாக்கியவன்.
இங்குள்ள இஸ்லாம் மதத்தினைச் சார்ந்தவர்கள் குரானை சரிவர ஓதத் தெரியவிடின் அவர்களையும் கொல்ல முனைந்தவன்.

இவனது வெறித்தனமான தாக்குதலால் பல கோவில்கள் இருண்டன.  பல ஆபுர்வ ஆபரணங்களும், அற்புத விக்ரஹங்களும் கொள்ளையடிக்கப்பட்டன.  ஸ்ரீரங்கமும் இதிலிருந்து தப்பவில்லை.  
 

ஆனால் நம்பெருமாளும் மற்றைய திருமேனிகளும் எப்படியோ காப்பாற்றப்பட்டன.  காப்பாற்றியவர்கள் யார் யாரோ சரித்திரம் மறைத்துவிட்டது.
 
அந்த சமயம்  முதலாம் மாறவர்மன் குலசேகரனின் மூத்த மகனான மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன்.  மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன்.  இவருக்குக் கலியுகராமன் என்ற ஒரு பெயருமுண்டு.  இவன் பரம விஷ்ணுபக்தன்.  வைணவர்களைப் பேணிக்காத்தவன்.  ஸ்ரீரங்கம் கோயிலின் ஆறாம் திருச்சுற்று மதில் இவன் அமைத்ததுதான்.  இந்த மதில் கலியுகராமன் மதில் என்றேயழைக்கப்படுகிறது. 
 
இவன் மாலிக்காபூரின் வெறித்தனமானத் தாக்குதலைக் கண்டு மதுரையை விட்டு ஓடினான்.  1311 முதல் 1317 வரை சொல்லாவொண்ணாத் துயரங்களை அனுபவித்து தமது தம்பி சுந்தரனின் உதவியுடனும், காகதீயர்கள் எனும் குறுநிலமன்னர்கள் உதவிகொண்டும், இடையில் அரசாண்ட கேரள மன்னனை விரட்டி மீண்டும் ஆட்சியமைத்தான். (1313 கேரள மன்னன் ரவிவர்மன் படையெடுத்து துலுக்கர்களை வென்று தமிழகத்தின் சில பகுதிகளை தம் கீழ் கொண்டு அரசாண்டான்).
 
கி.பி.1319 குஸ்ரூகான் என்ற தளபதி மீண்டும் தமிழகத்தின் மீது படையெடுத்தான்.  இந்த முறை வீரபாண்டியன் தமது பெரும்படையோடு அவர்களை ஓட ஓட விரட்டியடித்தான்.
 
கி.பி 1323 உலுக்கானின் பயங்கர படையெடுப்பு.     மன்னன் வீரபாண்டியன் தப்பித்து திருநெல்வேலியிலும் திருச்சிக்கருகேயுள்ள காடுகளிலும் மறைந்து வாழ்ந்தான்.  திருச்சிக்கருகே கண்ணனூரைத் தொட்டுவிட்டது உலுக்கானின் படை. 
 
இந்த முறை உலுக்கானின் முக்கிய நோக்கமே நம்பெருமாள் திருமேனியைக் கைப்பற்றுவதுதான்…  இந்த நம்பெருமாளிடத்து ஏதோ ஒரு விசேஷமிருப்பதாக பலமாகக் கருதினான்……. 
    

 

 

 

                                                            -Posted on 16th September’ 2008-

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: