Srirangapankajam

September 14, 2008

PESUM ARANGAN-111

Filed under: PESUM ARANGAN — Tags: , — srirangapankajam @ 9:56 pm
Chapter-111
13.09.2008
 
 
பகவத் பரிபூர்ண கடாக்ஷத்தினால் ஆசீர்வதிக்கப்பட்ட ஸ்வாமி வேதாந்த தேசிகர், தனது மாதுலர்(தாயினுடைய
ஸகோதரர்) கிடாம்பி அப்புள்ளார் என்ற மஹானை ஆச்சார்யனாகயடைந்தார். அதிசீக்கரத்தில் வேதாத்யனமும், தர்க்க மீமாம்ஸாதி சாஸ்திரங்களும் கற்று வடமொழியிலும் தமிழிலும் அதீத புலமைப்பெற்று விளங்கினார். 
 
இவர்தம் ஆச்சார்யன் எம்பெருமானாரின் தரிசனத்தை சரிவர பாதுகாக்கவும், பிரசாரம் செய்வதற்கும் ஸ்ரீ ஸ்ரீனிவாஸர  இவரை கடாக்ஷித்து அனுப்பியிருப்பதாகவே என்று நினைத்து சந்தோஷப்பட்டார். 
 
இவரது தற்காப்புக்கு அவசியம் எனக்கருதி தமக்கு பரம்பரை பரம்பரையாக உபதேசம் பெற்று வந்த கருட மந்திரத்தை தம்முடைய அருமை சிஷ்யரான தேசிகருக்கு உபதேசம் செய்தருளினார்.  விநயம், சிரத்தை, பக்தி எல்லாவற்றுடனும் தேசிகன் அம்மந்திரத்தைப் பெற்று மனதில் நிலை நிறுத்திக்கொண்டார்.
 
காலத்தில் இவருக்கும் திருமங்கை எனும் வரனுக்கும் திருமணம் நடந்தேறியது.  இவர்களுக்கு சிறிது காலம் கழித்து வரதன் என்கிறவொரு புத்ரனும் பிறந்தான்.
 
ஸ்வாமி தேசிகன் திருமணத்திற்குப் பின் காஞ்சியிலேயே இருந்து கொண்டு இராமானுஜ சித்தாந்தத்தைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபடலானார்.  அவரது ஆச்சார்யரான அப்புள்ளார் தமக்கு அந்திம காலம் நெருங்குவதையறிந்தார்.  ஸ்வாமி தேசிகரை அழைத்தார். 
 
 
அவரிடம் தாம் பரம்பரையாய் போற்றிவந்த உடையவரின் நிலைகளையும் (வஸ்திரத்தில் காவி வர்ண மூலமாய் பதிய வைக்கப்பட்ட உடையவரின் இரு திருவடிகள்)  அவர் பஞ்ச சம்ஸ்காரம் செய்வதற்கு பயன்படுத்தி வந்த திருவாழி திருச்சங்கினையும் கொடுத்து, இராமானுஜ சித்தாந்தம் பரவி நிலை நிற்க இவரை கடாக்ஷித்தருளினார்.  ஸ்வாமி தேசிகரும் மனமுவந்து அனைத்தும் ஏற்று சிரமேற்கொண்டார்.  அப்புள்ளார் அமைதி கொண்டு அரங்கனடி சேர்ந்தார்.
 
 
ஸ்வாமி தேசிகனுக்கு ஸ்ரீகருடாழ்வாரை நேரில் தரிசிக்க வேண்டும்என்ற ஆவல் ஏற்பட்டது.  இதற்கு கருடநதியின் கரையிலுள்ள திருவஹீந்திரபுரத்தினைத் தேர்தெடுத்தார்.
 
செல்லும் வழியில் உடையவர் பஞ்சசம்ஸ்காரம் பெற்ற மதுராந்தகத்தினை ஸேவித்து மகிழ்வுற்றார். 
 
திருவஹிந்தீரபுரம் சென்று அங்கு தரிசனம் செய்து ஒரு அமைதியான இடத்தினைத் தேர்ந்தெடுத்து ஒரு அரசமரத்தடியில் இருந்து கருடனைக் குறித்து தபமேற்கொண்டார்.  இவரது தபஸ்ஸின் பயனாக சீக்கிரமாகவே கருடபகவான் ப்ரத்யக்ஷமாக காட்சி கொடுத்து இவர் விசேஷமாக யோக்யதைப் பெற்று இராமானுஜ தர்ஸனத்தினை நிலைநிறுத்த வேண்டி, ஸ்ரீஹயக்ரீவ மந்திரத்தினை இவருக்கு உபதேசித்து மறைந்தார். இதன் பயனாக ஸ்ரீஹயக்ரீவனும் ப்ரத்யக்ஷமாகி பரிபூர்ண கடாக்ஷம் செய்தருளினார்.
 
இந்த பரிபூர்ண கடாக்ஷத்திற்கு பின் பல அற்புத க்ரந்தங்களை ஸ்வாமி இயற்றியுள்ளார். அவற்றுள் சில கருட பஞ்சாசத், தேவநாயக பஞ்சாசத்,  அச்யுத ஸதகம், மும்மணிக்கோர்வை, பந்துப்பா, கழற்பா, அம்மானைப்பா, ஊசல்பா, ஏசல்பா, நவரத்னமாலை, பரமபதபங்கம், ரகுவீரகத்யம், ஸ்ரீகோபாலவிம்ஸதி ஆகியவையாகும்.  பிறகு திருவஹீந்திரபுரத்திலிருந்து திருக்கோவிலுர் வந்து அங்கு தேஹளீசனைத் தரிசித்து தேஹளீசஸ்துதியினை இயற்றுகின்றார்.  அங்கிருந்து காஞ்சீபுரம் சென்றடைகின்றார்.
 
ந்யாஸஸதகம் என்னும் அற்புதமான க்ரந்தத்தினைப் படைத்து ஸ்ரீபெருந்தேவியையும், அருளாளனையும் சரணாகதி பண்ணுகின்றார்.  வரதராஜ பஞ்சாசத் என்னும் க்ரந்தத்தினையும், தமிழில் அடைக்கலப் பத்து, அர்த்தபஞ்சகம், ஸ்ரீவைஷ்ணவ தினசர்யை, திருச்சின்னமாலை,  பன்னிருநாமம், ஹஸ்தகிரி மஹாத்ம்யம் முதலான க்ரந்தங்களை அருளுகின்றார்.
 
பின்னர் எம்பெருமானார் விஷயமாக சரணாகதி தீபிகை எனும் க்ரந்தத்தை அருளுகின்றார்.  இவர் வாக்பிரவாகம் அம்ருதமானது. அளவில்லாதது.  வித்தையின் உச்சம்.  அந்தளவுக்கு ஹயக்ரீவனின் பரிபூர்ணகடாக்ஷம்.  தமது ஆச்சார்யன் அப்புள்ளாருடைய பெண்ணின் புத்ரன் மூலமாக உடையவருக்கு ஸரஸ்வதி நேரில் பிரத்யக்ஷமாகி அனுக்ரஹித்த ஸ்ரீஹயக்ரீவரையடையப் பெற்றார்.

அதிபாக்கியசாலியானார்.  உடையவர் ஆராதித்த ஸ்ரீ‘ஹயக்ரீவரை தாம் ஆராதிக்கும்படியாக நேர்ந்த பாக்கியத்தினை எண்ணி எண்ணி மகிழ்ந்தார்.  பல அதிசயங்கள் இதன் பின்னர் நடைந்தேறின.  ஸ்வாமி தேசிகர்  வைராக்யசீலராக, ஞானப்பிழம்பாய் திகழ்ந்தார்.
 
ஒருசமயம் இவருடன் வித்யாப்யாஸம் ஒன்றாக படித்து விஜயநகர மன்னரிடத்தில் மந்திரியாகயிருந்த வித்யாரண்யர் என்பவர் தேசிகனை தம்மிடத்து வா, கஷ்டபடாமல் இருக்கலாம் என்று அழைக்கின்றார்.  அதனை மறுத்து, அதற்கு பதிலாக
காஞ்சீபரத்தில் தேவாதிதேவனே ஆலயம் கொண்டிருக்கையில் தமக்கு ஒரு குறைவுமில்லையென்ற ஆழ்ந்த கருத்துடைய ‘வைராக்ய பஞ்சகம்” என்னும் ஐந்து சுலோகங்களை அனுப்புகின்றார்.  இதனை நாமும் கற்றுணர்ந்தால் வாழ்வில் நிறைவடைவோம்.
 

 

ஸ்ரீரங்கத்தில் சில மாயாவாதிகள் ஸ்ரீராமானுஜ சித்தாந்தத்தை எதிர்த்து வாதம் செய்ய அங்குள்ள ஸ்ரீவைஷ்ணவர்களை அழைக்கின்றார்கள்.  இவர்கள் தாங்களுடைய வாதம் செய்ய முடியாவிட்டால் எல்லோரும் தங்களுடைய கொள்கைகளை
ஏற்கவேண்டுமெனவும் தாங்களது மார்க்கத்திற்கு வரவேண்டுமெனவும் ஆர்ப்பணித்தனர்.  (அந்த காலத்தில் இராமானுஜ தர்ஸனத்தினை நிலைநாட்டுவதற்கு எவ்வளவு சிரமம் பாருங்கள்.  நாம் ஜெயித்தால் அவர்கள் வைஷ்ணவர் ஆவாகள்.  தோற்றலோ…. அரங்கனே தோற்றது போல்தான்.  நம் முன்னோர்கள் அறிவுச்சுடர்களாயிருந்தனர்.  ஆழ்பொருளை நன்கறிந்தவராயிருந்தனர்.  தினமும் இவனது திருவாய்மொழி உள்ளிட்ட ப்ரபந்தங்களை வாசித்தும், கேட்டும் தம் அறிவினை சீராக வைத்திருந்து மஹாஞானிகளாயிருக்கவே வேதாந்தி உள்ளிட்ட பலரையும் வென்று எம்பெருமானார் தர்ஸனத்தினை மேலும் வளர்த்து மெருகேற்றினர்.  அவர்கள் வளர்த்து ஆழமாக நிலைநாட்டியதின் பலன் நாம் இன்று பெரியோர் உபந்யாஸம் செய்ய கேட்டு ஆனந்தமாக அனுபவிக்கின்றோம்!  (தற்சமயம் இது கூட நம்மால் முடியாது போய்விட்டது.  வேண்டாததிற்கெல்லாம் பிரதான்யம் கொடுத்து, மணிக்கணக்கில் தொலைக்காட்சிப்பெட்டியின் அருகில் அமர்ந்து எதைப் பெறவேண்டுமோ அதைவிடுத்து பெருஞ்சுமையாய் வியாதியையும், கண்பார்வை நோயும் பெற்று துன்புறுகின்றோம்). 
 
அந்த நேரத்தில் சுதர்ஸனபட்டர் (இவர் ஸ்ருதப்ராகாசிகை என்னும் அற்புதமான க்ரந்தத்தினை இயற்றியவர்.  ச்ருதம் என்றால் கேட்கப்பட்டது.  இவரது ஆச்சார்யரான நடாதூர் அம்மாள் என்ற மஹாஞானியால் ஸ்ரீபாஷ்யரஹஸ்யார்த்தங்களை விடாது கேட்டு அதன் பயனாக பிரகாசமாக அதனை ஒரு நூலாகபடைத்ததால் ச்ருதபிரகாசிகை என்று அவரது ஆச்சார்யன் நடாதூர் அம்மாள் இதற்கு திருநாமமிட்டார்.) மற்றும் பிள்ளைலோகாச்சார்யார், அவரது தம்பி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்ஆகிய ஞானவான்கள் பலரிருந்த நேரம்.

ஆயினும் ஸ்ரீசுதர்ஸனபட்டர் ஸ்வாமி தேசிகரையே வாதிடச் செய்கின்றார்.  வாதயுத்தம் ஏழு நாட்கள் கடுமையாக நடந்தது.
அப்பண்டிதர் அனைவரும் தோற்றனர்.  ஸ்வாமி தேசிகனையே ஆச்சார்யனாக அடைந்தனர்.  இந்த வாதம் நடந்த ஏழு நாட்களிலும் தேசிகரின் சிஷ்யரான பேரருளாளையன் என்பவர் இதனை விடாது எழுதிவந்து தொகுத்து வைத்தார்.  தேசிகர் அதனை தாம் பரிசீலித்து அதற்கு ‘சததூஷணி” என்று பெயரிட்டார். 
 

 

இந்த நிகழ்ச்சிக்குப்பின் ஸ்வாமி தேசிகன் ஸ்ரீரங்கத்திலேயே எழுந்தருளியிருக்கலானார்.  இராமானுஜ ஸித்தாந்த ப்ரவசனம் செய்துகொண்டு சிஷ்ய ஸம்ருத்தியுடன் சாஸ்திர சம்பிரதாய ரஹஸ்யங்களைத் திரட்டி கலக்கமற போதித்து வந்தார்.

ஸ்ரீசுதர்ஸனபட்டர், பிள்ளைலோகாச்சார்யார் போன்ற ஆச்சார்யர்களும் இவரிடத்து மிக்க அன்போடு அளவளாவி ஆதரித்து வந்தனர்.
ஸ்ரீரங்கநாதன் இவருக்கு அர்ச்சகமுகனே ‘வேதாந்தாச்சார்யர்” என்னும் விருதையும், ஸ்ரீரங்கநாச்சியார் ‘ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர்;” எனும் விருதையும் அனுக்ரஹித்துக் கொண்டாடினர். 
 
ஸ்வாமி ஸ்ரீதேசிகன் ஸ்ரீரங்கநாதனுடைய பாதுகை ப்ரபாவத்தினை ஒரே நாள் இரவில், கடைசி ஒரு ஜாமத்தில்,  யாராலும் சாதிக்க முடியாத,  1000 ஸ்லோகங்களடங்கிய பாதுகா ஸஹஸ்ரம் என்னும் க்ரந்தத்தினையருளிச் செய்தார் இந்த கவிதார்க்கிக ஸிம்ஹம். (பெருமாளின் திருவடிகளை விட இதன் பிரபாவம் உயர்ந்தது.  இதனை தினமும் ஒரு சுலோகம் வீதம் படித்துணர்ந்தாலும் போதும் – இதன் பயன் நம்மை உய்விக்கும்)
 
தேசிகன் தென்னாட்டிலுள்ள சில திவ்ய க்ஷேத்திரங்களை தரிசித்து, காஞ்சி சென்று அங்கு அச்சமயம் கோவிலில் ஆதிக்கத்திலிருந்த சிலரால் துன்புறுத்தப்பட்டார்.  . தம் மனைவி, மற்றும் மகனுடன் கர்நாடகாவில் காவிரிக்கரையோரம் அமைந்துள்ள ஸத்யாகாலம் எனும் அமைதியான ஊரில் தம் சிஷ்யர்களோடு கூடியிருந்தார்.  பின்னர் தம் மனைவியையும், மகனையும்
ஸத்யாகாலத்திலேயே விட்டுவிட்டு, ஏதோவொரு உந்துதலினால், ஸ்ரீரங்கம் திரும்புகின்றார்.  சிலகாலம்தான் சென்றிருக்கும்.

 

தமமை எது உந்தியது? ஏன் உந்தப்பட்டோம்? என்பதனையுணரச்செய்தது அந்த துயரச்சம்பவம்.  அது ஸ்ரீரங்கத்தின் மிக இருண்ட காலம்….

 

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: