Srirangapankajam

September 14, 2008

PESUM ARANGAN-110

Filed under: PESUM ARANGAN — Tags: , — srirangapankajam @ 9:53 pm

Chapter-110

10/09/2008

 

வேதங்கள் அனாதியானவை அதாவது ஆதியும் அந்தமும் அற்றவை.

அவற்றிலிருந்து சாஸ்திரங்கள் உண்டாயின.  எவ்வளவு காலம் முயன்றாலும் கரைகாண முடியாத சமுத்திரம் சாஸ்திரங்கள். 

 

வெகுவிரிவான இச்சாஸ்திரங்களை நம் வைணவம் பரம்பரையாக வந்த ஆச்சார்யர்களின் மூலமாகவே ஒரளவு தெரிந்து கொள்ள இயலும்.

ஆச்சார்யன் என்பவர் யார்?

 

ஆசிநோதி ஹி சாஸ்த்ரார்தாநாசாரே ஸ்தாபயத்யபி !
ஸ்வயமாசரதேயஸ்து ஆசார்யஸ்ஸோபிதீயதே !!

எவனொருவன் சாஸ்திரார்த்தங்களை சேகரித்துத் தானும் அவற்றின்படி நடந்துகாட்டிப் பிறரையும் ஆசாரத்தில் நிலைநிறுத்துகின்றானோ அவனே ஆச்சார்யன் எனப்படுவான்.

 

இந்த ஆச்சார்யர்களில் சிலர் தாம் கற்றுணர்ந்ததை தம்மிடம் வந்த சிஷ்யர்களுக்கு தெளிவாக உபதேசித்து வருவார்கள். அதற்கு மேல் இவர்கள் வெளிவர மாட்டார்கள். 

சில ஆச்சார்யர்கள் தம்மை சுற்றியிருக்கும் பிரதேசங்களில் அனைவராலும் கொண்டாடப்பட்டு அந்த பிரதேசங்களில் ஒரளவு பிரவசனங்கள் செய்து பிரபலமாயிருப்பார்கள்.

சில ஆச்சார்யர்கள் அவதார புருஷர்கள்.  நாடு முழுதும் சீர்படுத்தி, அநேக விசேஷ க்ரந்தங்களையருளிச் செய்து, தேசமெங்கும் ஒரு ஆன்மீகத் தாக்கத்தினை ஏற்படுத்தி செம்மைச் செய்வர்.  இவர்கள் ஸர்வக்ஞர்கள்.  அனைத்தும் அறிந்தவர்கள்.   பரமாச்சார்யர்கள்.  இவர்கள் தோன்றுவது அரிது. 

 

ஸ்ரீமந் நாதமுனி, ஸ்ரீமத் யாமுனாமுனி, ஸ்ரீமத் ராமானுஜர் போன்றவர்கள் இத்தகையவர்கள். 

 

இதில் காஞ்சி நகரம் ஸ்ரீமத் ராமானுஜரையும் மற்றும் பல மஹாபுருஷர்களையும் உலகுக்கு அடைத்த பெருமையுடையது. 

 

ஸ்ரீமத் நிகமாந்த மஹாதேசிகன் என்னும் மஹா புருஷனையும் உலகிற்களித்த பெரும் பாக்கியத்தினை உடையது.

 

எங்கு அவதரித்தாலும் இந்த மஹாபுருஷர்கள் நாடியது, தேடியது, அடைந்தது அனைத்துமே அரங்கமாநகரில்தான். 
அரங்கனிடத்தில்தான்.

 

சாஸ்திரம் சொல்லுகின்றது.

 

ஸூதூரமபி கந்தவ்யம் யத்ர பாகவதஸ்தித:

 

எந்தவிடத்தில் ஒரு பரமபாகவதனிருக்கின்றனோ, நெடுந்தூரமாயினும் அவ்விடத்திற்குச் செல்ல வேண்டும்.

 

இந்த பரமபாகவதர்கள் எங்கிருப்பார்கள்?.  எங்கு பரத்வமான மஹாவிஷ்ணு பரமபுருஷனாக அர்ச்சையில் சேவைத் தருகின்றானோ அங்குதானேயிருப்பார்? இங்கு பரம பாகவதர்களுக்கும் குறைவில்லை.  அந்த பரமனின் கிருபைக்கும் குறைவில்லை.

 

இதுதான் வைணவத்தின் வேர்.  அடியார்கள் வாழ அரங்கநகர் வாழ என்ற கோஷம்தான் எங்கும். 

பெரும்பாலான ஆச்சார்யர்கள் தர்ஸன நிர்வாகத்தினையேற்று வைணவத்தினை பரப்பினர். 

 

இதற்கு ஒரு பெரும் இடர்பாடு ஏற்பட்டபோது
இரு மஹாபுருஷர்கள் இந்த ஸ்ரீரங்கஸ்ரீயைக் காப்பாற்றினர்.  அவர்கள் பிள்ளைலோகாச்சாரியாரும், நிகமாந்த மஹாதேசிகருமவார்.

 

பிள்ளைலோகாச்சாரியார் மற்றும் தேசிகர் ஆகிய இந்த இரு ஆச்சார்ய புருஷர்களும், இதற்கு முன்வந்தவர் அனுபவித்திராத வேதனையை  அனுபவித்து அரங்கனையும், எம்பெருமானார் தர்ஸனத்தினையும் மீண்டும் நிலைநாட்டினர்.

 

காஞ்சி நகரில் ‘தூப்புல்” எனும் புண்ணிய க்ஷேத்திரம்.  இங்கு அனந்தசூரி என்னும் வைணவ பிராமணருக்கும், தோதாரம்மன் எனும் அவரது தர்மபத்தினிக்கும் (கி.பி.1268ம் வருடம்) விபவ புரட்டாசி சுக்லபட்சத்தில் சிரவண நட்சத்திரத்தில் அவதரித்தார்.  இவரைத் திருமலையிலுள்ள கண்டையின் (திருமணியின்) அவதாரமாகச் சொல்லுவர்.

இவருக்கு வேங்கடநாதன், வேதாந்த தேசிகர் என்று இரு இயற்பெயர்கள்.

 

 

 

                                                             -Posted on 10th September’ 2008-

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: