Srirangapankajam

September 10, 2008

PESUM ARANGAN-109

Filed under: PESUM ARANGAN — Tags: , , , — srirangapankajam @ 5:35 am

Chapter-109

 08/09/2008

 

ஸ்ரீஇராமனும் கோசலையின் வயிற்றில் 12 மாதம் கர்ப்பவாஸமிருந்தார்.

ஸ்வாமி பிள்ளைலோகாச்சாரியாரும் தம் தாயார் ஸ்ரீரங்கநாச்சியாரின் வயிற்றில் 12 மாதம் கர்ப்பவாஸமிருந்தார்.

ஸ்ரீஇராமனுக்கு இலக்குவன் போல் பிள்ளைலோகாச்சாரியரிடத்து அவரது திருத்தம்பி அழகியமணவாளப்பெருமாள் நாயானாரும்

 

தம்பியுடன் தாசரதியானானுஞ் சங்கவண்ண
நம்பியுடன் பின்னடைந்து வந்தானும் – பொங்குபுனல்
ஓங்குமுடும்பை உலகாரியனும் அறந்
தாங்கு மணவாளனுமே தான்

 

என்னும்படி  இணைபிரியாது புகழோடுயிருந்தனர்.

 

பிள்ளைலோகாச்சாரியார்,  தனிப்ரணவம், தனித்வயம், தனிசரமம், பரந்தபடி, ச்ரிய:பதிப்படி, யாத்ருச்சிகப்படி, முமுக்ஷூப்படி, ஸம்ஸாரஸாம்ராஜ்யம், ஸாரஸங்க்ரஹம், தத்வத்ரயம், தத்வசேகரம், ப்ரபந்தபரித்ராணம், ப்ரமேயசேகரம், அர்ச்சிராதி,  அர்த்தபஞ்சகம், நவவிதஸம்பந்தம், நவரத்நமாலை, ஸ்ரீவசனபூஷணம் முதலான அநேக க்ரந்தங்களையருளிச்
செய்துள்ளார். 

 

இவரது திருவடிகளில் கூரகுலோத்துமதாஸர் நாயனும்,  மணப்பாக்கத்து நம்பி, கொல்லிகாவலதாஸன், அழகிய மணவாளப்பெருமாள் பிள்ளை, கோட்டூர்வண்ணர், திருமலையாழ்வார்,  விளாஞ்சோலைப்பிள்ளை மற்றும் திருமலையாழ்வாரின் திருத்தாயார் முதலானோர் உள்பட ஏராளமானோர் ஆஸ்ரயித்திருந்தனர்.

 

பிள்ளைலோகாச்சாரியார்  ரஹஸ்யார்த்தங்களை தம்முடைய சீடர்களுக்கு,  அந்தகாலத்தில் மிக மிக ஏகாந்தமாயிருந்துள்ள ஸ்ரீகாட்டழகியசிங்கர் கோவிலில் தம் சீடர்களுக்கு உபதேசித்துள்ளார்.

(இந்த காட்டழகியசிங்கர் கோவில் ஸ்ரீரங்கம் ரயில்வேநிலையத்தின் அருகேயுள்ளது.  ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் பிரதிஷ்டை ஆவதற்கு முன்னமேயே தோன்றிய கோவிலிது.  அக்காலத்தில் ஸ்ரீரங்கநாதர் வருவதற்கு முன் பல முனிவர்கள் தபஸ், யாகம் முதலானவற்றைச் செய்து கொண்டிருந்தனர்.  அப்போது வனாந்திரமாகயிருந்தபடியால் யானைக்கூட்டத்தின் அட்டகாசத்தினைக் கட்டுபடுத்த இந்த நரஸிம்ஹரை பிரதிஷ்டைச் செய்ததாகச் சொல்லுவர்.  வரப்ரஸாதி இவர்.  இப்போது சுமார் 10 வருடங்களாக கூட்டம் பெருகியுள்ளது.  முன்பெல்லாம் ஏகாந்தமாக மிக மிக அமைதியாயிருக்கும். அடியேன் நிறைய நாகங்களை இங்கே கண்ணுற்று இருக்கின்றேன்.  யானைக்கூட்டத்தினை அடக்கவந்து நாகக்கூட்டத்தினைப் பெருக்கச்செய்தாரோ என்று எண்ணுவேன்!  பிள்ளைலோகாச்சாரியாரின் காலத்தில் எப்படியிருந்திருக்கும்?)

 

மணற்பாக்கம் என்ற ஊரில் ஒரு ஸ்ரீவைஷ்ணவர்  (மணற்பாக்கம்நம்பி..ok?) பேரருளானிடத்தில் அபாரபக்தி.  இந்த நம்பியின் கனவில் அருளாளன் தோன்றி விசேஷ கடாக்ஷம் செய்கிறான். 

 

மேலும் ”நீர் போய் இரண்டாற்றுக்கு நடுவேயிரும்! இன்னமுமக்கு சிலமுக்கிய ரஹஸ்யார்த்தங்களை விசேஷமாக நாமங்கேச் சொல்லுகிறோம்” என்று சாதித்தருளினார். 

 

அவர் ஸ்ரீரங்கத்திற்கு வந்து இந்த கோவிலையும் அறிந்து ஸ்ரீலக்ஷ்மீ நரஸிம்ஹரை தரிசிக்கின்றார்.  வெளியே பிரதட்சிணமாகவருகையில் அங்கு பிள்ளைலோகாசாரியார் ரஹஸ்யார்த்தங்களை அருளிச்செய்து கொண்டிருக்கின்றார்.  இவருக்கு இவையாவும் தமக்கு பேரருளாளன் அருளிச்செய்ததிற்கு இணையாகயிருக்க திகைக்கின்றார்.   போரவித்தராய் இவர்தம் திருவடிகளில் வீழ்ந்து ‘அவரோ நீர்?(அந்த பேரருளாளன் நீர்தானே?)
என்று வினவுகின்றார்.  ‘ஆவது எது?” என்று புரியாமல் பிள்ளைலோகாசாரியார் கேட்கின்றார்.  இவர் தமக்கு இவ்வர்த்ததினை ஒரு வார்த்தைக்கூட தப்பாமல் பேரருளாளன் அருளியதையும் மேற்கொண்டு இங்கு அருளுவதாக கூறியதையும் சொல்லி மெய்சிலிர்க்க விவரிக்கின்றார் நம்பி!  வியக்கின்றார் பிள்ளை!. 

 

அவரையும் அபிமாநித்து அவருக்கும் ரஹஸ்யார்த்தங்களை அருளுகின்றார். 

 

இப்போது அரங்கன் நம்பியின் கனவில் தோன்றுகின்றான்.  ‘பிள்ளையருளிச் செய்யும் இவ்வர்த்தங்கள் மறந்து போகாதபடி இவற்றையெல்லாம் ஒரு ப்ரபந்தஸ்தமாக்கச் (ப்ரபந்தம் போன்று ஏடுபடுத்த) சொன்னோமென்று நீர் பிள்ளையிடத்துச் சொல்” என்று கட்டளையிடுகின்றார். 

 

நம்பி பிள்ளையிடத்து இதனை விண்ணப்பிக்க, ‘ஆனால் அப்படியேச் செய்வோம்” என்று பிள்ளை மிகவும் உகந்தருளியதுதான் ஸ்ரீவசனபூஷணம். 

 

அரங்கனின் ஆணையினால் அருளப்பட்டது.

 

இந்த ஸ்ரீவசனபூஷண ஸ்தாபனார்த்தமாக,  இவரின் திருத்தம்பி ‘ஆச்சார்யஹ்ருதயம்” என்னும் க்ரந்தத்தினை அருளிச்செய்துள்ளார்.  இதனைத் தொண்டரடிப்பொடியாழ்வார் திருமாலைச் சொன்னாற்போன்று அரங்கனிடத்து விண்ணப்பம் செய்கின்றார்.  பெருமாள் ச்ரோதவாய் (கேட்பவராய்) அழகிய மணவாளப்பெருமாள் வாக்தவாக (சொல்பவராய்) ஆகின்றார்கள். 

 

அரங்கன் மிகவே உகந்து தம் ஸர்வபரிஜனங்கள், பரிச்சதங்களோடே ப்ரம்ஹரதம் பிரஸாதித்து இவரை கௌரவித்து இவர்தம் திருமாளிகைக்கு அனுப்புகின்றார். இதனைக்கண்ட பிள்ளைலோகாச்சாரியார்  ‘வளர்த்ததினால் பயன் பெற்றேன்” என்று அதிசந்தோஷத்துடன் ஆலிங்கனம் செய்துக் கொள்கின்றார் தம் திருத்தம்பியை.

 

பிள்ளைலோகாச்சாரியாரும் அவர்தம் திருத்தம்பி அழகிய மணவாள பெருமாள் நாயனாரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே, பிரஹ்மச்சாரிகளாய்,  அரங்கனே கதியென்று அன்போடு இருந்தளவில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் தமது 100வது வயதில்
(பிறந்தது கி.பி. 1208 விபவ மார்கழி அவிட்டம் – திருநாடு அலங்கரித்தது கி.பி.1308ஆம் வருடம்) திருநாடு அலங்கரித்தார்.

 

அவரை விட மூன்று வயது மூத்தவரான, ஆனால் பெற்றோரைப் போன்று அன்பு செலுத்தி பேணிக் காத்தவரான பிள்ளைலோகாச்சாரியார் அவர்தம் திருமுடியை தம் மடியில் வைத்துக்கொண்டு தம்பியின் பிரிவினைத் தாங்கமுடியாமல் மிகவும் சோகார்த்தராய் கண்ணீர் விட்டு கதறுகின்றார்.

 

மாமுடும்மை மன்னு மணவாள வண்ணலொடு
சேமமுடன் வைகுந்தஞ்சென்றக்கால் – மாமென்று
தொட்டுரைத்த சொல்லுயந்துயந்தன்னினாழ் பொருளும்
எட்டேழுத்து மிங்குரைப்பாரார்.

 

என்கிறபடியே பலவாறு புலம்பி கலங்குகின்றார்.  தமது 103வது வயதில் தம் திருத்தம்பிக்கு சரமகைங்கர்யஞ் செய்து திருவத்யயனமும் நடத்தியருளுகின்றார்.

 

 

                                                              -Posted on 8th September’ 2008-

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: