Srirangapankajam

September 6, 2008

PESUM ARANGAN-106

Filed under: PESUM ARANGAN — Tags: , — srirangapankajam @ 7:18 am

Chapter-106

 

 நடுவில் திருவீதிப்பிள்ளைப் பட்டர் தம் ஆச்சார்யரான நம்பிள்ளை பரமபதித்தற்கு தலைக்ஷவரம் செய்து திருமுடி விளக்கியமைக்கு அவரது தம்பி பட்டரைப் பார்த்து, ”திருக்கலிகன்றி தாஸர் பரமபதப்ராப்தி பண்ணினதுக்கு எங்கள் கூரகலத்திலே பிறந்தவரொருவர் தலைக்ஷவரம் பண்ணிக்கொணடது அவசியமானதுதானா? கூரக்குலத்துக்கு இழுக்கன்றோ?” என்று சொல்ல, பட்டரும் அவரைப் பார்த்து ‘அப்படியா? ஐயோ! உங்கள் கூரக்குலத்துக்கிழுக்காய் பிறந்தனே!  இக்குறையை நீர் என்றைக்குத் தீர்த்துக் கொள்ளப் போகிறீர்?” என்று கேட்டார்.  (கூரத்தாழ்வாரும் அவரது மனைவி ஆண்டாளும் இருந்த பண்பு எத்தகையது! எவ்வளவு எளிமை! ஸ்ரீவைஷ்ணவர்களிடத்தில் எத்தனை மரியாதை வைத்திருந்தார்.  அவரது கண்களைப் பறித்த பின்பு இராமனுஜர் வருத்தப்படுகையில் ‘ஏதோ ஒரு ஸ்ரீவைஷ்ணவர் நெற்றியிலுள்ள திருமண் கோணலாகயிருக்கின்றதே என்று நினைத்திருப்பேன்! அதுதான் என் கண்கள் பறிபோக காரணமாயிருக்கும்” என்று பணிவோடு சொன்னாரே!  – ‘நான் பெற்ற பேறு அந்த நாலூரானும் பெற வேண்டும்” என்று அநியாயம் செய்த அவனும் உய்ய வேண்டும்.  வைணவமும் வைணவனும் எக்காரணம் கொண்டு தாழ்வடையக் கூடாது என்று எவ்வளவு துன்பங்களைத் தாங்கிக் கொண்டார்?  அவர் செய்த தியாகத்தில் ஒரு சிறு துளிக்கூடச் செய்யாமல் கூரகுலத்திற்கே இழுக்கன்றோ என்று அந்த குலத்தில் உதித்த செருக்கினால் பேசுகின்றார்.  நாம் நம் முன்னோர்கள் செய்த தியாகங்களை, கைங்கர்யங்களை, என்றும் நினைக்க வேண்டும்.  அதில் ஒரு சிறு துளியாவது செய்யவேண்டும்.  ஏதும் செய்யாமல் குலச்செருக்குற்று நடந்தால் படுகுழியில் விழுவது திண்ணம்). 

 

இந்த வழக்கு நம்பெருமாளிடத்துச் சென்றது.

நம்பெருமாள் பட்டரிடத்து அர்ச்சகமுகநே

 ‘நாமிருக்க நீர் இப்படிச் செய்யலாமா?” என்று கேட்கின்றார்.  அதற்கு பட்டர்

”நாயன்தே! அடியேன் செய்த முறைக்கேட்டைப் பொறுத்தருள வேண்டும்!  நம்பிள்ளை திருநாட்டுக்கெழுந்தருளிய போது
அவரது திருவடிகளிலே ஆஸ்ரயித்த நான், கூரத்தாழ்வானுடைய வழியில் வந்த நான் அவரது குணவிசேஷங்களை துளியாவது கொண்டிருப்பேனாயின், தாஸ்யர்களுக்கே உரித்தான ‘மோவாயும், முன்கையும்” சேர்த்து க்ஷவரம் பண்ணிக்கொள்ள வேண்டியிருக்க, சிஷ்யர்களுக்கு உரித்தான தலைக்ஷவரம் மட்டும் செய்து கொண்டது தவறுதான்.  தேவரீர் க்ஷமித்து அருள வேண்டும்”
என்று விண்ணப்பம் செய்ய,  அரங்கனுக்கு பரம சந்தோஷம்.  பட்டருக்கு தீர்த்தம், திருமாலையுடனே, பரிவட்டமும் சாதித்து அன்புடனே உபசரித்தருளினார்.  பட்டரும் நம்பிள்ளைக்கு நிறைவாக திருவத்யயனம் நடத்தினார்.  கடைசிவரை நம்பிள்ளையின் திருவடிகளையே தஞ்சமென ஆஸ்ரயித்து ஞானியாக வாழ்ந்தார்.

 

திருக்கண்ணமங்கை பெருமாளைப்பார்த்து,

கலியன் (பெரிய திருமொழி 7-10-10ல்) பாடுகின்றார்.

 

‘மெய்ம்மை சொல்லில் வெண்சங்கம் ஒன்று ஏந்திய கண்ண!
நின்தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள்தானே!”

 

கண்ணன் புன்முறுவலிக்கின்றான். 

 

கலியனை நோக்கிச் சொல்கின்றான்.

 

இது இந்த அர்ச்சாவதாரத்தில் இயலாது.   நீ கலியுகத்தில் கார்த்திகையில் கார்த்திகை ‘திருக்கலிகன்றிதாஸர்” என்ற திருநாமத்துடன் அவதரிக்கப் போகின்றாய்.  நான் ஆவணி ரோகிணியில் அவதரிப்பேன். அப்போது நீ சொல்கின்ற கவியின் பொருளைக் கற்பேன் என்றருளுகின்றார். 

 

அந்த கலியனின் அவதாரம்தான் நம்பிள்ளை. 

 

கிருஷ்ணரின் மறுஅவதாரம் கிருஷணசூரி எனும் பெயருடைய இந்த பெரியவாச்சான் பிள்ளை.  இவர் கி.பி.1167ம் ஆண்டு, ஆவணி மாதம் கிருஷ்ணாஷ்டமியன்று ரோகிணி நட்சத்திரத்தில், தஞ்சை ஜில்லா, சங்கநல்லூர் எனும் சிறுகிராமத்தில் யமுனாச்சார் எனும் பூர்வசிகை வைணவருக்கும் நாச்சியரம்மனுக்கும் பிறந்தார்.  ‘பெரிய’ எனும் பெரியபெருமாளுக்கும் அவரைச் சார்ந்திருப்பவைகளுக்கும், மிகச் சிலருக்குமேயுள்ள அடைமொழியை தானும் பெற்றவர்.

                          

 

நம்பிள்ளைக்குப் பிறகு பெரியவாச்சான் பிள்ளை தர்ஸன நிர்வாகத்தினை ஏற்றுக்கொள்கிறார்.   மஹா ஞானியாக திகழ்ந்தார்.  வியாக்யானத்தில் தன்னிகரற்றவர். 

ஒரு நாள் பெரியவாச்சான் பிள்ளையிடத்து, கோஷ்டியிலிருந்த ஒருவர் 

 

 ‘நாம் லீலைக்கு விஷயமோ? இரக்கத்திற்கு விஷயமோ?”
என்று கேட்கின்றார். 

 

அதற்கு அவர், 

 

”அஹங்காரமேயில்லாத நித்யரும், அனைத்தும் துறந்த முக்தரும் அவன் இனிமைக்கு விஷயமாகிறார்கள். 

 

அஹங்காரம், தான் என்ற மமதையுடைய மமகாரமுடைய சம்ஸாரிகள் அவனது லீலைக்கு விஷயமாகிறார்கள். 

 

எப்போதும் ஆச்சார்யனையே ஆஸ்ரயித்து, ஆச்சார்ய கடாக்ஷத்தினாலும், பகவத் கிருபையினாலும், நமது அஹங்காரம், மமகாரம் கழிய வேண்டும் என்று இருக்கின்ற நாம் அவனது இரக்கத்திற்கு விஷயமாகிறோம்” என்றருளுகின்றார்.

 

 
 

                                                              -Posted on 4th September’ 2008-

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: