Srirangapankajam

September 3, 2008

PESUM ARANGAN-105

Filed under: PESUM ARANGAN — Tags: , , , , , , — srirangapankajam @ 4:42 pm

 

Chapter-105

 

 நம்மாழ்வார் இராமனுஜரைப் பற்றி முன்னமேயே அறிவித்ததுப் போல் நம்பிள்ளை மணவாள மாமுனியின் அவதாரத்தினை முன்கூட்டியே அறிவிக்கின்றார்.

கந்தாடைதோழப்பரின் கனவில் பேரருளாளன் தோன்றி

 

ஜகத் ரக்ஷாபரோந்தோ ஜநிஷ்ய த்யபரோமுநி: !
ததரஸ்யாஸ்ஸதாசரா ஸாத்விகாஸ்தத்வதர்ஸிந: !!

 

(உலகத்தைக் காப்பாற்றுவதில் ஊற்றமுடைய திருவனந்தாழ்வான் (இராமனுஜமுனிவராக மட்டுமல்லாது) மற்றொரு முநிவராகவும் அவதரிக்கப் போகிறார். (அப்போது) அவரை ஆஸ்ரயிக்குமவர்கள் ஸதாசாரமும் ஸத்வகுணமும் தத்துவஞானமும் உடையவராயிருப்பர்)  என்று அருளிச்செய்தார். 

 

இவர் தம் அவதாரத்தையறிந்த நம்பிள்ளை, வடக்குத் திருவீதிப்பிள்ளையருளிய ஈட்டினை, ஈயுண்ணிமாதவப்பெருமாளுக்கு அருளுகையில், ”திருவனந்தாழ்வான் எம்பெருமானாராய் அவதாரமானார் போல் இன்னொரு அவதாரஞ் செய்யப்போகிறார்.  அவர் முப்பதாறாயிரப் பெருக்காய் இத்தை ப்ரவர்த்திப்பிக்கப் புகுகிறார்.” என்று மணவாளமாமுனிகள் அருளிச்செய்யவிருக்கும் ஈடு முப்பத்திறாயிரப்படிப் பற்றி முன்னமேயே அறிவிக்கின்றார்.

 

(இதையெல்லாம் அறிவித்தவர் தமக்குப் பின்னால், மணவாளமாமுனியின் காலத்திற்கு முன்னால், வரப்போகும் துலுக்கர்கள் படையெடுப்பைப் பற்றியோ, அரங்கன் ஸ்ரீரங்கத்தினை விட்டு வெளியேறப் போவதைப் பற்றியோ, ஸ்ரீரங்கத்தின் இருண்ட காலத்தினைப் பற்றியோ தம் தீர்க்கதரிசனத்தில் அறியாமலிருந்திருப்பாராயென்ன?  நன்றாகவே அறிந்திருப்பார்.  இருந்தாலும் மஹான்கள் நல்லதையேதான் நினைப்பார்கள். நல்லதையேதான் சிந்திப்பார்கள் – பேசுவார்கள் – அறிவிப்பார்கள்.)

 

கி;.பி. 1252ம் வருடம் – ஊரும் நாடும் உலகமுமெல்லாம் கலியின் இருளை நீக்கி பேரின்பவெள்ளம் பெருகும்படி
எல்லோரையும் திருத்தி,  திருமாலுக்கேயடிமையாக்கி வாழ்ந்தருளிய நம்பிள்ளையை அழைத்துப்போக பரமபதத்திலிருந்து விஷ்ணுதூதர்கள் வருகின்றனர். 

 

நம்பிள்ளை நடுவில் திருவீதிப் பிள்ளையின் மடியில் தலையை வைத்தும், பின்பழகிய பெருமாள் ஜீயர் மடியில் தம் பாதங்களை வைத்தும், தம் ஆச்சார்யனரான நஞ்சீயர் திருவடிகளை தியானித்த வண்ணம் கண்மூடி அந்த நேரத்திற்காகக் காத்திருக்கின்றார். 

 

 நம்பிள்ளையின் குமாரரான ‘தூவியம்புள்ளை”  (நம்பிள்ளைக்கும் அவரது இளைய மனைவிக்கும் பிறந்தவர்) கண்ணீர் பெருக்கி சிந்தைகலங்கி நிற்கின்றார். 

 

நம்பிள்ளையின் ஸ்ரீபாதமுதலிகள் அனைவரும்
‘சூழ்விசும்பணிமுகில்” முதலாக ஸேவித்துக் கொண்டிருக்கின்றனர்.  வேதவிற்பன்னர்கள் ப்ரஹ்மவல்லி அனுசந்தித்துக் கொண்டிருக்கின்றனர். 

 

வடக்குத்திருவீதிப்பிள்ளை, நடுவில் திருவீதிப்பிள்ளைப் பட்டர், பெரியவாச்சான்பிள்ளை, பின்பழகியபெருமாள் ஜீயர் ஆகிய அந்தரங்க சீடர்களெல்லாரும் தம் ஆத்மாவே பறிபோனதுபோல் மௌனமாக மனதினுள் கதறியழுகின்றனர்.

நம்பிள்ளையை இவ்வளவு நாளும் இயக்கிக்கொண்டிருந்த அந்த ஜீவாத்மா மெல்ல அவரது பிரஹ்மந்த்ரத்தினைத் திறக்கின்றது.
(பிரஹ்மந்த்ரம் என்பது நமது மண்டையோட்டின் நடுவிலுள்ள பகுதியாகும்.  அந்த பகுதியில் வெடிப்புண்டாகின்றது)


விடுதலையடைந்த அந்த ஜீவன் அங்கு அழைத்துப்போக வந்த விஷ்ணுதூதர்களின் கைகளைப்பற்றி ஆனந்தமாக தம் ஆச்சார்யனைத் தேடிப் புறப்படுகின்றது.

 

அவரை அங்கு அனுப்பிய அரங்கன்,  இவ்வளவு நாளும் அதனைத் தாங்கிய அந்த சரீரத்திற்கு தம் பரிவட்டம், தாம் சாற்றிக் களைந்த மாலைகள் அனைத்தும் அனுப்பி வைத்துக் கௌரவிக்கின்றான். 

 

அரங்கனின் பரிகரமனைத்தும் வந்து ஸேவிக்கின்றனர்.

நம்பிள்ளையின் குமாரர்  ‘தூவியம்புள்ளை’யைக் கொண்டு விதிப்படி ஸம்ஸ்கரித்து அவரைப் பள்ளிப்படுத்துகின்றனர். 

 

நம்பிள்ளையின் சீடர்கள் அனைவரும், கூரத்தாழ்வாரின் பேரன் நடுவில்திருவீதிப்பிள்ளை உள்பட அனைவரும் தலைக்ஷவரம் செய்து திருமுடிவிளக்குவித்துக் கொள்கின்றனர்.

 

நம்பிள்ளை நம்மை விட்டு மறைந்தாலும் இன்றும் அவர் ஈடு உரைத்த இடமும்,  அரங்கனே கருவறை விட்டு வெளியே வந்து நம்பிள்ளையின் அருளுரையைக் கேட்ட இடமும்,   இன்னமும் அரங்கனின் திருக்கோவிலில்,  நம்மை விட்டு அகலாமல் உள்ளது.

 

 
 

                                                             -Posted on 2nd September’ 2008-

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: