Srirangapankajam

September 2, 2008

PESUM ARANGAN-104

Filed under: PESUM ARANGAN — Tags: , , , , , — srirangapankajam @ 11:14 pm

Chapter-104

 

முதலியாண்டான் வம்சத்தில் வந்த கந்தாடை தோழப்பர் போன்று, கூரத்தாழ்வான் வம்சத்தில் அவரது திருப்பேரனான நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர் என்பவரும் நம்பிள்ளையின் ஞானத்தினையும், அவரையண்டியிருக்கும் பாகவத ஸம்ருத்தியையும், புகழினையும், சிஷ்ய ஸம்பத்தையும் கண்டு பொறுக்கமாட்டாமல் நம்பிள்ளையை நிந்தை செய்த வண்ணம் இருந்துள்ளார்.  ஒருநாள் இந்த பட்டர் ராஜா அழைக்கச் செல்ல வேண்டியதாயிற்று.  இவர் தன்னுடன் கூட நம்பிள்ளையின் நெருங்கிய சீடரான பின்பழகியபெருமாள் சீயரையும் அழைத்துச் செல்கின்றார்.  ராஜா இருவரையும் எதிர்கொண்டழைத்து ஆசனத்தில் அமர வைத்து உபசாரங்கள் செய்கின்றான்.  அந்த ராஜாவிற்கு ஒரு சந்தேகம்.

 

அப்ரவீத் த்ரித ஸஸ்ரேஷ்ட்டாந் ராமோ தர்மப்ருதாம் வர:|
ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தஸராத்மஜம் ||
(நான் என்னை மநுஷ்யனாகவும் தஸரதன் பிள்ளை ராமனாகவும் நினைக்கிறேன்” என்று தர்மவான்களில் மேலான ராமன் தேவஸ்ரேஷ்ட்டர்களைக் குறித்துச் சொன்னான்)

 

இங்ஙனம் தம்முடைய பரத்வகுணத்தினை வெளிக்காட்டாமலிருந்த இராமபிரான்

‘கச்ச லோகாநநுத்தமாந்” என்று ஜடாயுவிற்கு மட்டும் மோக்ஷம்  கொடுத்தருளியது எங்ஙனே?”  என்று கேட்கின்றார். 

 

பட்டர் பதில் சொல்ல தடுமாறுகின்றார். 

 

ராஜாவின் கவனம் வேறு எங்கோ திரும்பும் சமயம் பார்த்து நம்பிள்ளையின் சீடர் பின்பழகிய பெருமாள் சீயர்

 

ஸத்யேந லோகாந் ஜயதி தீநாந் தாநேந ராகவ: !
குரூந் ஸூஸரூஷயா வீரோதநுஷா யுதி ஸாக்ரவாந் !!
(ராகவன் உண்மையுரைத்தலாலே உலகங்களை ஜயிக்கின்றான்.

எளியவர்களை கொடையினால் கவர்கின்றான். 

 

ஆச்சார்யர்களை கைங்கர்யத்தினால் கைவசப்படுத்துகின்றான். 

 

வீரனான அவன் போரில் எதிரிகளை வில்லினாலே வெல்லுகின்றான்)

 

என்ற ஸ்லோகத்தினைக் கூற அதனை மீண்டும் ராஜாவின் கவனம், பட்டரின் பக்கம் திரும்பும் சமயம், பட்டர் இந்த சுலோகத்தினைப் பிரமாணமாக கூறுகின்றார்.  விரிவாக வியாக்யானம் செய்ய,  ராஜாவிற்கு மஹா சந்தோஷம்.  ஆபரணங்களையும், விலையுயர்ந்த பட்டாடைகளையும் பரிசில்களாக தந்து ராஜமரியாதையுடன் பட்டரை அனுப்பி வைக்கின்றான். பின்பழகியசீயரின் புத்திக்கூர்மையைக் கண்டு, அவரது ஆச்சார்யரான நம்பிள்ளையின் அபாரஞானம் இப்போதுதான் புரிகின்றது நடுவில் திருவீதிப்பிள்ளைப் பட்டருக்கு.    பொறாமை ஒழிகின்றது.       பணிவு பிறக்கின்றது.  நேரே நம்பிள்ளையின் திருமாளிகைச் சென்று கண்ணீர் சிந்தி நம்பிள்ளையின் திருவடிகளில் வீழ்கின்றார்.  நம்பிள்ளை பட்டரை வாரியெடுத்து அணைத்து விசேஷ கடாக்ஷம் செய்தருளுகின்றார்.  தம் திருவுள்ளத்தில் தேங்கிக்கிடக்கும் அர்த்த விசேஷங்களையெல்லாம் இவருக்கு அருளுகின்றார்.  பட்டர் நன்றிபெருக்குடன் நம்பிள்ளையை விட்டு ஒரு க்ஷணம் கூடப்பிரியாது சந்தோஷமாக இவருடனேயே எழுந்தருளியிருக்கின்றார்.

 

இந்த பட்டர் நம்பிள்ளையின் திருவாய்மொழி உபதேசங்களை கேட்டு, தாம் ஒரு திருவாய்மொழி வியாக்யானம் எழுதுகின்றார்.  அதனை நம்பிள்ளையிடத்து சமர்ப்பிக்கின்றார்.  நம்பிள்ளைக்கு இதில் உடன்பாடில்லை. ‘திருவாய்மொழி நிமித்தமாக நாம் வாக்காலே சொன்னதை எழுதினீராகில் எம்முடைய சிந்தையில் தோன்றிய பொருளை எழுதியதாகுமோ?” (வாக்கால் சொல்வதை காட்டிலும் சில ரஹஸ்யமான மஹா அர்த்தங்கள் அவரது சிந்தையிலிருப்பதைச் சொல்கின்றார்) என்று இவர் எழுதியதை அங்கீகரிக்காமல் அத்தனை ஏடுகளையும் நீரைச் சொரிந்து கரையானுக்குக் கொடுக்கின்றார்.  (நன்கு காய்ந்த ஏடுகளுக்கு பரம சத்ரு தண்ணீர் – அந்த ஏடுகளின் மேல் தண்ணீரைத் தெளித்தாலே போதும் வீணாகிவிடும்!)

 

நம்பிள்ளை தம்முடைய ப்ரியமான சிஷ்யரான பெரியவாச்சான் பிள்ளையை ‘திருவாய்மொழிக்கு ஒரு வ்யாக்யானம் பண்ணும்” என்றருளுகின்றார்.  பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீராமாயண சங்கையிலே ஒரு வியாக்யானம் செய்தருளுகின்றார்.  இது நம்பிள்ளையின்
அன்புகட்டளையினால் பெரியவாச்சான் பிள்ளை அருளியது.

 

இதனைத் தவிர நம்பிள்ளையின் அந்தரங்க சிஷ்யரான வடக்குத் திருவீதிப்பிள்ளை நம்பிள்ளையின் வியாக்யானங்களை அநுசந்தித்து மிக நேர்த்தியாக அற்புதமாக ஒரு வியாக்யானம் எழுதுகின்றார்.  அது ‘ஸ்ருதப்ராகசிகை” என்ற வடமொழி க்ரந்தத்தினை ஒத்து விசேஷமாக இருக்கின்றது.  நம்பிள்ளை அதனையும் பார்த்தருளி மிகவே ஆனந்திக்கின்றார்.  ‘நன்றாக எழுதினீர்.  ஆகிலும் நம்முடைய அனுமதியின்றியே எழுதினீர்.  ஆகையாலே க்ரந்தங்களைத் தாரும்” என்று அதனை வாங்கி ஒரு பட்டுத்துணியினால் பத்திரபடுத்தி உள்ளே வைக்கின்றார். 

 

இதனைக்கண்ட ஈயுண்ணி மாதவப்பெருமாள் எனும் சீடர் வருத்தப்படுகின்றார்.  எப்படியாவது இந்த வியாக்யானம் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்று பிரார்த்திக்கின்றார்.  அரங்கனை விடாமல் யாசிக்கின்றார்.  அரங்கன் இவரது விடாப்பிடி வேண்டுதல் கண்டு, ஒரு நாள் நம்பிள்ளை ஸேவிக்கச் சென்றபோது அர்ச்சகமுகநே ”பிள்ளை ஈடு முப்பத்தாராயிரத்தை ஈயுண்ணி மாதவப்பிள்ளைக்கு ப்ரஸாதியும்” என்று ஆணையிடுகின்றார்.  நம்பிள்ளை மஹாப்பிரஸாதமென்று பெருமாள் அருளப்பாட்டை தலைமேல் கொண்டு அதன்படியே ஈயுண்ணி மாதவப்பெருமாள் என்கின்ற சிறியாழ்வான்பிள்ளைக்கு ஈடு முப்பதறாயிரமும் கொடுத்து வாழ்வித்து அருளினார்.

 

ஆக திருவாய்மொழிக்கு

 

திருக்குருகைப் பிள்ளான் அருளிச்செய்தது 6000 படி.

நஞ்சீயர் அருளிச்செய்தது.  9000 படி

பெரியவாச்சான் பிள்ளை அருளியது 24000 படி.

வடக்குத்திருவீதிப்பிள்ளை அருளியது 36000 படி.

 

வாதிகேஸரி அழகிய மணவாளநாயனார் எனும் பிள்ளைலோகாச்சார்யர் காலத்தில் வாழ்ந்தவர் ஒரு பதவுரை 12000 படி எழுதியுள்ளார்.

 

ஸ்வாமி தேசிகர் ‘த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி” என்று சமஸ்கிருதத்தில் திருவாய்மொழி ஒவ்வொரு பத்துப்பாட்டிற்கும் ஒரு சுலோகம் வீதம் அருளிச் செய்துள்ளார்.

 

ஸ்வாமி மணவாள மாமுனிகள் ‘திருவாய்மொழி நூற்றந்தாதி” என்னும் சிறந்த அந்தாதி ஒன்றினை இயற்றியுள்ளார்.

 

 
                                                               -Posted on 1st September’ 2008-

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: