Srirangapankajam

August 28, 2008

PESUM ARANGAN-100

Filed under: PESUM ARANGAN — Tags: , , , — srirangapankajam @ 7:29 am

 

Chapter-100

 

நம்பிள்ளையின் கோஷ்டி நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருந்தது.

நம்பிள்ளை உபந்யாசம் முடிந்து போகும் பெருந்திரளைக் கண்டு அப்போதிருந்த ராஜாவே, ‘நம்பெருமாள் திருவோலக்கம் கலைந்ததோ? நம்பிள்ளை கோஷ்டி கலைந்ததோ?‘ என்பனாம். இப்படி வைணவ பெருங்கூட்டத்தினரோடு நம்பிள்ளையின் புகழ் பெருகியது.
அந்த சமயம் முதலியாண்டானின் வம்சம் ஸ்ரீரங்கம் கோவிலில் குறட்டு மணியம் என்னும் ஒரு கைங்கர்யத்தினை நிர்வஹித்து வந்தனர்.  முதலியாண்டானின் மகன் கந்தாடையாண்டான்.  இவருடைய குமாரர் கந்தாடை தோழப்பர்.  இவரும் பெரிய வித்வான்.    ஆயினும் நம்பிள்ளையின் புகழ் கண்டு அசூயைப் பிறந்தது.      நம்பிள்ளை ஒரு நாள் பெரியபெருமாளை ஸேவிக்க வருகின்றார்.  தோழப்பரின் அசூயை அதிகமாகி அனாவசியமாக நம்பிள்ளையிடத்து சீறுகின்றார்.  ஏகமாக நிந்தித்து அவமரியாதை செய்து அவமானப்படுத்துகின்றார். 

 

தோழப்பர் வீடு திரும்புகிறார்.  அவரது மனைவி அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை! ஏதும் அவருக்கு கைங்கர்யம் பண்ணாது உதாஸீனம் செய்தாள்.  தோழப்பர் ‘ஏனிப்படி!’ என்கிறார்.  அதற்கு அவர் மனைவி
”ஆழ்வார்களுடைய அவதாரமோ என்று எண்ணும்படி, பெருமாளுக்கும் மிகவும் உகந்தவராயிருக்கும் நம்பிள்ளையிடத்து கூசாமல் அவமானப்படுத்தினீரே!  இப்படிச் செய்தோமே? என்று வருத்தம் கூட தோன்றாமலிருக்கும் உம்மோடு எனக்கு என்ன ஸம்பந்தம் வேண்டும் இனி? பாகவதநிந்தனைப் பண்ணினவர்களை ஒருக்காலும் மன்னிக்கமாட்டேன் என்று பெருமாளே அருளிச்செய்தும், இதனை அறியாதவர் போலயிருக்கின்ற எனக்கு உங்கள் சகவாஸம் கூடாது.  நிலம் பிளந்தால் இட்டு ரொப்பமுடியாது.  கடலுடைந்தால் கட்ட முடியாது.  மலை முறிந்தால் தாங்கமுடியாது.  அனுதாபமின்றி பாகவத அபசாரம் செய்தால் பொறுத்துக் கொள்ள முடியாது.  ஆகவே நான் என் வழியினைப் பார்த்துக் கொண்டு போகிறேன்!”  என்று உறவை முறித்துக்கொண்டு போக யத்தனிக்கையில்,   தோழப்பர் திகைத்து நின்றார்.  தம் தவற்றினையுணர்ந்து மிகவே வருந்தினார்.  ‘நான் பெரிய வித்வான் என்ற ஆணவத்தினாலும், என்னுடைய வம்சத்தின் செருக்கினாலும் தவறு செய்து விட்டேன்! இனிமேல் நான் என்ன செய்வது?’ என்று வருந்துகின்றார். அதற்கு அவரின் மனைவி, ”ஆற்றினைக் கெடுத்து குளத்தினில் மூழ்கி பரிகாரம் தேடாதீர்.
கெடுத்தவிடத்தேத் தேடுவீர்”
என்று கூற தோழப்பர் நம்பிள்ளையிடத்து மன்னிப்பு கேட்பதற்காக தம்முடைய மனைவியுடன் நம்பிள்ளை திருமாளிகைக்குக் கிளம்புகின்றார்.   பகல் கழிந்து இரவாகிவிட்டது!.

 

அங்கே நம்பிள்ளை தோழப்பரின் கடுமையான வார்த்தைகளினால் மனம் வருந்தி ஏதும் உண்ணாமல் சீடர்களெல்லாரும் சென்றபின்பு முட்டாக்கிட்டுக் கொண்டு நம்பிள்ளைக் கிளம்பி தோழப்பரின் வீட்டு வாசலில் கிடக்கின்றார் மனம் வெம்பி அழுதபடியே!   திருமாளிகை வாசலில் தம் தேவிகளோடு திருவிளக்கையேற்றி வந்த தோழப்பர் வெள்ளைத்துணிப் போர்த்தி ஓர் உருவம் படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகின்றார். ‘யார் அது?‘ என்கிறார்.  ”அடியேன் ‘திருக்கலிகன்றிதாஸன்’ என்ற பதில் வருகின்றது.  அதன் பின் தோழப்பர்,  ‘நாமோ மஹா தேஜஸ்வீ!  இவரோடு நம்பெருமாளை ஸேவிக்கும் போது என்ன பேச்சு!  அவரது வீட்டிற்குச் சென்று கேட்போம் என்று கோபமுற்று இப்போது இங்கு வந்திருக்கின்றீரா?” என்று கேட்கின்றார்.
(இப்போது கூட சற்று செருக்கோடுக் கேட்பது போலில்லை? மனைவி இடித்துரைத்த வார்த்தைகளால் சற்றே மனம் வருந்தியது போலிருந்தாலும் மீண்டும் அந்த ஆணவம் சற்றே வார்த்தைகளில் இழைவது போலில்லை?
நம் முன்னோர்கள் செய்த கைங்கர்யத்தினால், நாம் முற்பிறவியில் செய்த புண்ணியத்தினால் ஒரு புனிதமான வம்சத்தில் பிறக்கின்றோம். அவர்கள் செய்த கைங்கர்யத்தில் ஒரு சிலவாவது நாமும் அஹங்காரமின்றி, சிரத்தையோடு, அர்ப்பணிப்போடு, பிறரிடத்து அபசாரப்படாமல் செய்தால்தான் நமக்கு ஸ்ரேயஸ்.   அந்த வம்சத்தில் பிறந்த ஆணவத்தோடு, செருக்கோடு பகவத் கைங்கர்யம் ஏதும் செய்யாமல் அதிகாரத் திமிருடனிருந்தால் நம்மோடு நம் வம்சம் அழிவதும் நிச்சயம்.  இம்மாதிரி சில வம்சங்கள் நம்பெருமாள் கைங்கர்யத்தை விட்டே அகன்றுள்ளன!)

 

அதற்கு நம்பிள்ளை கலங்கியவாறே கூறுகின்றார்,  ‘பெரியபெருமாள் ஸந்நிதியில் முதலியாண்டானின் திருப்பேரனாகிய தேவரீருடைய திருவுள்ளம் கலங்கும்படி அபசாரத்திற்கு ஆளாகிய மஹாபாபியானேன் நான்!.  அடியேனுக்கு இந்த அபசாரம் நீங்க தேவரீர் திருமாளிகை வாசல்லாது வேறு எந்த வாசல் கதி?” என்று தேம்புகின்றார்.

 

நம்பிள்ளையை அப்படியே வாரி அணைக்கின்றார் ஆணவம் அத்தனையும் ஒழிந்த தோழப்பர்.  ‘இத்தனை நாளும் தேவரீர் சிறிது பேருக்குத்தான் ஆச்சார்யர் என்றிருந்தேன்.  இப்போது இந்த உலகத்திற்கே நீர்தான் ஆச்சார்யராயிருப்பதற்கு தகுதியுடையவர் என்றறிந்தேன்.’ என்று புகழ்ந்து நம்பிள்ளைக்கு ‘லோகாச்சார்யர்” என்னும் திருநாமம் சாற்றி மிகவும் உகந்தருளினார்.  அன்றுமுதல் அவரும் அவரது தேவிகளுமாய் நம்பிள்ளையை ஆஸ்ரயித்து அநேக அர்த்தவிசேஷங்களைக் கேட்டறிந்து நம்பிள்ளையிடத்து அதீத அன்புடனேயிருந்தார்.

 

                                                             -Posted on 26th August’2008-

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: