Srirangapankajam

August 26, 2008

PESUM ARANGAN-99

Filed under: PESUM ARANGAN — Tags: , , , , — srirangapankajam @ 12:07 pm

 

Chapter-99

 

 நம்பிள்ளை நஞ்சீயரிடத்துக் கேட்கின்றார். 

‘அவதாரங்கள் எதற்காக?”  என்று!.
அதற்கு சீயர்  ‘ஓரோரவதாரங்களால் பண்ணின ஆனைத்தொழில்களெல்லாம் பாகவதாபசாரம் பண்ணினவனை அந்தப் பலத்தை அநுபவிப்பிக்கைக்காக
(அவதாரங்கள் பெரும்பாலும் பாகவத அபசாரம் பண்ணியவர்களை அதற்குண்டான
தண்டனையை அநுபவிப்பதற்காகவே
) என்றருளினார்.

 

நம்பிள்ளை, பாகவதஅபசாரந்தான் எது? என்று கேட்கின்றார்.

 

சீயரும், ‘ஸ்ரீவைஷ்ணவர்களைக் கண்டக்கால் தங்களோபாதி ப்ரக்ருதிமான்களாக
நினைத்திருக்கும் புல்லிமை’
(ஸ்ரீவைஷ்ணவர்களை தாங்களோடு ஒத்தவர்கள் என்று
நினைக்கும் பேதமை
) என்றருளுகின்றார்.

 

நஞ்சீயர் மேலும் கூறுகின்றார்.  ‘பகவத் அனுபவம் பண்ணுமவனுக்கு விஷயாநுபவத்தில் அந்வயமில்லை (பற்றுதலில்லை).  இதனை ஆழ்வார்கள் பலவிடங்களிலும் அருளிச்செய்துள்ளார்கள்.’ என்றருளுகின்றார்.  

 

நம்பிள்ளை நஞ்சீயரை விட்டு அகலாமல் சர்வார்த்த விஷயங்களையும் தெரிந்து, தம் அறிவினை மேம்படுத்தியவராய் சுடர் விட்டு பிரகாசிக்கும் ஜ்வாலைப் போன்று ஸ்ரீரங்கஸ்ரீயையும் நிர்வஹிக்க கணட நஞ்சீயர் பெருமை கொண்டார்.

 

நம்பிள்ளையிடத்து பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத்திருவீதிப் பிள்ளை, பின்பழகிய பெருமாள் ஜீயர், ஈயுண்ணிமாதவப்பெருமாள் முதலான அநேக
ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆஸ்ரயித்திருந்தனர்.

 

நம்பிள்ளையிடத்து பின்பழகியபெருமாள் சீயர் ஊண் உறக்கமின்றி கைங்கர்யம் செய்து நம்பிள்ளை திருவடிகளே கதியென்றிருந்தார். 

ஒரு நாள் அவருக்கு உடல்நலம் மோசமாகியது.  தம்முடன் அந்தரங்கமாய் பழகும் ஸ்ரீவைஷ்ணவர்களை அழைத்தார்.  ”அடியேன் இன்னும் சிறிது காலம் ஜீவித்திருக்க பெருமாள் சன்னிதியில், ‘ஏழையேதலன்” ‘ஆழியெழச் சங்கும்”  எனும் பாசுரங்களை மனமுருகி அனுசந்தித்து வேண்டிக் கொள்ளுங்கள்” என்று வேண்ட, அவர்களும் அவ்வாறே பிரார்த்திக்க
பின்பழகியசீயரின் உடல்நலம் நன்கு தேறி பழையபடி கைங்கர்யம் செய்து வந்தார். 

 

இந்த விஷயத்தினை நம்பிள்ளையிடத்து சில ஸ்ரீவைஷ்ணவர்கள் ‘பின்பழகியபெருமாள் சீயரின் ஸ்வரூபத்திற்கு, ஞானத்திற்கும் இது தகுமோ?” என விண்ணப்பம் செய்தனர்.  ஒவ்வொருவராக ஏன் இப்படி செய்தார் என்று விசாரித்துவருகையில்
ஒருவர், ‘நம்பெருமாளை விட்டு பிரிய முடியாததினால் இவர் இதனை விட்டு போகமாட்டராயிருக்கும்” எனச் சொல்ல, நம்பிள்ளை இது குறித்து பின்பழகிய ஜீயரிடம் விசாரிக்க சீயர் ‘இவை இத்தனையுமன்று’ என மறுத்தார்.  வேறு என்ன காரணம் என்று வினவ, அதற்கு அவர்,
”தேவரீர் (நம்பிள்ளை) திருமஞ்சனம் கண்டருளி (குளியல் முடித்து) தூயவுடையினைச் சாற்றியருளி உலா வரும் போது குறுவேர்ப்போடே (முத்துமுத்தாய் நீர் திவளைகளுடன்) கூடிய திருமுகமண்டலத்தையும், அடியேன் தேவரீருக்கு சுற்றி சுற்றி செய்கின்ற கைங்கர்யத்தினையெல்லாம் விட்டு விடடு பரமபதத்திற்கு போக விரும்பவில்லை.  இன்னம் சிறிது காலம் இங்கேயிருந்து கைங்கர்யம் செய்வதற்காகவே இதனைச் செய்தேன்”  என்று விண்ணப்பம் செய்ய, நம்பிள்ளையின் திருவுள்ளம் இளகி இரக்கம் கசிந்தது.

 

                                                             -Posted on 24th August’2008-

 

Blog at WordPress.com.