Srirangapankajam

August 23, 2008

PESUM ARANGAN-97

Filed under: PESUM ARANGAN — Tags: , , , — srirangapankajam @ 6:27 am

Chapter-97

 

உபதேசம் என்றால் வெறும் வாக்கினால் சொல்வது மட்டுமாகாது.  எம்முறையிலாவது பிறரை அனுஷ்டிக்கச் செய்வதே உபதேசமாகும்.  அதோடு ஒருவன் அனுஷ்டிப்பது போல், உபதேசத்தினைக் கேட்பதால் மட்டும் அனுஷ்டிக்க முடியாது.  இதனால்தான் ஸ்ரீபகவான் கண்ணன் கீதையில்

 

‘தத்வித்தி ப்ரணிபாதேன பரிப்ரஸ்னேன ஸேவயா

 

‘மஹான்களின் அருகேயிருந்து ஸேவை செய்து அவர்கள் எப்படி அனுஷ்டிக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும்” என்று அர்ஜூனனுக்கு உபதேசிக்கின்றார்.  இதனை குருபரம்பரையில் நமது ஆச்சார்யர்கள்  சிரத்தையுடன் கடைப்பிடித்திருக்கின்றனர்.  நஞ்சீயரிடத்து நம்பிள்ளை இவ்வாறே இருந்துள்ளார்.  சற்றும் பிரியாது அருகேயேயிருந்தமையால் நஞ்சீயரிடத்து தமக்கு ஏற்படும் சகல சந்தேகங்களையும் நிவர்த்தித்துக் கொள்கின்றார்.  சகல சாஸ்திரங்களையும், அதன் ஆழ்பொருளையும் கசடற கற்கின்றார்.

 

நம்பிள்ளை நஞ்சீயரிடத்து ஒரு சரணாகதி பற்றி வினவுகின்றார்.

‘இதர உபாயங்களுக்கு (சரணாகதி தவிர்த்த மற்றவைகளுக்கு) ப்ரமாணமும் (சாட்சிகளும்) பஹூளமாய் (ஏராளமாய்) அநுஷ்டாதாக்களும் (சரணாகதி தவிர்த்த மற்றைய வழிமுறைகளை அனுஷ்ப்பவர்களும்)
பலராயிருக்க (ஏராளமானோர் இருக்க) இதுக்கு (சரணாகதி மார்க்கத்திற்கு) ப்ரமாணமும் சுருங்கி அநுஷ்டாதாக்களும்(அனுஷ்டிப்பவர்களும்) சிலரேயிருப்பானேன்’ 
எனக் கேட்கின்றார். 

 

 நஞ்சீயர் அருளுகின்றார்.
‘நான் நினைத்திருக்கும் அதுக்கு அவ்வருகு(உபாயம்) உமக்கு வேண்டுவது ஒன்றுண்டோ?

(அதாவது சரணாகதியைப் பொறுத்தவரை ஆச்சார்யனுடைய சிந்தனையைத் தவிர சிஷ்யனுக்கு வேறு எந்த விதமான ப்ரமாணமோ, உபாயமோ அவசியமில்லை.) 

 

‘இனி ப்ரமாணங்கள் காணவேண்டுமென்று நினைத்திரேன்”
(என்னால் அனுபவபூர்வமாக நான் என்னுடைய ஆச்சார்யன்(பட்டர்) அருகிலிருந்து உணர்ந்த இவ்விஷயத்திற்கு ப்ரமாணம் அவசியமில்லை!)

 

இதற்கு ப்ரமாணம் என்று வேண்டியதேயில்லை.” 
இருவர் கூடி ஓராற்றிலே இறங்கிபோகாநின்றால் (இறங்கிப் போகும்போது)  ஆற்றிலமிழ்ந்தவனை அமிழாதவன் கையைப் பிடித்து கரையேற்றுகைக்கு ஒரு பிரமாண அபேக்ஷை(உபாஸித்தல்) வேண்டுமோ
?’
(இதில் ஆற்றில் அமிழாதவன் ஆச்சார்யன் – ஆற்றில் அமிழ்ந்தவன் நம்மைப் போன்ற சம்ஸாரிகள். நம்மை கரை சேர்ப்பது ஆச்சார்யன் திருவடிகள் சம்பந்தமே)

 

ஒரு குள்ளன், ஒரு நெடியவன் இருவரும் ஆற்றில் இறங்குகிறார்கள் என்று கொள்வோம்.  குள்ளன் ஆற்றில் மூழ்க நேரிடின், நெடியவன் கையைப் பிடித்துக் கொள் என்று கரையிலிருந்து ஒருவன் சொல்லவும் வேண்டுமோ? அவன் கையை இந்த குள்ளன் பிடிக்கைக்கு ஒரு விதி வேண்டுமோ?”

(இதில் குள்ளன் நம்மைப்போன்றோர்.  நெடியவன் ஆச்சார்யன்! நாம் பற்ற வேண்டியது ஆச்சார்யன் திருவடிகளை மட்டுமே!)

 

ப்ரமாணங்கள் வேண்டுமாயினும், குறையேயில்லை(ஏராளமாகயுள்ளது)

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
யோ வை வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்மை!
தம் ஹ தேவமாத்ம புத்திப்ரகாசம்
முமுக்ஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே !!
(எவன் ப்ரம்மனை முன் படைத்தானோ, எவன் வேதங்களையும் அவனுக்கு உபதேசித்தானோ, அப்படிப்பட்ட தேவனும், தன் விஷயமான ஞானத்தினைப் பிரகாசிப்பிப்பவனுமான பரம புருஷனை, மோக்ஷமடைய விரும்பும் நான் சரணமடைகின்றேன்.)

 

தஸ்மாந் ந்யாஸமேஷாம் தபஸாமதிரிக்தமாஹூ:
ஆகையால் ந்யாஸத்தை(சரணாகதியை) இந்த தபஸ்களுள் மேலானதாகச் சொல்லுகிறார்கள்

 

என்று சரணாகதியினைப் பற்றி விரிவாக நம்பிள்ளைக்கு நஞ்சீயர் அருளுகின்றார்.

 

+++++++++++++++++++++++++++++++++++++++++++

 

நம்பெருமாள் திருவடிகளே கதியென்று கிடப்பவர் விதியும் விருப்புற்று கேட்கின் மாறுமோ?.   எனது அருமை அண்ணா ஆர்.வீ.ஸ்வாமி.  கடந்த 7.7.2008 அன்று அவருக்கு கடுமையான நெஞ்சுவலி.  ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சைப் பெற்றவர் வேறு!  இம்முறை 98 விழுக்காடு ரத்தகுழாயில் அடைப்பு – பிழைப்பதரிது என்று உரைத்தார்கள் மருத்துவ நிபுணர்கள்.  நான் இங்கு கருவறைச் சென்று அரங்கனிடத்து பிரார்த்தித்தப்படி நிற்கின்றேன்.  சிறிது நேரம் கழித்து அபாயமில்லை.  ஆபத்தானக் கட்டத்தினைத் தாண்டி விட்டார் என்று செய்தியறிந்து வெகுவாக ஆறுதலைடைந்தேன்.  இவர் திவ்யதேச மணிமாலை என்னும் 108 திவ்யதேச கவிதைக் கடலை இயற்றிக்கொண்டுள்ளார். ஏறத்தாழ 4350 பாக்களை படைத்தும் இன்னும் அது தொடாந்த வண்ணமுள்ளது.  அன்றிரவு அந்த கடுமையான நெஞ்சு வலியிலும் ஒரு கவிதையொன்றை, அரங்கனுக்கு எழுதுகின்றார்.  அதனை அடியிற் கொடுத்துள்ளேன் தாங்களின் அனுபவத்திற்காக!

          

 

                          நேரில் வந்து பேச வேண்டுமே!

 

அஞ்சலென்று அபயக்கரம் அரங்கனே!
  நீ அளித்த பின்னர் நெஞ்சுவலி எனக்கு வருவதோ?
எஞ்சி நிற்கும் உனது பணி முடிக்குமுன்னர்
  எனக்கு அந்தக் காலதேவன் அழைப்பு விடுவதோ?
அஞ்சனையின் மைந்தன் தொழும் ராமன்
  நீயும் அருகிருக்க அச்சமெந்தன் மனதில் வருவதோ?
கஞ்சனைக் கடிந்த எங்கள் கண்ணன் உன்னைப்
  பிள்ளையாகக் கொண்ட பின்பும் கலக்கம் வருவதோ?

 

கொஞ்ச நேரம் நீ துயில அந்த நேரம் பார்த்து
  அந்தக் கோள்கள் ஆட்டம் போடத் துணிவதோ?
தஞ்சமெனத் தாளிணைகள் தந்த குருவின்
  பத்து நூறு ஆண்டதுவும் நெருங்கும் போதினில்
தஞ்சமெனக் கொண்டவரைத் தரணியெங்கும்
  வைணவத்தை வளர்க்கும்பணி துவங்கும் வேளையில்
கொஞ்சம்கூடப் பயமுமின்றி கோதையவள் பிள்ளை
  என்னை இதய நோயும் கொண்டு போவதோ?

 

கெஞ்சிடேன் இவ்வுலக வாழ்க்கை தொடர – நீயும்
  அருள்கவென்று கேசவனே!  எந்தன் அமுதனே!
அஞ்சினேன் என்றெண்ணிடாதே அரங்கனே! – நீ
  கொடுத்தப் பணிகள் அத்தனையும் முடிக்கும் முன்னரே
நஞ்சினையே அருந்தினாலும் நாரணா! – உன்
  அருளிருக்க நஞ்சு அதுவும் வேலை செய்யுமோ?
கொஞ்சியுன்னைப் பாடும் ஆவல் குறையுமுன்னர்
  மறைய மாட்டேன் கொற்றவனே!  எந்தன் அரங்கனே!

 

சஞ்சலங்கள் ஏதுமின்றி சகஜ வாழ்க்கை வாழ்ந்து
  யானும் சரஞ்சரமாய் கவிதை பொழியவே
நெஞ்சிலமர்ந்து நோயை நீக்கி நிமலனே!
  நீ காட்சி தந்து நேரில் வந்து பேச வேண்டும்!
விஞ்சி உனக்கொருவரில்லை! விண்ணவரும் தொழுது
  ஏத்தும் வேங்கடவா! எந்தன் அழகனே!
துஞ்சிடாது உனது பணிகள் தொடர்ந்து யானும்
  செய்யத் தேவராஜன் உந்தன் ஆணை வேண்டுமே!

 

நெஞ்சம் நிறைந்த மனைவியோடு நேசம் மிக்க
  பிள்ளைகளும்,  பாகவதர், சுற்றம்,  நட்பிவர்
அஞ்சி மனதில் அரங்கனே! நீ அபயம் தர
  வேண்டுமென்று அர்ச்சனைகள் செய்து தொழுகின்றார்!
பஞ்செனப் பறந்து இதய நோயும் போக வேண்டும்
  என்று பரிதவித்துக் கண் பனிக்கின்றார்!
கொஞ்சமேனும் கவலையின்றி குணக்கடல் உன்
  உள்ளமறிந்து குவலயத்தில் யான் உழல்கின்றேன்!

 

கெஞ்சி உன்னை முரளிபட்டர் கருவறையில்
  திருவடியில் கதறி உன்னைக் கைத்தொழுகின்றார்!
அஞ்சலென்று அபயம் தந்த எந்தன் குரு
  ரங்கராஜ பட்டர், கோட்டியூரின் ஸ்வாமியும்
பஞ்சமின்றிக் கருணைப் பொழியும் எங்கள்
  எதிராஜருடன், பிராட்டியுமே பரிந்துரைக்கவே
நெஞ்சினிலே நீயமர்ந்து பேச வேண்டும்
  அதனை விட உலகில் உயர்ந்த இன்பம் உள்ளதோ?

                 

                                       அடியேன்!
                       ரங்கநாத ராமானுஜ தாஸன்
                                (ஆர்.வீ.ஸ்வாமி)
                                        07.07.2008

 

தற்சமயம் உடல் நலம் நன்கு தேறி வருகின்றார்.  நீடித்த ஆயுளும்,  நோயற்ற வாழ்வும்,  குறைவற்ற கவிதையும் படைக்க நாம் அனைவரும் அரங்கனை வேண்டுவோம்!.

 

                                                                              -Posted on 19th August’2008-

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: