Srirangapankajam

August 18, 2008

PESUM ARANGAN-95

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 10:52 am

Chapter-95

பட்டரிடத்து அரங்கன் மேலே வீடு தந்தோம் என்றவுடனேயே ‘மஹாபிரஸாதம்’ என்று ஏற்றுக்கொண்ட பிறகு பட்டருக்கு ஒரு சந்தேகம். இதேப் போன்று நம்பெருமாள் அங்கு ஸேவை சாதித்தால்தான் போவேன் என்று அடம் பிடிக்கின்றார் அரங்கனிடம்!. நெகிழ்ந்து போனான் அரங்கன்!.

பக்தி என்பது எப்படியிருக்க வேண்டும் என்று நமக்கு உணர்த்துகின்றார்கள்.

ஸ்ரீமத் பாகவதத்தில் ப்ருது சக்ரவர்த்தி என்றொரு மகாராஜன். மஹாவிவேகி. ஒரு முறை இந்திரனே இவரது பாதத்தினைத் தொட்டு வணங்கி மன்னிப்புப் பெற்றவர். இவருக்கு ஸ்ரீமந்நாராயணனே நேரில் காட்சியளித்தார்.
பட்டரைப்போன்றே இவரும் இரு கைகளையும் மேலே தூக்கி நமஸ்கரித்தார். கண்களிருந்து ஆனந்தக்கண்ணீர் பெருக்கு!. கண்ணீர் பெருக்கெடுத்ததால் பார்க்கமுடியாத ஒரு நிலை!. தழுதழுத்த நெஞ்சினால் பேச்சும் போயிற்று! ஹ்ருதயத்தினால் ஸ்ரீபகவானை ஆனந்தமாக அணைத்துக் கொண்டார். கட்டுண்ட ஸ்ரீபகவான் அவரிடத்து வசமானார். இவரைப் பார்த்து பகவான் கருணைப் பொங்கி வரமொன்றைக் கேட்குமாறு அருளினார். அழியக்கூடிய பொருள்களை வரமாக கேட்கவில்லை. அழியாத அளவற்ற பக்தி ஒன்றினை மட்டுமே பகவானிடத்தில் யாசித்தார்.

ந காமயே நாத ததப்யஹம் க்வசித்
ந யத்ர யுஷ்மச் சரணாம்புஜாஸ்வ:
மஹத்தமாந்தா; ஹ்ருதயான் முகச்யுத:
விதத்ஸ்வ கா;ணாயுதமேஷ மே வர:

தங்கள் சரண கமல பக்தியை உண்டு பண்ணும் கதா ச்ரவணம் (பகவத் கதைகளைக் கேட்கும் பாக்கியம்) இல்லாதது எதுவாயினும், அது மோக்ஷமே ஆயினும் எனக்குத் தேவையில்லை! மஹான்களுடைய உள்ளத்தில் நிரம்பி, அங்கு இடமில்லாது அவர்கள் முகத்தின் வழியாக ததும்பி வெளிவரும் பகவத் குணங்களைக் கேட்பதற்குப் பதினாயிரம் காதுகளைக் கொடுக்க வேண்டும்! இதுவே எனக்கு வேண்டிய வரம்! என்று திட்டவட்டமாக யாசிக்கின்றார்.

இது போன்று பகவத் குணங்களை கேட்க வேண்டும். அதனை அவனது அர்ச்சையில் கண்டு மகிழ வேண்டும்.
வைணவமே அனுபவம்தானே!

கங்கை யமுனை ஆகிய இரண்டு நதிகளின் நடுவிலுள்ள ஒரு புண்யமான இடத்தில் ப்ருது மகாராஜன் விஷயத்தில் பற்று அற்றவராய் வசித்து வந்தார். (இரண்டு புண்ய நதிகள் நடுவே ஒரு க்ஷேத்திரம் இருக்குமாயின் அந்த இடமே மஹா பவித்ரமான இடமாகும். அம்மாதிரி இடங்களில் வசிப்பவர்கள் மஹா பாக்கியவான்கள்! அரங்கனுக்கும் இதுதான் உகப்பு! அயோத்தியில் சரயு, தமஸா ஆகிய இரு நதிகளுக்கிடையேதான் பள்ளிக்கொண்டிருந்தான் – இங்கு கங்கையிற் புனிதமாய காவிரி, கொள்ளிடம் ஆகிய இருகரைக்கு நடுவே!)
ஸத்ரயாகம் என்றவொரு மஹாயாகத்தினை நடுத்துகின்றார் இந்த ப்ருது மஹாராஜா. இந்த யாகத்தில் தேவர்களும், ப்ரும்மரிஷிகளும், ராஜரிஷிகளும் கலந்து கொண்டனர். இந்த யாகத்தின் நடுவில் அரசன் மீண்டும் யாசிக்கின்றான்.

தேஷாமஹம் பாத ஸரோஜ ரேணு
மார்யா வஹேயாதி க்ரீடமாயு:
யம் நித்யதா பிப்ரத ஆஸூ பாபம்
நஸ்யத்யமும் ஸர்வகுணா பஜந்தி
குணாயனம் சீலதனம் க்ருதஜ்ஞம்
வ்ருத்தாஸ்ரயம் ஸம்வ்ருணதேனு ஸம்பத:
ப்ரஸீததாம் ப்ரஹ்மகுலம் கவாம் ச
ஜனார்த்தன: ஸானுசரஸ்ச மஹ்யம்!

எந்த பகவானுடைய சரண சேவையில் ருசி வந்தால், பல ஜென்மங்களில் செய்த பாபம் விலகுமோ, அந்த தெய்வத்தை ஒருபோதும் மறக்கக்கூடாது. அந்த தெய்வத்தையே உபாஸித்து வர வேண்டும். (பட்டர் சொல்கின்றார் நம்பெருமாளின் அஞ்சேல் என்ற அபயமளிக்கும் கைகளே தஞ்சம்! அந்த கைகளே மறுத்தாலும் அரங்கன் திருமுற்றத்தினைத் தவிர வேறெரு போக்கு எனக்கு வேண்டாம் என்று! ) வேத வித்துக்களுடையதும், பகவத் பக்தர்களுடையதான சரணரேணுவை(பாதாரவிந்தங்களை) நான் தலையில் உயிருள்ளவரை தரிப்பேனாக!. அந்த பாதரேணுவைத் தரிப்பவனுக்கு எல்லா பாபங்களும் உடனே விலகி, எல்லா குணங்களும் வந்து சேருகின்றன.
நல்ல குணம் உள்ளவனிடத்தில், நல்ல பழக்க வழக்கங்களும், செய்நன்றி மறவாத தன்மையும், பெரியோர்களை அண்டி நிற்பதும் தானே அமையும். அத்தகையவனிடத்தில் நித்யம் சகல சம்பத்துக்களும் தேடி வருகின்றன. ப்ரம்ம குலமும், பசுவின் குலமும், பக்தர்களுடன் கூடின ஸ்ரீமந் நாராயணனும் எனக்கு அனுக்ரஹம் செய்ய வேண்டும்’ என்று வேண்டுகின்றான்.

-Posted on 17.08.2008-

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: