Srirangapankajam

August 12, 2008

PESUM ARANGAN-91

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 12:26 pm

ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே
அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம !!

ஒரு தடவை சரணமடைந்தவன் பொருட்டும், ‘உனக்கே
ஆகிறேன்” என்று ப்ரார்த்திப்பவன் பொருட்டும், எல்லா பிராணிகளிடத்தினின்றும் அபயமளிக்கிறேன்.  இது எனக்கு வ்ரதம்!

 

ஒரு நாள் த்ரிபுவநவீரதேவராயன், பட்டருடைய வைபவங்கண்டு ‘பட்டரே! நீர் ஒரு நாள் வந்து போகீர்’
என்று அழைத்தார்.  அதற்கு பட்டர், ‘பெருமாள் அஞ்சலென்ற கை மறுத்தாலும், அவ்வாசலொழிய வேறொரு போக்கு உண்டோ?” என்று அவரது அழைப்பினை மறுத்தும் தம்முடைய கதி அரங்கனின் அபயஹஸ்தமும், அரங்கனின் முற்றமும்தான் என்பதினை
எனத் தெளிவுபடுத்துகின்றார்.  (நமக்கும் எது கதி என்பதினை உணர்த்துகின்றார்)

 

பட்டரிடத்து ஸோமயாஜி என்கிறவொரு ஸ்ரீவைஷ்ணவர் திருவாராதனக்ரமம் கற்றறிந்தார்.  பட்டர் திருவாராதனம் பண்ணும் சமயம் சிலநாட்கள் கூடவேயிருந்தார்.  தமக்குக் கற்றுக் கொடுத்ததிற்கும் பட்டரின் நடைமுறைக்கும் க்ரமங்கள் பல மாறுப்பட்டதைக் கண்ட அவர் பட்டரிடம். ‘திருவாராதனப்படியை அடியேனுக்கு இப்படி அருளிச்செய்தருளிற்று!  தேவரீர் இப்படி செய்தருளுகின்றது!  இதற்கு காரணமென்ன?” என்று பவ்யத்துடன் கேட்கின்றார்.   பட்டரும்  ‘ஸகல சாஸ்திரங்களையும் ஆராய்ந்து பார்த்து உமக்கு திருவாராதனக்கிரமத்தினையருளினேன்.  என்னுடைய அனுஷ்டானத்தில்(பெருமாளின் வடிவழகில் ஆழ்வதினால்) இதைத் தவிர செய்கைக்கு ஒரு செயல் கண்டிலேன்” என்று அருளிச் செய்தருளுகின்றார்.

 

 

பட்டரிடத்து ஒருவன் ‘தேவாந்திரங்களான மற்றைத் தெய்வங்களை ஸ்ரீவைஷ்ணவர்கள் ஏன் தொழுவதில்லை?’ என்று கேட்கின்றார்.    ஸ்ரீமந் நாராயணனே பரத்வம் என்கிற ப்ரமாணத்திலே விரோதமான கருத்துயிருந்தால்தானே? அந்த சந்தேகமேயில்லாதபோது மற்றைத் தெய்வங்கள் வழிபாடு எதற்கு?’ என்றருளுகின்றார்.  ‘ஸத்வப்ரசுரரை ரஜஸ் தம:ப்ரசுரர் அநுவர்த்திமது போக்கி ஸத்வப்ரசுருர்
ரஜஸ் தம:ப்ரசுரரை அநுவர்த்திக்கக் கடவதோ?’
என்று அருளுகின்றார்.  அதாவது ஸத்வம், ரஜஸ், தமஸ், எனும் மூன்று குணங்களில் சத்வகுணமே உன்னதமானது.    அப்படியிருக்கையில் இந்த உன்னத சத்துவ குணம்,  ரஜஸ் மற்றும் தமஸ் குணமுடையதை ஆராதிக்க வேண்டிய அவசியமேயில்லை என்று தெளிவுபடுத்துகின்றார்.

 

பட்டர் ஒரு ஸ்ரீவைஷ்ணவரைப் பார்த்து நீர் அனந்தாழ்வான் ஸ்ரீபாதத்திலே சென்று ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணமிருக்கும்படி எங்ஙனேயென்று கேட்டு வாரும்! என்று அனுப்புகின்றார்.  அனந்தாழ்வான் இருப்பதோ மேல்கோட்டை திருநாராயணபுரத்திற்கு சிறிது முன்னாலுள்ள சிறுபுத்தூர் என்னும் சிறுகிராமத்தில்!.  இந்த கேள்விக்கு விடைபெற இந்த ஸ்ரீவைஷ்ணவர் அவ்வளவு தொலைவு நடந்து அனந்தாழ்வான் திருமாளிகையினை அடைகின்றார்.  அப்போது பல ஸ்ரீவைஷ்ணவர்கள் அமுது செய்துகொண்டிருக்க, இவருக்கு இடமில்லை.  காத்திருந்தார் இவர்.  அனந்தாழ்வான் இவரைக் கவனித்து விட்டார்.  களைப்போடிருந்த இவருக்கு அன்னமிட்டு ‘எங்கு நின்றும் எழுந்தருளிற்று?’ என்று விசாரிக்க இவர் பட்டர் தம்மை இங்கே அனுப்பிய காரணத்தைச் சொல்கின்றார்.  அதற்கு அனந்தாழ்வான், ஸ்ரீவைஷ்ணவலக்ஷணம், ‘ கொக்கு போலேயிருக்கும், கோழிபோலேயிருக்கும், உப்புப் போலேயிருக்கும்,  உம்மைப்போலேயிருக்கும்‘ என்று அருளினார். 

 

கொக்குப்போலேயிருக்கும்:  கொக்கு சிறிய மீன்களை விட்டுவிட்டு கொழுத்த மீனிற்காக காத்திருக்கும்.  அதுபோன்று நல்ல குருவினையடையும் வரை காத்திருக்க வேண்டும்.  மேலும் நீர்வளமுடைய இடத்தில் கொக்குயிருப்பதைப் போன்று சத்சங்கத்தினைச் சார்ந்து இருக்க வேண்டும்:

 

கோழியைப்போலேயிருக்கும்: குப்பையில் மேய்ந்திருந்தாலும் கிளறி, கிளறி, தன்னுடைய இரையினை மட்டும் கொள்ளும் கோழியினைப் போலே சகல சாஸ்திரங்களையும் ஆராய்ந்து அதின் சாரத்தினை மட்டும் கிரஹித்துக் கொண்டிருத்தல். வேத ஸாரமான ஆழ்வாh;களின் அருளிச் செயல்களில் லயித்தல்.

 

உப்பைப்போலேயிருத்தல்:  உப்பில்லாத உணவு சுவை தருமோ?  அது போன்று வைணவர்கள், பாகவதர்கள் இல்லாதயிடத்தில் இருக்கலாகாது. வைணவத்தின் முன்னேற்றத்திற்கு உதவியாகயிருத்தல் வேண்டும் அளவுக்கு அதிகமானால் உப்பு கரிக்கும்.  அதுபோன்று தன்னைத் தேவையானயிடத்தில் தேவையான அளவு மட்டுமே வெளிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

 

உம்மைப்போல் இருத்தல்:  நிந்திக்கும்போது மனது நோகாது, மறுமாற்றம் கொள்ளாது, புகழ்கையில் குறைகளையே நினைத்துக் கொண்டு பொறுமையுடன் இருத்தல்.

 

ஒரு நாள் பட்டரின் சீடரான ஒரு ஸ்ரீவைஷ்ணவர் அவர்தம் ஸஹவாசதோஷத்தினால் (துர்புத்தியுடைய நண்பர்களினால்) மனம் கெட்டு பட்டரிடத்து, ‘பட்டரே! இனி உமக்கும் நமக்கும் பணியில்லை!‘ என்று கூறி பட்டரை விட்டு அகல, பட்டர், ‘வாராய் பிள்ளாய்!  அது உன் நினைவாலேயன்றோ!  நீ எம்மை விட்டாலும் நாம் உம்மை விடுவோமோ!” என்று வலுக்கட்டாயமாக அவரை தம்மிடத்தே வைத்து உபதேசங்கள் பல கூறி அவனைத் தாம் வருந்தி திருத்துகின்றார். அஞ்ஞானத்தினால் தவறு செய்யும் சீடரையும் விடாது தம்முடைய அன்பினால், முழுமுயற்சியினால் திருத்தி பணிக்கொள்ளும் சீரிய ஆசானாகவும் பட்டர் இருந்துள்ளார்.

 

ஒரு நாள் பட்டர் பெருமாள் எழுந்தருளியுள்ள மண்டபத்தில் நம்பெருமாளுக்கு திருவாலவட்டம் (விசிறி) தம்மை மறந்து நம்பெருமாளின் அழகினில் ஈடுபட்டு, நேரம் போவது தெரியாமல், ஸேவித்துக் கொண்டிருந்தாராம்.  அப்போது அவரது சீடர் ஒருவர், ‘ஸந்த்யாவந்தந காலம் முடியப் போகின்றது” என்று நினைவுறுத்தினாராம். 

 

மத்கர்ம குர்வதாம் பும்ஸாம் கர்மவே: போ ப வேத்யதி!
தத்கர்ம தே ப்ரகுர்வந்தி திஸ்ர: கோட்யோ மஹர்ஷய: !!


என்னுடைய கைங்கர்யத்தினைச் செய்யும் மனிதர்களுக்கு அந்த கைங்கர்யத்தினால் நித்ய நைமித்திக கர்மங்கள் நழுவினவாகில், அத்தோஷத்தினை நிவர்த்திக்க மூன்று கோடி மஹரிஷிகள் அக்கர்மங்களைச் செய்து ஈடுகட்டுகின்றனர்.


ஆகையினால், பகவத் கைங்கர்யபரர்களுக்கு ஸந்த்யாவந்தன வைகல்ய தோஷம் வாராது!” என்று பட்டர் உறுதிபடக் கூறினாராம்.

 

ஒரு நாள் பட்டருடனே ஏகப்பட்ட வித்வான்கள் வந்து தர்க்க வாதம் செய்தனர்.  பட்டர் அவர்களனைவரையும் வெல்கின்றார்.  பின்னர் அவர்கள் பட்டருடைய ஸர்வத்தையும் அறியும் ஞானத்தினை (ஸர்வக்ஞதை) அறிவோம் என்று ஒரு குடத்தினில் நல்லபாம்பு ஒன்றினை அடைத்து ‘இக்குடத்திலிருக்கும் வஸ்து என்ன?’ என்கின்றனர்.  பட்டரும் ‘திருவெண்கொற்றக்குடை‘ என்று பதிலளிக்கின்றார்.  அவர்கள் ஏளனம் செய்து குடத்தைக் கவிழ்க்க அதிலிருந்த பாம்பைக் காண்பித்து ‘இது கொற்றக்குடையோ?” என சிரிக்க, பட்டரும், ‘ஆமாம்! சென்றாற் குடையாம்’ என்றன்றோ ஆழ்வார் அருளிச்செய்தது என்ன அவர்கள் இவரது ஸர்வக்ஞதையினைக் கண்டு வியந்து இவரிடத்தே பணிந்தனராம்.

 

இவ்வாறே பட்டரும் – நம்பெருமாளும்,  பட்டரும் – தாயாரும்,  பட்டரும் – நஞ்சீயரும்,  பட்டரும் – மற்றவரும், என பல பிரபாவங்கள் நடந்தேறிய வண்ணம் பட்டர் ஸ்ரீரங்கஸ்ரீயை நிர்வஹித்துக் கொண்டிருந்தார்.


                                                                    -Posted on 11.08.2008-

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: