Srirangapankajam

August 8, 2008

PESUM ARANGAN-89

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 11:11 pm

 

Chapter-89

 

”அர்ச்சாவதாரத்தில் ஈடுபட்டுள்ள ஸ்ரீவைஷ்ணவர்களே நமக்குத் தலைமேலே இருக்கத்தக்கவர்கள். எப்பொழுதும் தியானிக்கத்தக்கவர்கள். நித்தியசூரிகளைக் காட்டிலும் கைங்கர்ய நிறைவினையுடையவர்கள்” – திருமங்கையாழ்வார் தமது ‘தண்சேறை எம்பெருமான் தாள்தொழுவார் காண்மின் என் தலைமேலோரே’ எனும் பாசுரத்தில்.

பூகிகண்ட த்வயஸஸரஸஸ்நிக்த நீரோபகண்டாமாவிர்
மோத ஸ்திமிதஸகுநூதி ப்ரஹ்ம கோஷாம் !
மார்கே மார்கே பதிகநிவஹைருஞ்ச்யமாநாபவர்க்காம் பஸ்யேயம் தாம் புநரபி புரிம் ஸ்ரீமதீம் ரங்கதாம்ந: !!
                                                         –ஸ்ரீரங்கநாத ஸ்தோத்திரம்
பாக்கு மரங்களின் கழுத்தளவாக பெருகுகின்றதும், தேனோடு கூடியதும், ஸ்நேஹமுடையதுமான தீர்த்ததையுடையதாய், மகிழ்ச்சியினால் அசையாமலிருக்கும் பறவைகளினால் திருப்பிச் சொல்லப்பட்ட வேதகோஷத்தையுடைதாய், வழி நடப்பவர்களின் கூட்டங்களால் வழிகள் தோறும் திரட்டி எடுத்துக் கொள்ளப்படுகின்ற மோக்ஷத்தை உடையதான ஸ்ரீரங்கநாதனை மறுபடியும் ஸேவிக்கப் பெறுவேனோ?

என்று தினந்தோறும் அரங்கனை பிரிந்த ஆற்றாமையினால் பட்டர் நினைந்து நினைந்து மனம் உருகுகின்றார் திருக்கோஷ்டியூரில். ‘என்று கொலோ கண்குளிரக் காணுநாளே’ என்று அரங்கனின் அர்ச்சையில் ஆழ்ந்த அந்த மஹானுபாவரின் மனம் படாதபாடு படுகின்றது.

அவரிடத்து திருவிருத்தத்திற்கு அர்த்தம் அருள ஒரு ஸ்ரீவைஷ்ணவர் பிரார்த்திக்கின்றார். பட்டா; அதற்கு
‘சீயா! எனக்கு கோயிலையும், பெருமாளையும் விட்டு பிரிந்த வருத்தத்தினால் ஏதும் வார்த்தைகள் வரவில்லை!  நீர் திருவிருத்தத்திற்கு அர்த்தம் இந்த ஸ்ரீவைஷ்ணவருக்கு சாதியும்” என்று மனம் எதிலும் ஈடுபடாமல் அரங்க பித்தனாயிருந்தார். இரண்டு வருடத்திற்குள் பட்டரின் திருவுள்ளத்தினைக் கலக்கி விரோதித்த வீரசுந்தரப்ரஹ்மராயன் இறந்து போனான். பிள்ளைப்பிள்ளையாழ்வான் திருக்கோஷ்டியூருக்குச் சென்று பட்டரிடம் இந்த நற்செய்தியைச் சொல்ல, பட்டர் சந்தோஷமானார். அவரது திருவடிகளில் பட்டர் அடிக்கடி வணங்குகிறார். ஸ்ரீரங்கம் நோக்கி விரைகின்றார். ஸ்ரீரங்கத்தில் எல்லோரும் மன்னனது மறைவினாலே குதூகலிக்க, ஒரே ஒருவர் மன்னனது மறைவு குறித்து அறையைத் தாளிட்டு வாய் விட்டு கதறினாராம்! யார் அது? பட்டரின் தாயாரான ஆண்டாள்தாம்! அனைவரும், ”பட்டருடைய விரோதி ஒழிந்தான் சந்தோஷப்படாமல் வருத்தப்படுவானேன்” என்று ஆச்சர்யப்பட அதற்கு அத்தாய், ”பிள்ளைகாள்! நீங்களொன்று அறியவில்லை. கூரத்தாழ்வானின் சிஷ்யராயிருந்து தமது ஆச்சார்ய புத்ரரான பட்டரிடத்து அநீதியிழைத்து, அவரிடத்து மன்னிப்புப் பெறாமலேயும், இப்படி செய்தோமே! என்று தாம் செய்த செயலுக்காக வருத்தப்படாமலும் இறந்து விட்டானே இவன்! யமதூதர்கள் கைகளில் அகப்பட்டு கலங்க அடியுண்டு மலங்குவானே! கூரத்தாழ்வார் திருவடிகளில் ஸம்பந்தமுடைய ஒரு ஆத்மா இப்படி தட்டுப்பட்டுப் போவதே! என்ற இத்தை நினைத்து என் வயிறு எரிகிறபடி உங்களில் யாருக்கும் புரியவில்லையே!” என்று அழுகின்றாளாம். குற்றஞ்செய்தவர்களிடத்துக்கூட ஹிதமாகவும் தயாளகுணத்துடனும் நடந்து கொள்ளும் இந்த பக்குவம் கூரத்தாழ்வார் சம்பந்தமுடையவர்கள் அனைவருக்குமே உள்ளதொன்றாகும்! ஆழ்வான் தமக்கு தீங்கிழைத்த நாலூரனிடத்து பரிவுக் காட்டினாரென்றால் அவரது மனைவியோ தாம் பெற்றப் பிள்ளையை மிகவே துன்புறுத்திய மன்னனிடத்து காட்டும் பரிவு அப்பரம்பரையின் சிறப்பு!   வைணவத்தின் ஏற்றம்!

                                                             -Posted on 7th August’ 2008-

 

 

 

 

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: