Srirangapankajam

August 7, 2008

PESUM ARANGAN-88

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 10:53 pm

நம்மாழ்வாரிடத்து மதுரகவிகளிருந்ததைப் போன்று, நாதமுனிகளிடத்து உய்யக்கொண்டாரிருந்ததைப் போன்று,
நஞ்சீயர் பட்டரை விட்டு அங்கிங்கு அகலாமல் அவருடனேயே சத்சங்கத்தில் ஆழ்ந்திருந்தார்.

ஒரு நாள் பகலெல்லாம் நடந்த ஒரு களைப்பில் நஞ்சீயரின் மடியில் கண் வளர்ந்தருளுகின்றார் பட்டர்.    இதனை பெரிய பாக்கியமாக கருதிய நஞ்சீயர்,   அந்த இரவு முழுதும் தூங்காமல், துடையை ஆட்டாமல், மாற்றாமல், அசைக்காமல் இருந்தாராம். சிஷ்யன் ஸ்வரூபம் எப்போது பூர்த்தி பெறுகின்றது? ஆச்சார்ய விஷயத்தில் மூச்சற்றுப் படுக்கையாய் அடிமை செய்கையினால் பூர்த்தி!.

நஞ்சீயர் பட்டரைப் பார்த்து, ‘பெருமாள் சந்திரபுஷ்கரிணிக் கரையிலே கண்வளர்ந்தருளுவதற்கு காரணம் என்ன?’ என்று வினவுகின்றார்.    பட்டர்,    ‘நாராயணா! மணிவண்ணா! நாகணையாய்! என்று அந்த யானை கதறிய பின்பே அந்த மடுவின் கரையில் அவன் எழுந்தருளினான். ஆனால் சந்திரபுஷ்கரிணியின் கரையிலே சம்ஸாரக்கடலில் மூழ்கும் என்னை(நம்மை),   நான்(நாம்) கூப்பிடுவதற்கு முன்னேயே வந்து என்னை(நம்மை) எடுக்கைக்காக(காப்பாற்றுவதற்காக!)  கண் வளர்தருளுகின்றான்.      நீர் இவ்வர்த்தம் கேட்டது உம்முடைய புத்தியினாலன்று!       உம்மைக் கொண்டு நம்பெருமாள் இதனை எனக்கு உணரவைத்தார்!”      என்று அரங்கனின் அளவற்ற கருணையை நமக்கும் உணர்த்துகின்றார்.

ஒரு முறை பட்டரும் நஞ்சீயரும் பாதிரி என்கின்ற கிராமத்திற்கு போகின்றார். அங்கு களைப்பு நீங்க ஒரு வேடனின் குடிசை வாசலில் இளைப்பாறுகின்றார். அந்த வேடன் தானிருந்த ஆசனத்தினை நஞ்சீயருக்குக் கொடுத்து பட்டருக்கென ஒரு கட்டிலை வெகுசீக்கிரத்தில் அமைத்து, அதில் பட்டரை அமரச்செய்தான். பட்டர் அதன் மீது எழுந்தருளி சிந்திக்கலானார். ‘இவன் நம்முடைய வைபவங்கள் (சிறப்புகள்) அறிந்து செய்யவில்லை! நமக்கு நன்றிக்கடனாயும் செய்தானில்லை! ஏதேனும் எதிர்பார்த்தும் செய்தானில்லை! நம்முடைய வீட்டிற்கு வந்தாரேயென்றே அபிமானத்தினாலன்றோ இவையனைத்தும் செய்தான்! ஒரு சாதாரண வேடனுக்கே இத்தகைய பெருங்குணம் இருக்குமாயின், அந்த கருணைக்கடல் அரங்கனை அண்டியவர்களிடத்து அந்த சர்வேஸ்வரன் எத்தனைப் பரிவோடுயிருப்பான்!” என்றவாறு சிந்தித்து, ‘இங்கு விசேஷம் எது?‘ என்று அந்த வேடனிடத்து கேட்டார். அவனும், ‘நாயன்தே! நான் காட்டிலே வேட்டைக்குப் போனேன். அங்கு ஒரு குட்டிமுயலை பிடித்தேன். அதனுடைய தாயானது என் முன்னே வந்து வழியிலே எதிரே கும்பிட்டுக் கொண்டு கிடந்தது. அத்தைக் கண்டு எனக்கு இரக்கம் பிறந்து அதின் குட்டியை அதன் தாயிடம் விட்டு நகர்ந்தேன்’ என்று தான் சமீபத்தில் கண்ட ஒரு அதிசயத்தினை பட்டரிடத்து வெளிப்படுத்தினான். இதனைக் கேட்டவுடனேயே பட்டர் பரவசமடைந்தார்
.
‘ஒரு சேதநனுக்கு இல்லாதது ஒன்று!   பரம சேதநனுக்கு உள்ளது ஒன்று!

ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ!
அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:!
(பலஸாதனமான) எல்லா தர்மங்களையும் வாஸனையுடன் விட்டு என்னை ஒருவனையே உபாயமாக அடை. நான் உன்னை எல்லா பாபங்களின்றும் விடுவிக்கிறேன். துக்கிக்காதே!

என்று இந்த முயலுக்கு யாரும் உபதேசித்தவர்களும் இல்லை!

ஆர்த்தோ வா யதி வா த்ருப்த: பரேஷாம் சரணாகத: !
அரி: ப்ராணாந் பரித்யஜ்ய ரக்ஷிதவ்ய: க்ருதாத்மநா !!
பயந்தவனாகவோ, பயமற்றவனாகவோ, எதிரிகளுக்குள் ஒருவன் சரணமடைந்து விட்டானாகில், அவ்வெதிரி நன்னெஞ்சையுடையவன் ஆனால், ப்ராணனைவிட்டாவது ரக்ஷிக்கப்பட வேண்டும்

என்று இந்த வேடனுக்கு யாரும் உபதேசித்தார்களுமில்லை!
உபதேசம் பெறாவிட்டாலும் சரணாகதி பலிப்பதே! இப்படியொரு பிரமாணத்தினால் இது நமக்கு ஸித்தித்ததே! என்று நஞ்சீயரிடத்து அருளுகின்றார்.

பட்டர் வாழ்ந்த காலத்திலே வீரசுந்தரப்ரஹ்மராயன் என்ற ஒரு அரசன் அரசாட்சி செய்து வந்தான். இவன் கூரத்தாழ்வானின் சீடரும் கூட. இவன் பெருமாளுக்குத் திருமதிள் கட்டுகின்றான். அப்போது திருமங்கையாழ்வாரும், தொண்டரடிப்பொடியாழ்வாரும் திருமாலைக் கட்டிய பிள்ளைபிள்ளையாழ்வான் திருமாளிகை திருமதிள் கட்டும் பாதையில் இடையேயிருக்க அதனை இடிப்பதற்கு முற்படுகின்றான் அவ்வரசன். பட்டர் அரசனிடத்து, ‘ உம் திருமதிளா பெருமாளுக்கு ரக்ஷகம்(பாதுகாப்பு)? அவருடைய மங்களாசாஸனமேதான் ரக்ஷையாகும்! ஆகையாலே திருமங்கையாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார் ஆகியோர் திருமாலை கட்டிய இந்த ஸ்தானத்தினை விட்டு மதிளைச் சற்று விலக்கிக்கட்டுங்கள்’ என்று சொல்ல, வீரசுந்தரப்ரஹ்மராயன் தம் ஆச்சார்யனுடைய புத்ரனாயிற்றே! என்றும் கூட பாராமல், மதிக்காமல், பிள்ளைப்பிள்ளையாழ்வான் திருமாளிகையையிடித்து திருமதிளைக் கட்டினான். பட்டரை கோவிலுள் இருக்க விடாமல் எவ்வளவு தொந்தரவு செய்யமுடியுமோ அவ்வளவு உபத்ரவங்களைக் கொடுக்க ஆரம்பித்தான்.


பட்டர் ஸ்ரீரங்கத்தினை விட்டுத் திருக்கோஷ்டியூருக்கு புறப்பட்டு விட்டார்.    நடுவழியில் சற்றே இளைப்பாறி நிற்க நஞ்சீயரைக் காணோம்!   நஞ்சீயர் வெகு தொலைவிலிருந்து ஒடி வந்து, பட்டரை அமுது செய்யப்பண்ணி இளைப்பாறச் செய்கின்றார். பட்டர் அப்போதும் நஞ்சீயருக்கு விசேஷ கடாக்ஷம் செய்தருளுகின்றார்.    பட்டரும் நஞ்சீயரும் திருக்கோஷ்டியூரினையடைகின்றார்கள்.

+++++++++++++++++ ++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++

அன்று இந்த வீரசுந்தரப்ரஹ்மராயன் என்ற அரசன்! இன்று ஒரு சில அதிகாரம் படைத்தவர்கள்! அவருக்குத் துணைப்போகும் சில நாலூரான்கள்!   நம் ஸ்ரீரங்கம் கோவிலில் காயத்திரி மண்டபம் பிரசித்தமானது. அர்த்த மண்டபமும் சந்தனு மண்டபமும் சேர்ந்து காயத்ரி மண்டபம் என்றழைக்கப்படும்.   இது முழுக்கவுமே கருங்கல்லாலானது.    சுமார் 20 வருடங்களுக்கு முன் தூண்கள் அனைத்துமே பித்தளைத் தகடுகளால் கவசமிடப்பட்டு மண்டபமே தகதகவென அற்புதமாக மின்னும். கருங்கல் சுவர் முழுதுமே கல்வெட்டுக்களும் காணப்படும். பல்லாயிரக்கணக்கான வருடங்களினால் பற்பல வேதகோஷங்களையும், பலகோடி சத்புருஷர்களாலும், யோகிகளாலும், சித்தர்களாலும் தீண்டப்பட்டும், வருடப்பெற்றுமுள்ள அந்த கருங்கற்களுக்கே ஒரு தனி அதிர்வலையுண்டு! அந்த காலக்கட்டத்தில் இதனை முழுதும் கருப்பு கிரானைட் கற்களால் அழகுபடுத்துவோம் என்று பல எதிர்ப்பையும் மீறி, பலமாக அனைத்தையும் கிரானைட் கற்களால் மூடிவிட்டனர்.   இதன் பிறகு ஒரு நாள் மூலஸ்தானத்தில் முறைப் பார்த்துக் கொண்டிருந்தேன்! ஹைதராபாத்திலிருந்து ஒரு கௌரவமான நடுத்தர வயதினர் பெருமாள் ஸேவிக்க வந்தார்! இதனைப் பார்த்தவுடன் அவருக்கு பலத்தக் கோபம் உண்டாயிற்று!

நவீனக்கோவில்கள் பல அங்கு உண்டு! பல மைல்கள் கடந்து பாரம்பரியமும் மிகப் பழமையான கோவிலுமான இதற்கு ஆசைஆசையாய் உன்னதமான அனுபவம் பெற வந்தால் இதனையும் சினிமாக் கொட்டகைக் கழிவறைப் போன்று ஆக்கிவிட்டீர்களே! பாவிகளா!’ என்று கன்னாபின்னாவென்று எங்கள் எல்லோரையுமே திட்டி தீர்த்துவிட்டார். ஏதும் பேசமுடியாது வாய்மூடி தலைகுனிந்து நின்றோம் நாங்கள்!. யாரோ சிலர் நினைத்ததை சாதிக்க அன்று அவமானப்பட்டது நாங்கள்! 

                                                    -Posted on 6th August’ 2008-

 

 

 

 

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: