Srirangapankajam

August 6, 2008

PESUM ARANGAN-87

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 11:40 am

பட்டரின் பரிபூர்ண ஆசியினால், வேதாந்தி, தினந்தோறும் திருமாலடியவர்களை நன்கு உபசரித்து பூசித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் வேதாந்தி வெளியே சென்ற நேரம் இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள் அமுது செய்ய வேதாந்தியின் திருமாளிகைக்கு வரவும்,  வேதாந்தியின் மனைவிகள் இருவரும் ‘இங்கு ஒன்றுமில்லை’ என்று சொல்லி உதாஸீனம் செய்தனர். அவர்கள் வேதாந்தியிடத்து இத்தை அறிவிக்க, வேதாந்தி வீட்டிற்குச் சென்று விசாரிக்க,  இது பெரிய சண்டையாகி, வேதாந்தி வெறுத்துப் போனார்.   இல்வாழ்க்கைக் கசந்தது.  

தமது சொத்தினை மூன்றாகப் பிரித்து தம் மனைவிகளிருவருக்கும் இரண்டு பாகங்களைத் தனித்தனியே பகிர்ந்தளித்து மீதமுள்ள ஒரு பங்கினை தம் ஆச்சார்யருக்காக தனியே வைத்தார்.   ஸந்நியாசம் பெற்றார்.    சிறுப்புத்தூரிலே அநந்தாழ்வானைக் கண்டு ஸேவிக்கின்றார்.   அநந்தாழ்வான், ”வாரீர் வேதாந்திகளே! ஸூகுமாரரான நீர் இங்ஙனமே செய்யலாகுமா? வேர்த்தபோது நீராடிப் பசித்த போது அமுது செய்து பட்டர் திருவடிகளே சரணமென்றிருந்தால், உம்மை பரமபதத்திலிருந்து தள்ளிவிடுவாருண்டோ? இனியென்!
திருமந்திரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து த்வயைகநிஷ்டராவீர்’ என்று ஆசீர்வதித்து, ‘போம்” என்று அனுமதியளிக்கின்றார்.  அநந்தாழ்வான் கூறியபடி அநுசந்தித்து, கைங்கர்யநிஷ்டராய் காலங்கழிக்க ஸ்ரீரங்கமே சிறந்த இடம் என தீர்மானிக்கின்றார்.    துரிதமாக வந்தடைகின்றார் ஸ்ரீரங்கத்திற்கு!.

 

                                            பட்டரும் நஞ்ஜீயரும்

வந்தவுடனேயே பட்டரின் திருவடிகளில் வீழ்கின்றார்.    தாம் கொண்டுவந்த தனத்தினை அவரது திருவடிகளில் சமர்ப்பிக்கின்றார்.    அவரிடத்து பட்டர் மிகவும் உகந்தருளுகின்றார். ‘நம்முடைய ஜீயர் வந்தார்” என்று வாரியெடுத்துக் கட்டிக் கொண்டருளி, ஒரு க்ஷணமும் பிரியாமல் தம்முடைய ஸந்நிதியிலே வைத்துக் கொண்டு ஸகலார்த்தங்களையும் பிரஸாதித்தருளுகின்றார். ஜீயரும் பட்டரையல்லாது மற்றொரு தெய்வம் அறியாதிருந்தார். பட்டரும் நம்முடைய ஜீயர் என்று சொல்லி அவரை அணைத்துக்கொண்ட நாள் தொடங்கி வேதாந்திகளுக்கு ‘நஞ்சீயர்” என்ற திருநாமமுண்டானது.

++++++++++++++++++++++++++++++++++++++++++

இராமானுஜர் சந்நியாசம் பெற்றதும் மனைவியினாலே, நஞ்சீயர் ஜீயரானதும் மனைவியினாலே!. இதில் மனைவி என்பவள் ஒரு காரணம்தான்.   நம்பெருமாள் நம் வஸ்து இது நம்மிடம்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானம் செய்தால் அதனை ஏதேனும் ஒரு காரியத்தினால் அல்லது காரணத்தினால் நிறைவேற்றுவான். இதுதான் உண்மை!

அடியேனுடைய திருத்தகப்பனாருக்கு 67 வயதிருக்கும். ஒரு புகழ் பெற்ற ஜோதிடர் – திரு. ஜி.கே. தர்மராஜ் என்று திருநாமம்,   எம் தந்தையினிடத்து அலாதி பிரியமும் மிக்க மரியாதையுடையவர். எங்களது வீட்டில் பெருமாள் ஸேவிப்பதற்காகத் தங்கினார்.   என் திருத்தகப்பனாரின் ஜாதகத்தினை அப்போது கவனமாக ஆராய்ந்தார்.    ‘அண்ணா! இன்னும் சில மாதங்களில் உங்களுக்கு ஒரு கடுமையான கண்டம் உள்ளது. உயிர் தப்பிப்பதற்கான வாய்ப்பேயில்லை. தாங்களுக்கு ஒரே ஒரு வழி மட்டுமேயுள்ளது. சந்நியாசம் வாங்கிக் கொள்ளுங்கள். மேலும் பல வருடங்கள் தாங்கள் வாழலாம். இல்லறம் துறந்து என்று துறவறம் மேற்கொள்கின்றோமோ அது ஒரு புது ஜனனம். அப்போது நம்முடைய பூர்வ ஜனன ஜாதகம் வேலை செய்யாது. ஒரு நல்ல நேரம் பார்த்துத் தருகின்றேன். தயைகூர்ந்து ஸந்நியாசம் பெற்றுக் கொள்ளுங்கள். எங்களனைவருக்கும் உங்களது உயிர் முக்கியம்” என்று வற்புறுத்தினார். இதற்கு என் திருத்தகப்பனார் சம்மதிக்கவில்லை. ”நான் இறந்தாலும் ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சகனாகவே கடைசி வரை கைங்கர்யம் செய்து இறக்க விரும்புகின்றேன். எனது இறப்பைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இது பற்றிய விவாதம் இனி வேண்டாம்’ என முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.   ஜோதிடர் கூறியது போன்று சில மாதங்கள் கழித்து சில நாட்களே நோய்வாய் பட்டார்.    எனது வீட்டின் பூஜையறைக்கு நேர் எதிரிலே கட்டிலில் எங்கள் பூஜையறையிலுள்ள அரங்கநகரப்பனைத் தரிசித்த வண்ணமிருந்தார்.    ஸ்ரீஜயந்தியன்று அடியேன் திருவாராதனம் செய்து தீர்த்தப்பிரஸாதம் கொடுத்த போது உகப்புடனே ஏற்றார்.

என்றைக்குமே கலங்காத அவரது கண்கள் சற்றே கசிந்தது!

அடுத்து இரு நாட்களில் வந்தது ஏகாதசி!     அன்றிரவு பரமபதித்தார்! துவாதசியன்று தகனம்!.

                                                      -Posted on 4th August’ 2008-
 

 

 

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: