Srirangapankajam

August 4, 2008

PESUM ARANGAN-86

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 6:14 pm

அரசிளங்குமரன் வேட்டைக்குக் கானகம் கிளம்புவது போன்று ஸ்ரீரங்கராஜபுத்திரனாகிய பட்டர் தமது பரிவாரங்களோடு வாதவேட்டைக்கு மேல்கோட்டை நெருங்குகின்றார். காவிரிக்கரையினில் சிறுபுத்தூர் என்ற சிற்றூரின் அருகிலே இவரை அனந்தாழ்வான் எதிர்கொண்டு ‘எங்கள் குடிக்கரசே! வாரும்” என்றழைத்து தம் சந்தோஷத்தினை அவரை நெஞ்சோடு அணைத்து பரிவோடு பேசி வெளிப்படுத்துகின்றார்.

யாதவாத்ரோஜிகமிஷா யேஷாங்கேஷாஞ்ச வித்யதே!
தேஷாம் தேஸே யமபடா: ந கச்சந்தி கதாசந !!

யாதவாத்ரிக்குச் செல்ல வேண்டும் என்னும் விருப்பம் ஏற்பட்டாலே போதும், அவன் பெரும்பாவியாயிருந்தாலும் அவனிடத்து யமதூதர்கள் ஒருபோதும் நெருங்கமாட்டார்கள்.

ஸஹஸ்ர சிகாஸ்ஸோயம் ஸாக்ஷாச்சே ஷாத்மகோ கிரி:!
வைகுண்டாதபி யத்ராஹம் ரமயா ஸஹிதோ ரமே !!
ஆயிரம் சிகரமுடைய இம்மலை ஆதிசேஷனின் உருவமாகும். இங்கு ஸ்ரீதேவியுடன் கூடியிருந்து வைகுண்டத்தைக் காட்டிலும் இன்புறுகிறேன் என்கிறார் ஸ்ரீமந் நாராயணன்!

வைகுண்டவாஸி நஸ்ஸர்வேசேஷ சேஷாசநாதய: !
திவ்யக்ஸ்தாவர ஜன்மாதி ஸ்ரயந்தே யதுபூதரே !!
வைகுண்டத்தில் வாழும் சேஷன், விஷ்வக்ஸேனர் முதலான நித்யசூரிகள் ஊர்வன, நிற்பனவாக யாதவாத்ரியில் பிறப்பெடுத்துள்ளனர்.

என்னும், மகாபெருமைகளையுடைய செம்பொன் யாதவாத்ரி வந்தடைகின்றார். ஸமஸ்த பாபங்களையும் போக்கக் கூடிய கல்யாண புஷ்கரிணியில் நீராடி தம்முடைய நித்யகர்மாக்களைச் செய்கின்றார். இராமனுஜர் நியமித்தருளிய ஐம்பத்திருவர் கைங்கர்யபரர்களும் சடகோபன் என்ற கைங்கர்யபரரை முன்னிலையாக வைத்து எதிர்கொள்கின்றனர். பட்டர் அவர்களைனைவரையும் சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கின்றார். விமானத்தை அஞ்சலித்து உள்ளே புகுந்து ஸ்ரீபலிபீடத்திற்கருகில் சாஷ்டாங்கமாக ஸேவித்து,

முதலில் அங்கு இராமானுஜரின் சந்நிதிக்குள் எழுந்தருளி
‘இராமானுஜஸ்ய சரணம் சரணம் ப்ரபத்யே’ என்று அந்த உடையவரினால் ஆறத் தழுவப் பெற்ற அந்த விக்ரஹத் திருமேனியின் பாதங்களில் சரணமடைகின்றார். திருவாழியாழ்வான், யதுகிரி நாச்சியாரை ஸேவித்த பின்பு
ஆனந்தமயமான திவ்ய விமானத்தினையும் தொழுகின்றார். உள்ளே எழுந்தருளி நம்மாழ்வாரையும், திருமங்கையாழ்வாரையும் மங்களாசாஸனம் செய்து, பின்பு செல்லப்பிள்ளையின் திருவடி தொழுகின்றார். அவரது ஸௌந்தர்யமான, தேஜோமயமான விக்ரஹத்தினால் ஆழங்கால் பட்டு வெகுநேரம் வைத்தகண்களை இமைக்காமல் தரிசிக்கின்றார். திருநாராயணரும் உகப்போடு பட்டரின் வரவினால் குதூகலமடைந்து, அனைத்து மரியாதைகளையும் அளித்து விடை கொடுத்தருளுகின்றார்.

பட்டரது பெருமைகளை கட்டியம் சொன்னபடி ஒரு சிறு படை வேதாந்தியிருக்கும் ஊரினை நெருங்குகின்றது.
பட்டர் ஸர்வாபரணபூஷிதராய், சத்ரசாமர தாள வ்ருந்தாதிகள் ஸேவிக்க மணிப்பல்லக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது இரு பிராமணர்கள் வந்து இவர்களை தடுக்கின்றார்கள். ”நீர் இவ்வளவு ஆடம்பரத்தோடு போவீர்களாயின் வேதாந்தி உங்களைக் கண்டு கொள்ளாமல் போனாலும் போகலாம்! வேதாந்திகள் நன்பகலில் பிராம்மணர்களுக்கு போஜனமிடுவார். நீங்கள் அப்போது அவர்களோடு கலந்து உள்ளே சென்று விடுங்கள்” என்று யோசனைக் கூறுகின்றார். பட்டர் தம்மோடு வந்த பரிஜனங்களையெல்லாம் ஊருக்குத் தூரத்தில் நிறுத்துகின்றார். தம்முடைய ஆபரணங்கள் அனைத்தும் களைந்து காவியுடையை தாம் உடுத்தியத் துணிக்கு மேலே தரிக்கின்றார். உள்ளே புகுந்து விட்டார்.
வேதாந்தி அங்கு வருகின்றார். எல்லாரையும் உபசரிக்கின்றார். பட்டர் அங்கு சாப்பிடச்செல்லாமல் இருப்பதைக் கண்ணுற்று ‘எல்லாரும் புசிக்கின்றவிடத்திலே போய் போம்” என்று சாப்பிட்டிற்கு அழைக்கின்றார். பட்டர் ‘எனக்கு வேண்டுவது சோற்றுப் பிக்ஷையன்று” என்கிறார். ‘கா பிக்ஷா’ என்று வினவுகின்றார் வேதாந்தி! ‘தர்க்கபிக்ஷா’ என்று பதிலுரைக்கின்றார் பட்டர். காவியுடுத்தி வந்திருப்பவர் பட்டரே என்றறிகின்றார் வேதாந்தி! பட்டர் காவியுடையை கழற்றி எறிகின்றார்.
வேதாந்திக்கோ இவரது வித்யா மாஹாத்மயம் காண ஆசை பெருகிற்று! தர்க்கப் போர் தொடங்கியாயிற்று!
இரண்டு மதங்கொண்ட யானைகள் மோதிக் கொண்டது போல் இருவரும் தர்க்கப்போரை நடத்துகின்றார். ஒன்பது நாளும் இத்தர்க்கத்திலேயே முடிவில்லாமல் சென்று கொண்டிருந்தது. பத்தாம் நாள் பட்டர் விசிஷ்டாத்வைத பரமாக உபன்யாஸிக்கின்றார். இதனை கேட்க கேட்க வேதாந்தியின் உடல் நடுங்கியது. வேறொன்றும் சொல்ல முடியவில்லை. தேவரீரை ‘மநுஷ்யன் மாத்திரமே என்றிருந்தேன். நம்பெருமாளென்ன, நீரென்ன ஒரு பேதமும் இல்லை! உறங்கும் பெருமாள் அவர், உலாவும் பெருமாள் நீர்!’
என்று பட்டரின் திருவடிகளில் சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கின்றார். பட்டரும் தாம் எழுந்தருளிய கார்யம் அதி சீக்கிரமாக பலித்ததையெண்ணி சந்தோஷமடைகின்றார். வேதாந்தி ‘அடியேனை இரங்கியருள வேணும்’ என்று விண்ணப்பிக்கின்றார். பட்டர் மிகவும் திருவுள்ளம் உகந்தருளி அவரை அங்கீகரிக்கின்றார்.

அர்த்த பஞ்சகதத்வஜ்ஞா பஞ்ச ஸம்ஸ்கார ஸம்ஸ்க்ருதா:!
ஆகார த்ர ஸம்பந்தா மஹா பாகவதாஸ் ஸ்ம்ருதா !!
(ப்ராப்ய ஸ்வரூபம் முதலிய) அர்த்த பஞ்சகத்தின் தத்துவத்தினையறிந்தவர்களாய், (தாபம் முதலிய) பஞ்ச ஸம்ஸ்காரத்தினால் ஸம்ஸரிக்கப் பெற்றவர்களாய், (அநந்யார்ஹ சேஷத்வம், அநந்ய சரணத்வம், அநந்ய போக்யத்வம் (மஹாவிஷ்ணுவைத் தவிர வேறு யாரிடத்தும் சரணடையாமை, பிரஸாதங்கள் எடுத்துக் கொள்ளாமை, ஈடுபாடு கொள்ளாமை) என்னும்) மூன்று தன்மைகளை உடையவர்கள் ‘மஹாபாகவதர்கள்’ எனப்படுகின்றனர்.

என்று சொல்லுகின்றபடி, தாப புண்ட்ராதி பஞ்ச சம்ஸ்காரங்களையும் ப்ரஸாதித்து, அர்த்தபஞ்சக ஞானத்தையுண்டாக்கி, வேதாந்தியை மஹாபாகவதராக்கி விசேஷ கடாக்ஷம் செய்தருளினார்.

‘வேதாந்திகளே! நீர் ஸர்வக்ஞானகையினாலே உமக்கு விரிவாக உபதேசிக்க ஏதுமில்லை. விசிஷ்டாத்வைதமே பொருள்!. ஸ்ரீய:பதியைப் பற்றி ஸ்ரீராமானுஜ ஸித்தாந்தத்தையே நிர்வஹித்துப் போரும்’ என்றருளினார்.
ஆழ்வார்கள் அருளிச்செயல் நாலாயிரமும் ஓதும்படி பணித்தார். ‘இனி நம்பெருமாளை ஸேவிக்கப் போகிறோம்’ என்று புறப்படுகின்றார். வேதாந்திகளும் அவரோடு கூட ஊர் எல்லைவரை வருகின்றார். ஊர் எல்லையில் காத்திருந்த பரிஜனங்கள் பட்டரைச் சூழ்ந்து, வேதாந்தியை வெற்றி கொண்டது குறித்து பூரித்து, அவரை சர்வாபரணங்களாலும் அலங்கரித்து, மணிப்பல்லக்கில் ஏற்றி, திருச்சின்னம் பரிமாற அந்த சிறுபடை கிளம்பிற்று. வேதாந்திகள் பட்டருடைய பெருமையையும், ஸம்பத்தையும் நன்றாக கண்குளிர நோக்கி, ‘இந்த ஸ்ரீமாந் இத்தனைத் தூரம் காடும் மலையும் கஷ்டமுங் கடந்து எழுந்தருளி, நித்ய ஸம்ஸாரிகளிலுங் கடைகெட்டு ம்ருஷாவாதியாயிருந்த அடியேனுடைய துர்க்கதியைப் பொருட்படுத்தாமல், அதி துர்மாநியான அடியேனைத் திருத்திட தாங்கள் காவியுடைத் தரித்த அவ்வேஷத்தினை நினைத்தால் பொறுக்க முடியவில்லை!” என்று சொல்லி வாய்விட்டு கதறியழுகின்றார். பட்டரின் திருவடிகளில் வீழ்கின்றார். பட்டர் வேதாந்தியின் முடிபிடித்தெடுத்து நிறுத்தித் தேற்றுகின்றார். ‘நீர் இங்கே ததீயாராதநகைபரராய் சுகமேயிரும்!” என்று பரிபூரணமாகக் கடாக்ஷித்து அங்குள்ள நரசிம்ஹரையும் நன்கு தரிசித்து, சிறுபுத்தூர் வந்து அநந்தாழ்வானையும் சந்தித்து நடந்ததைத் தெரிவித்து ஸ்ரீரங்கம் வந்தடைகின்றார்.

ஸகல பரிஜநபரிச்சதங்களோடே ‘வேதாந்தாசார்ய பட்டர் வந்தார் – வேதாந்திகளை வென்ற விரகர் வந்தார்’ என்று திருச்சின்னம் பரிமாற அணியரங்கன் அடியார்கள் எதிர்கொண்டழைக்க அரங்கன் அதீதப்ரிதியுடனே பட்டரை ஆசீர்வதித்து அருளினார்.

-Posted on 3rd August’ 2008-

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: