Srirangapankajam

August 3, 2008

PESUM ARANGAN-85

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 10:30 am

பட்டருக்கு உபநயனம் ஆனப்பிறகு வேதம் கற்பதற்கு அனுப்புகின்றனர். முதல் நாள் வேதபாடம் ஆகின்றது. சில நாட்கணக்கில் வேதம் சொல்லிக் கொடுத்தால்தான் அதனது ஸ்வரம் மாணவர்கள் தெளிவாக புரிந்து கொள்வர். அதன்படி அடுத்தநாள் அதே வேதபாடத்தினை நடத்துகின்றார் ஆசிரியர். பட்டர் விளையாட ஓடி விட்டார். பெற்றோரிடத்துப் புகார். ஆழ்வானும் ஆண்டாளும் விசாரிக்கின்றனர். அவர்கள் சொல்லியதையேத் திரும்பச் சொல்லிக் கொடுக்கின்றார்கள் என்கிறார் பட்டர். எங்கே! அவர்கள் சொல்லிக்கொடுத்ததைத் திரும்பச் சொல்லு? என்கின்றனர் இருவரும். ஸ்வர சுத்தமாக திரும்ப ஓப்புவிக்கின்றார் பட்டர். அவ்வளவு அதிபுத்திசாலியாகத் திகழ்கின்றார் பட்டர். ஆழ்வானும் எம்பாரும் பட்டருக்கு மேலும் அர்த்த சிக்ஷைகளும், தத்வ சாஸ்திரங்களையும் போதித்தனர்.

நம்பெருமாளும் தாயாரும் திரையிட்டிருக்கும் சமயம் ஏகாந்தத்தில் பட்டர் ஒருநாள் திரையின் உள்ளே சென்றுவிட்டார். அவ்வமயம் அனுமதி கிடைக்காமல் திரையை விட்டு வெளியேறுமாறு நேரிட்டது. அரங்கன் பட்டருக்கு அருளப்பாடிட்டு அழைக்கின்றான். ‘நாம் திரைக்குள்ளிருந்து அனுமதியாத போது என்ன நினைத்திருந்தீர்’ என்கிறார். பட்டர் உடனே, ‘பெருமாளும் நாச்சிமாருமாக நினைத்திருந்தேன்’ என்கிறார். உள்ளே நுழைய முற்படும்போது என்ன நினைத்தீர் என்று வினவ ”என்னைப் பெற்ற ஆழ்வானும் ஆண்டாளுமாக நினைத்திருந்தேன்’ என்று விண்ணப்பம் செய்ய, அரங்கன் உடனே, ‘நம் ஆணை. நம்மை முன்புபோலவே உம் பெற்றோராகவே நினைத்திரும்’ என்று திருவுள்ளமாயருளினார். அவரை அரங்கன் தம் புத்திரனாகவே கருதினார்.

பட்டருக்கு விவாஹம் குறித்து ஆழ்வான் முயற்சிக்கின்றார். பலன் ஏதும் தெரியாதபோது,
பெருமாளிடத்தில் பிரார்த்திக்கின்றார். அரங்கன் ‘நீரோ அதற்குக் கடவீர் (பொறுப்போ)? நாமன்றோ? தகுதியாகச் செய்விக்கின்றோம். நீர் போம்!” என்று அருளி பெரியநம்பிகளின் உறவினரிடத்து பெண்கொடுக்கும்படி அவர்களுக்கு ஸ்வப்நத்தில் அருள அதன்படியே தனது குமாரத்தி அக்கச்சியைப் பட்டருக்கு கன்னிகாதானம் பண்ணிவைக்கின்றனர்.

பட்டரின் கீர்த்தி நாளுக்கு நாள் பெருகி அவரது சீடர்கள் பெருங்கூட்டமாயினர். அவ்வளவிலே மேல்கோட்டை திருநாராயணபுரத்திலிருந்து ஒரு யாத்ரீகர் பெருமாள் ஸேவிக்க வந்தவர், பட்டரின் கீர்த்தியையும் கூட்டத்தினையும் பார்க்கின்றார்.

பட்டரிடத்து, ‘உம்மைப்போலவே மேல்நாட்டில் ‘வேதாந்தி’ என்ற ஒரு மஹாவித்வான் இருக்கின்றார். அவனுடைய வித்யையும் கோஷ்டியும் போல உமக்கிருந்தது’ என்கின்றார். அதே யாத்ரீகன் மீண்டும் மேல் நாட்டிற்குச் சென்று வேதாந்தியிடத்து பட்டரைப் பற்றிச் சொல்கின்றார். தமக்கு நிகர் யாருமில்லை என்று இறுமாந்திருந்த வேதாந்தி சற்றே திடுக்கிடுகின்றான். மீண்டும் அந்த யாத்ரீகன் ஸ்ரீரங்கம் வருகின்றான். பட்டரிடத்து தான் வேதாந்தியை சந்தித்தது குறித்தும் அவரிடத்து பட்டரைக் குறித்து சொல்லியது குறித்தும் சொல்கிறான். பட்டருக்கு சற்றே வருத்தம். ‘நமக்கு கேவலம் வேதாந்தசாஸத்ரங்களே தெரியும் என்று தப்பாய் சொன்னாயே!’ எமக்கு திருநெடுந்தாண்டகம் தெரியுமென்று அவரிடத்து சொல்லாதிருந்தாயே!’ என்று கூறுகின்றார். மீண்டும் யாத்ரீகன் மேல்கோட்டை திருநாராயணபுரத்திற்கு ஸ்ரீரங்கத்திலிருந்து பயணிக்கின்றான். அதன்படியே இந்த யாத்ரீகன் பட்டருக்கு ‘திருநெடுந்தாண்டகமும் தெரியும்’ என்று சொல்ல, அதுப்பற்றி ஏதுமறியாத வேதாந்தி ‘திருநெடுந்தாண்டகம் என்கிற சப்தத்திற்கு அர்த்தமாகிறதில்லை! அவர் எப்படிப்பட்ட வித்வானோ! என்று கவலைக் கொள்ளத் தொடங்கினார். (ஒரு செய்தி பரிமாற்றத்திற்காக ஒரு யாத்ரீகன் இரண்டுமுறை மேல்கோட்டை திருநாராயணபுரத்திற்கும் ஸ்ரீரங்கத்திற்கும் பயணவசதிகள் ஏதுமில்லாத அந்த காலத்தில் வந்து போவதென்றால் எவ்வளவு கஷ்டம்! இருந்தாலும் அந்த வேதாந்தியை பட்டர், இராமானுஜர் ஆக்ஞைபடி திருத்தி, ஸ்ரீரங்கம் கொண்டு வர வேண்டுமே, அரங்கன் யாத்ரீகனை ஆட்டுவிக்கின்றான். சரித்திரத்தில் பெயர் விடுபட்டுபோன அந்த ஸேவார்த்தி இருமுறை அலைகின்றான் இங்குமங்குமாக!).

பட்டருக்கு வேதாந்தியை நம்முடைய வைணவ தர்ஸனத்திற்கு ஏற்றவாறு திருத்துமென்று உடையவர் நியமத்தருளியது கவனத்திற்கு வருகின்றது. அரங்கனிடத்து பிரார்த்திக்கின்றார். ‘நாயன்தே! மேல்நாட்டில் வேதாந்தியென்று ஒரு பெரிய வித்வானிருக்கின்றான். அவனைத் திருத்தி நம் தர்ஸன ப்ரவர்த்தகனாம்படி பண்ண, அங்கு போக தாங்கள் அனுமதியளிக்க வேண்டும். தேவரீர் அவனை நன்றாகத் திருத்தி ஸ்ரீராமானுஜ சித்தாந்தத்திற்கு நிர்வாஹகனாகும்படி திருவுள்ளம் பற்றியருள வேண்டும்’ என்று விண்ணப்பம் செய்கின்றார். அரங்கன், ‘அப்படியேயாகக் கடவன்! சீக்கிரமாக போய் வாரும்!” என்று திருவுள்ளம் உகக்கின்றார். தீர்த்தம், திருமாலை, திருபரிவட்டம் அனைத்தும் அர்ச்சகர் மூலமாக சாதிக்கின்றார். ‘நீர் நம் குமாரர்யாகையினால் அநேகம் திருவாபரணம், திருப்பரிவட்டம், ந்ருத்த, கீத, வாத்யங்களையும் (ஆடல், பாடல், வாத்ய கலைஞர்களுடனும்), என்னுடைய சகல கைங்கர்யபரர்களையும் கூட்டிப்போம்” என்று விடை கொடுத்தருளுகின்றான்.

(அரங்கனுக்கு என்ன புத்திர வாத்ஸல்யம் பாருங்களேன்!. எக்காரணம் கொண்டும் பட்டர் சோர்வடையலாகாது என்று எவ்வளவு பேரை அழைத்துக் கொண்டு பாதுகாப்பாக போய் வரச்சொல்கிறார்!)

-Posted on 31st july’ 2008-

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: