Srirangapankajam

July 31, 2008

PESUM ARANGAN-84

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 8:32 pm

வடுகநம்பி, நம் பாவங்கள் தொலைய, மோட்சமாகிய பேரின்பத்தினைப் பெற ஒரு எளிய உபாயத்தினைக் கூறுகின்றார்.

ஆசிலாசாரிய பதந்தான் தனியே ஒன்றாம் ஆங்கதுதான்
தேகப் பொலிந்த எதிராசர்க்கன்றி எவர்க்கும் சேராதால்
நேசத்துடனத் திறமறிந்து நின்று கடந்து கிடந்திருந்து
பேசப்படுநும் உரையெல்லாம் இராமாநுசர்பேர் பிதற்றுதரேல்
               -ஸ்ரீஇராமானுஜ வைபவம்: வடிவழகிய தாஸர்-


 

குற்றமற்ற ஆச்சார்யனது திருவடிதான் ஒப்பற்ற ஒன்றாகும். அங்கே அதுவும்தான்
ஒளி பொருந்திய எதிராசர்க்கு அல்லாமல் வேறு எவருக்கும் பொருந்ததாகும். பக்தியுடன் அத்தன்மையையறிந்து நிற்கும் போதும், நடக்கும் போதும், படுக்கும் போதும், உட்காரும் போதும், பேசப்படுகின்ற உங்கள் வார்த்தையெல்லாம் இராமானுசர் பெயரையே சொல்லவேண்டும்!. அப்படிச் சொல்வீர்களானால்,

‘திண்ணம் வீடு திருவாணை பெறுதலென்னச் செப்பினான்”

வைணவத்தின் மிகப் பெரிய வெற்றி நமது பூர்வாச்சார்யர்கள் அடுத்தடுத்து இதன் தர்ஸனத்தினை வழி நடத்திப்போக தகுந்த தலைவரை, ஆச்சார்யனை, தகுதியறிந்து, நம்பெருமாளின் திருவுள்ளம் அறிந்து நியமித்துவிட்டுச் சென்றதுதான். எம்பெருமானார் பட்டரை நியமித்துவிட்டு நிம்மதியடைந்தார். பட்டர் என்னும் வடசொல் வேதசாஸ்திரங்களைனைத்தும் நன்கு கற்றுணர்ந்த வித்வானைக் குறிக்கும் அல்லது ஸ்தோத்திரஞ் செய்யும் தொழிலுடையவன் என்பதனைக் குறிக்கும். இவ்விரண்டுமே இயல்பாக கருவிலேயே நம்பெருமாள் கிருபையடைந்த பட்டருக்கு அமைந்தது. எம்பெருமானாரும் இதனையுணர்ந்தே பராசர பட்டர், வேதவியாச பட்டர் என்று திருநாமமும் சாத்தினார். ஆளவந்தாரின் மனோரதத்தினையும் பூர்ததி செய்தார்.

கூரத்தாழ்வார் தமக்குப் பிறந்த குழந்தைகளுக்கு உடையவர்தான் திருநாமஞ்சாற்ற வேண்டுமென்று அதுப் பற்றி கவலைக்கொள்ளாதுயிருந்தார்.  பன்னிரெண்டாம் நாள் எம்பெருமானார் ஆழ்வான் திருமாளிகைக்கு விரைகின்றார் இக்குழந்தைகளை ஆசீர்வதிப்பதற்காக. அங்கிருந்த எம்பாரைப் பார்த்து ‘ஆழ்வான் குமாரரை எடுத்துக்கொண்டு வாரும்‘ என,  அவர் உள்ளே சென்று ஆண்டாள் அருகிலிருந்த குலக்கொழுந்தான குமாரரைத் தம்மார்பிலே அணைத்துக் கொண்டு எந்தவித திருஷ்டியோ, தோஷங்களோ வாராதபடி ரக்ஷையாக த்வயத்தினை அநுசந்தானம் பண்ணியபடி வருகின்றார். எம்பெருமானார் குழந்தைகளின் தேஜோ மயமான காந்தியையும், திருமுகவொளியையும் காண்கின்றார். ‘எம்பாரே! த்வயம் பரிமளிக்கின்றதே? என் செய்தீர்? என்று விசாரிக்கின்றார். அவரும் ‘சிசுவிற்குக் காப்பாக த்வயாநுஸந்தானம் பண்ணிக்கொண்டு வந்தேன்’ என்று பதிலளிக்கின்றார். ‘இவ்விரு ஜீவனின் சத்விஷயத்திற்கும் நீரே கடவீர்” என்று எம்பாரையே அவர்களது ஆச்சார்யனாக நியமிக்கின்றார்.நம்பெருமாளின் பரிவினாலும், எம்பாரின் அபரிமிதமான ஆச்சார்ய கடாக்ஷத்தினாலும் பட்டர் ஸகலசாஸ்திரங்களிலும் அபாரஞானமுடையவராய் விளங்கினார். ஸ்ரீரங்கநாதன் தனது புத்திரனாக பட்டரை அங்கீகரித்து தம் பக்கலிலே இரண்டு திருமணத்தூண்களிடையேயும் (இந்த ஒளிப்பொருந்திய தூண்கள் ‘கந்தஸ்தம்பங்கள்’ என்றே அழைக்கப்படுகின்றது. ஸ்ரீரங்கநாதனின் பரிமளம் (வாஸனை) இரண்டு தூண்களாக
பரிணமித்து நிற்பதால் ‘கந்தஸ்தம்பங்கள்’ என்று அழைக்கப்படுகின்றது. இவ்விரண்டு தூண்களையும் பரவாஸூதேவனின் இரண்டு கால்களாகவும் தொழுவார். பரமபதத்திலும் இம்மாதிரியே இரண்டு தூண்கள் உண்டாம். பரமபதத்திற்குச் செல்பவர் இந்த தூண்களைக் கட்டித்தழுவிய உடனே நித்தியசூரிகளாய் விளங்குவார்களாம். சாக்ஷாத் அங்குள்ள பரமபதநாதனே இங்கு ரங்கநாதனாய் துயில்வதால் இங்கும் இத்தூணகள் நிலைப்பெற்றன. இதனைத் தழுவும் நமக்கும் நித்தியசூரிகளாகும் பாக்கியம் நிச்சயமே! இதனையே குலசேகர ஆழ்வாரும்

”கடி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மணத்ததூணே பற்றி நின்றேன்
வாயார என்று கொலோ வாழ்த்து நாளே”
என்று மங்களாசாஸனம் செய்கின்றார்.

இதில் ஆழ்வார் மணத்தூணின் அருகில் நின்று என்று சொல்லாமல் “பற்றி நின்று“ என்று கூறியது சிந்திக்கத்தக்கது.)
தூளிக்கட்டி அதில் பட்டரையிட்டு தானும், ஸ்ரீரங்கநாச்சியாருமாக தாலாட்டி, பாராட்டி, சீராட்டி வளர்த்தார்களாம். அக்குழந்தை நம்பெருமாளுக்காக அமுது செய்வதற்காக வைக்கப்பட்டிருக்கும் அமுதினை, கையினால் அள்ளி அலைந்து துழாவ பெருமாள் அது கண்டு மிகவும் உகந்து அவ்வடிசிலை மிகவும் போக்யமாக அனுக்ரஹிப்பானாம்!. இப்படி அரங்கன் அன்போடு அபிமானித்து புத்ர ஸ்வீகாரம் செய்த பாக்கியத்தினால் பட்டருக்கு ‘ஸ்ரீரங்கநாத புத்ரர்” என்ற திருநாமமுண்டு. ‘வானிட்ட கீர்த்தி வளர் கூரத்தாழ்வான் மகிழ வந்த, தேனிட்டதார் நம்பெருமாள் குமாரர் பட்டர்” என்று மகிழ்கின்றார் பிள்ளைப் பெருமாளய்யங்கார்!

பட்டருக்கு ஐந்து வயதிருக்கும் போது தெருவில் மணலில் விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது ஸர்வக்ஞ பட்டர் என்பவர் அந்த திருவீதிகளில் பல்லக்கில் கல்விச்செருக்கோடு பவனி வந்து கொண்டிருந்தார். மிக இளம் பாலகனாகயிருந்த பட்டருக்கு எம்பெருமானார் பவனி வரும் இந்த மண்ணில், செருக்கோடு வரும் இவருக்கு பாடம் புகற்ற நினைத்தார். தம் கையில் ஒரு பிடி மண்ணையெடுத்து ”நீர் ஸர்வக்ஞரானால் எமது கைப்பிடியினுள் எவ்வளவு மணல் உள்ளது என்று சொல்லிவிட்டுப்போம்” என்கிறார்.

 

திகைக்கின்றார் அந்த பண்டிதர்.


 

கலகலவென்று சிரித்த அக்குழந்தை ‘ஓரு பிடி மண் உள்ளது என்று சொல்லத் தெரியாத நீங்களெல்லாம் ஒரு
ஸர்வக்ஞரா?”
என்று அவரின் செருக்கையழித்தவர் இந்த சிறுமாமனிதர்.

                                                   -Posted on 27th july’ 2008-

                                              

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: