Srirangapankajam

July 31, 2008

PESUM ARANGAN-83

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 8:12 pm

தமது 120வது வயதில் (கி.பி. 1137) தாம் அவதரித்த அதே பிங்கள ஆண்டில் மாசி மாதம் வளர்பிறை தசமிதிதியில், திருவாதிரை நட்சத்திரத்தில், சனிக்கிழமை நண்பகலில், பகவத் சாயுஜ்யம் அடைகிறார் உடையவர்.  

 

அவரது ஆத்ம ஜோதி பேரரவின் மேல் துயில் கொள்ளும் அரங்க பெருஞ்சோதியோடு கலக்கின்றது.   உடலைப் பற்றியிருந்த சூக்குமம் அகன்றது.

 

திருமேனியினை மட்டும் தனியேக் கண்ட கந்தாடையாண்டான், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், எம்பார், வடுகநம்பி முதலானோர் ‘ஓ”வென்று கதறி கோஷித்து வேரறுந்த மரம் போல் விழுந்து கிடந்து துடிக்கின்றனர். அவர்கள்தம் திருமிடறு தழுதழுப்ப, திருமூக்கு வெப்படிக்க, இட்டகால், இட்ட கையினராய், கண்ணநீர் வழிந்து ஆறாய் பெருக்க செய்வதறியாது கிடந்தனர். ”தர்மோ நஷ்ட:” (தர்மத்திற்கே பெருத்த நஷ்டம்)” என்று அசரீரித்தது.   நம்பெருமாளின் அந்த விக்ரஹ திருமுகத்திலேயே உடையவரின் இழப்புக் குறித்த விசனம் உண்டாயிற்று.   

 

உத்தமநம்பிகளிடத்து நம்பெருமாள் தாம் உடுத்திக்களைந்த பீதகவாடையினையும், சூடிக்களைந்த தொடுத்த துழாய் மலரினையும், எண்ணெய் கிண்ணம் எல்லாம் ஒரு பொற்தட்டில் வைத்து ஜீயர் மடத்திற்கு அனுப்புகின்றார்.
கோவிலிலிருந்து சகல வாத்யகோஷங்களுடன் உத்தம நம்பி நம்பெருமாள் மரியாதையுடன் ஜீயர் மடம் நோக்கி வருகின்றார்.

அங்குள்ளோர் மனதினைச் சற்று தேற்றி எம்பெருமானாருடைய விமல சரம விக்ரஹத்தைத் தூய்மையாக நீராட்டம் செய்து அலங்கரித்து கேஸவாதி த்வாதச (12) புண்ட்ரங்களையுஞ் சாத்தி,    நம்பெருமாள் சாத்திக்களைந்த பீதகவாடையினைச் சாற்றி, அவர் சூடிக்களைந்த துழாய்மலர் மாலையினையும் இவரது விமலசரம திருமேனிக்குச் சாற்றி அலங்கரித்து உடையவரின் திருவடிகளை தங்கள் கண்ணிலும் நெஞ்சிலும் ஓற்றிக்கொண்டனர்.  

 

 

உடையவரின் விமல சரம திருமேனி !

 

 

நம்பெருமாளிடமிருந்து அனுக்கிரஹிக்கப்பட்ட எண்ணெய் கிண்ணத்திலிருந்த எண்ணெயை எம்பெருமானாரின் திருமுடியில் தேய்த்து, ஸ்ரீசூர்ணபரிபாலனம் செய்து, எண்ணெயையும், ஸ்ரீசூர்ணங்களையும் எல்லாருக்கும் பிரஸாதமாக வினியோகித்தனர். திருக்குருகைப்பிள்ளான் திருக்கையினால் ஆளவந்தாருக்கு நடந்தது போன்று எம்பெருமானாரின் பிரம்மமேத ஸம்ஸ்காரம் நடந்து கொண்டிருந்தது.

 

அவரது திருமேனியை ஒரு திவ்ய விமானத்திலே எழுந்தருளச் செய்தனர்.

 

ஸகல வாத்யங்களும் முழங்கின.

 

உடையவரின் விமானத்திற்கு முன்னே வாத்யகோஷம் முழங்கியது.

 

திருமேனியின் பின்னே உடையவரின் முக்கிய சீடர்கள் வில்லி ஜீயர் மற்றும் யதிவர ஜீயரின் தலைமையில் எழுநூறு ஜீயர் ஸ்வாமிகளும் பரஹ்மவல்லி, ப்ருகுவல்லி, நாராயணானுவாகம் முதலானவற்றை ஓதினர்.

 

பட்டர், கந்தாடையாண்டான், நடாதூராழ்வான் ஆகியோர் இவரின் பிரிவைத் தாங்க மாட்டாராய் அவரவர்தம் சீடர்களோடே ஸ்தோத்திரங்கள் செய்ய,

 

உபவீததாரிகளான (பூணூல் அணிந்த) ஸ்ரீவைஷ்ணவர்கள் ஒன்பதினாயிரம் பேர்களும், உடையரால் திருத்தி பணிகொள்ளப்பட்ட பன்னீராயிரம் பேரும் அருளிச்செயல் மூவாயிரம் முன்னடி, பின்னடியாக ஸேவித்த வண்ணம் பின்னேச் செல்ல,

 

திருவரங்கப் பெருமாளரையர் தலைமையில், திருவாய்மொழியரையர், ஆப்பான், திருவழுந்தூரரையர், திருநறையூரரையர், அழகிய மணவாரரையர் முதலான எழுநூறு திருவாய்மொழி விண்ணப்பஞ் செய்யும் தம்பிரான்மார் (அரையர்கள்) பண்ணிசைத் தாளத்துடன் திருவாய்மொழியினைப் பாடியவாறு பின்னே ஊர்ந்தனர்.

இவர்களுக்கு பின்னே திருவரங்கத்து அமுதனார், பெரியகோவில் வள்ளலார் முதலியவர்கள் ‘இராமானுஜ நூற்றந்தாதி” ஸேவித்தவாறு பின்தொடர்ந்தனர்.

 

ம்பார், பிள்ளான் உள்ளிட்டோர் ஸ்தோத்ரகத்யங்களை
ஸேவித்தனர்.

 

வடுகநம்பி, கோமடத்து சிறியாழ்வான் முதலானோர் உடையவர் பிரபத்தியை அனுஸந்தித்தனர்.

 


 ஜீயர் மடம் தொடங்கி நான்கு உத்திர வீதி, சித்திரை வீதிகளிலும் இவர்கள்தம் புறப்பாடு இடம் கொள்ளாது நிறைந்து வழிந்தது. திருவீதியெங்கும் ஆடைகளால் கோடித்தனர். வீடுகள்தோறும் பெருக்கி, தெளித்து வீதியெங்கும் கோலமிட்டனர். திருவீதியெங்கும் பொரியும் புஷ்பமும் சிதறி கிடந்தன. உடையவரின் திருமேனி புறப்பாட்டின் போது நடைபாவாடையிட்டு, கரும்பும் குடமும் ஏந்தினர். சுமங்கலிகள் மங்கள தீபமேந்தி முதலில் சென்றனர். இருபுறமும் சாமரங்கள் வீசினர். வானத்தில் கருடன் கூடவே வட்டமிட்டு மெதுவே, கூடவே பறந்து வந்து கொண்டிருந்தது.
‘தர்ஸனத்தில் எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளினார்;” என்று ஒற்றைத் திருச்சின்னம் ஒலித்தது.
திருவீதிகள் தோறும் புறப்பாடு கண்டருளினர்.

அரங்கன், ”இராமானுசன் என்தன் மாநிதி” என்றும் ‘இராமனுசன் என்தன் சேமவைப்பு” என்று அருளி, அந்த நிதி வெளியேயெங்கும் போகலாகாது தம்முடையத் திருக்கோவில் ஆவரணத்துக்குள்ளேயே, எப்படி ஒரு மஹாராஜன் தம் மஹஷிகளை அந்தபுரத்திலே அடக்கி வைப்பானோ அதுபோன்று தன்னுடைய சந்நிதிக்குள்ளேயே, யதி ஸம்ஸ்காரவிதியின் படி, பள்ளிப்படுத்தினர்.

இந்த சம்ஸ்காரங்களனைத்தும் நடந்து முடிந்தவுடனே நம்பெருமாளுக்கு உபயநாச்சிமார் ஸஹிதம் திருமஞ்சனம் ஆயிற்று. நம்பெருமாளின் திருமுகங்கன்றி வாட்டமாகவேயுள்ளது. கந்தாடையாண்டான், பட்டர் முதலானாரைப் பார்த்து ‘நம்முடைய அவப்ருதோத்ஸவங் கொண்டாடுமாபோலே நம் உடையவருக்கும் உத்ஸவங்களைக் கொண்டாடுங்கள்” என்று ஆணையிடுகின்றார். உடையவரின் ஸந்நிதிக்கு அக்காரவடிசில் தளிகை அனுப்பியருளுகின்றார்.

நம்பெருமாள் ஆணையிட்டதால், கந்தாடையாண்டான், நம்பெருமாள் அனுமதியுடனே, எம்பெருமானாரை அர்ச்சாவதாரமாக எல்லாரும் ஸேவித்து உஜ்ஜீவிக்கும்படி மீளவும், அவ்விடத்திலேயே அவரது திருமேனியினை ஆவிர்பவித்தாற்போன்று மூலவராக, அர்ச்சாவதாரமாக எழுந்தருளச்செய்து பிரதிஷ்டிப்பித்தனர்.

ஸ்வாவதார ஸ்தலே அர்ச்சாபூத் ஸ்ரீரங்கே ச யதீஸ்வர:
யந்முநே தம் குணாவாஸம் இராமனுஜ குரும் பஜே

தம் அவதார ஸ்தலமான ஸ்ரீபெரும்புதூரிலும், ஸ்ரீரங்கத்திலும் எவருடைய உகப்பிற்காக யதிராஜர் அர்ச்சாவதாரமாக எழுந்தருளினாரோ, குணங்களுக்கு இருப்பிடமான அந்த இராமானுஜாசார்யர் என்னும் கந்தாடையாண்டானிடம் பக்தி செய்கிறேன்.

ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள் தோறும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் * வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த இராமானுசன் தன்னை எய்தினவர்க்குத்
தானம் கொடுப்பது * தன் தகவு என்னும் சரண் கொடுத்தே!!

 

 

 

 

 

 

 

 Adiyen Dasan… Enna Solla.. We feel the event as if it is happening in front of our eyes today… Tears too refuse to come out of the eyes.. becoz..we need to see the event.. if we cry.. we will not be able to see the convoy of Udayavar Charama Tirumeni.. Renga…!!! “Oru Magal Thanai Udayen,Ulagam Niraintha PukazhAl* Tiru Magal POla ValarthEn SenganMALThAn KonduPOnan!.” Swami the above pasuram alone is coming to our mind..!! U ve picturised the event.. Namperumal has given us U.. else we wont even get these events to narrate to us.. Swami .. !! Pesum Arangan.. Indru.. Oru NAL.. Azha VaithuVittan!! Dasan

 -Raja Desikan rajadesikan@gmail.com

 

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: