Srirangapankajam

July 27, 2008

PESUM ARANGAN-82

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 9:01 pm

பட்டருக்குக் கைங்கர்யத்தினை வகுத்து ஆசீர்வதித்த உடையவர் அங்குள்ள அனைத்து ஸ்ரீவைஷ்ணவர்களையும் பார்த்து அருளுகின்றார். அவர்களை பகவத் பாகவத கைங்கர்யத்தில் ஈடுபாடு கொள்ளும்படி வேண்டுகின்றார்.

 

மூன்று பேர்களைக் குறிப்பிடுகின்றார்.  அவர்கள்

 

1. அநுகூலர்,

2. பிரதிகூலர்

3. அநுபயர்.

அநுகூலர்: ஸ்ரீவைஷ்ணவர்கள்
ப்ரதிகூலர்: பகவத் த்வேஷிகள்
அநுபயர்: ஸம்சாரிகள்.

அநுகூலரைக் கண்டால் குளிர்ந்த நிலாவைக் கண்டது போலவும், தென்றல் சுகத்தினைப்போலவும் மகிழ்வோடு அவர்கள் உகக்கும்படிச் செய்யவும்

பிரதிகூலரைக்கண்டால் ஸர்ப்பம், அக்நி ஆகியவினடத்தில் எவ்வளவு ஜாக்கிரதையாகயிருப்போமோ அவ்வளவு அவர்களிடத்தில் ஜாக்கிரதையாயிருந்து அவர்களிடத்து விலகியிருந்தும்

அநுபயரான சம்ஸாரிகள் நம்மை அனுசரித்து வருவார்களையாகின் ஆத்மஞானத்தினை உபதேசித்தும், அவ்வாறு அவர்கள் அனுசரிக்கவில்லையாகின் ‘ஐயோ!” என்று இரங்கி கிருபைப்பண்ணவும் சொல்கின்றார்.

பட்டருடன் எம்பெருமானார் கடைசியாக நம்பெருமாள் சந்நிதிக்குச் செல்கின்றார். தான் தீர்த்த பிரஸாதங்கள் பெற்று பட்டருக்கு சாதிக்கச்செய்து அங்குள்ளோரிடத்து பட்டரைக் காண்பித்து,   ‘இனி இவர்தான் தர்ஸன ப்ரவர்த்தகர் (வைணவ தர்ஸனத்திற்குப் பொறுப்பேற்பவர்)” என்றருளுகின்றார். அங்கேயே பட்டரிடத்து ”மேல்நாட்டிலே (மேல்கோட்டை திருநாராயணபுரத்தில்) ‘வேதாந்தி’ என்று ஒரு பெரியவித்வான் இருக்கிறான் என்று கேள்விப்பட்டேன். அவனைத் திருத்தி நம் வைணவ தர்ஸனத்திற்கு மாற்றியருளும்” என்று அருளுகின்றார். பின்பு அங்கு குழுமியிருந்த சீடர்களிடத்து உபதேசிக்கின்றார்.  

 

தமது மடத்திற்குத் திரும்பி ஒவ்வொரு வைணவனும் அவனிருக்கும் நாட்களுக்குள் செய்யவேண்டிய கைங்கர்யத்தினை அருளுகின்றார்.

1) ஸ்ரீபாஷ்யத்தை வாசித்தும், வாசிப்பித்தும் போருகை.

 அதற்கு யோக்யதையில்லையாயின்

 

2)அருளிச்செயலாகிய பிரபந்தங்களை ஓதியும் ஓதுவித்தும் போருகை

3) இதுவும் முடியவில்லையாயின், திவ்யதேசங்களில் பெருமாளுக்கு அமுதுபடி, சாத்துப்படி முதலானவற்றையுண்டாக்கி நடத்திக்கொண்டு போருகை

4)இதுவும் முடியாவிடின், திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாவது கட்டிக்கொண்டு வாழ்தல்

5)அதுவும் முடியாது எனின், தினமும் த்வயத்தினை அர்த்தமுணர்ந்து ஸ்மரணைச் செய்து கொண்டிருத்தல்

6) இதில் எதுவுமே முடியாது எனின், எம்பெருமானுடைய பரமபாகவதனிடத்து ஆஸ்ரயித்து அவனுடைய அபிமானத்தினைப் பெறுதல்.

ஒவ்வொரு வைணவனும் மேற்கூறிய ஆறு கார்யங்களுள் ஏதேனும் ஒன்றையாவது கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அருளுகின்றார்.

 

பெரியபெருமாளின் திவ்யமான திருவடிகளை தியானித்து தண்டன் சமர்ப்பிக்கின்றார். ஆளவந்தாரை மனதார தியானிக்கின்றார். பரவாஸூதேவரை மனதினுள் நமஸ்கரிக்கின்றார்.

 

பெரியபெருமாளை திருவாராதனம் பண்ணிப்போகும் ஸ்ரீரெங்கராஜபட்டர், ஸர்வவாத்ய கோஷத்துடனே, பெரியபெருமாள் சார்பில் சமர்ப்பித்த உடுத்துக்களைந்த பீதகவாடை, சூடிக்களைந்த திவ்யமால்யப்படி சாத்துபடிகள், பிரஸாதங்களை சிரஸின் மேல் தரிக்கின்றார். அவர்கள் பாஞ்சராத்ர ஸம்ஹிதைகளிலிருந்து ஜ்ஞான காண்டங்களை அநுஸந்திக்கக் கேட்டு இன்புறுகிறார்.

 

மற்றொருபுறம், திருமந்திரம், த்வயம், அருளிச்செயல்கள், வேதங்கள், இதிகாச புராணங்கள் ஆகியவற்றினை அங்குள்ளோர்கள் பாராயணம் செய்ய அவ்விடமே பூர்ணத்துவம் பெற்று அந்த அதிர்வலைகளால் தேவலோகம் ஆனது. அனைவருமே கட்டுண்டு கண்ணங்களில் கண்ணீர் வழிந்தோட ஒரு மஹாமனிதரை, மஹாத்மாவை, மாமேதையினை, மிக்காரும் ஓப்பாரும் இல்லா ஒரு மஹாபுண்ணியரை வழியனுப்பக் காத்திருந்தனர். இவர்களனைவரின் கண்ணீர் அலைகளும் ஏற்கனவே இவரது பிரிவினால் கண்ணீர் பெருக்கிக்கொண்டிருக்கும் பூமித்தாயின் சிரஸ்ஸின் மேல் தெளித்து மேலும் அவளை துயர்மிக்கவளாக்கிக் கொண்டிருந்தது.

 

ஆனால் எம்பெருமானாரோ பரவசமான, பிரகாசமான தேஜோமயமான திருமுகத்தோடு, தமது திருக்கண்களை மூடியபடி, ஆளவந்தாரையும், நம்பெருமாளையும், தமக்கு முன்னே சென்ற பெரியநம்பியையும் கூரத்தாழ்வானையும் நினைத்தப்படி, .  நடந்து நடந்து நொந்துபோன உடையவரின் திருவடிகள் ஒரு வழியாய் ஓய்ந்து வடுகநம்பியின் மடியில் ஓய்வெடுக்க,  திவ்யதேசமெங்கும் அலைந்து திரிந்து தலைவணங்கிய அந்த சிரஸானது எம்பாரின் மடியில் தான் பயணிக்கப் போகும் பாதை நோக்கி விண்ணை நோக்கி சாய்ந்திருக்க, சதா த்வயத்தினை உபதேசித்த திருவாய் மூடி மௌனித்திருக்க,   கண்ணுக்குள் அரங்கன் அபயஹஸ்தம் காட்டி கவாந்திழுக்க, திருக்கண்கள் மூடி, தன் கடைசி யாத்திரைக்குத் தயார் ஆகின்றார்.

 

‘ஆராமஞ்சூழ் ரங்கர்தமை மலர்மாமகளையடியிறைஞ்சித் 
தாரீர் சரணந்தனையென்னத் தந்தோமெனலு மெதிராசன்,
பாரோர் பரவும் பாகவதர் பிரிவால் பரிவில் படர்கூரச்,
சீரார் திருநாடடைந்திருந்த சீடனுடனே சேர்ந்தனனால்”

என்றபடியே

ஜீர்ணமிவ வஸ்த்ரம் ஸூகேநேமாம் ப்ரக்ருதிம்
ஸ்தூலஸூக்ஷமரூபாம் விஸ்ருஜ்ய”


ஸ்தூலசரீரமாகவும் சூக்கும ஸரீரமாகவுமிருக்கும் ப்ரகிருதியை – பழைய வஸ்திரத்தினைக் கழிக்குமாபோலே சிரமமில்லாமல் விட்டு

என்றபடியே

ஒருவித சிரமமும் படாமல் தமது திருமேனியிலிருந்து தம் உயிரினை மண்ணுலம் வருந்த, விண்ணுலகம் மகிழ, பிரிக்கின்றார்.   அவ்வளவிலே  ஆத்ம பெருஞ்ஜோதி கிளம்பிற்று!

                                              -Posted on 26th july’ 2008-

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: