Srirangapankajam

July 24, 2008

PESUM ARANGAN-80

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 10:58 pm

பகுத்தறிவு பெற்ற ஞானி, இந்த உலகே மனத்தில் ஏற்பட்ட மாயை என்றும், தோன்றி மறையும் தன்மை உடையது என்றும் உணர்ந்து உலகில் வாழ வேண்டும். இந்த உலகின் மீது செல்லும் எண்ணங்களை உள் நோக்கித் திருப்பி, ஆசைகளை நீக்கி, மௌனமாய் கர்மங்களிலிருந்து விடுபட வேண்டும். தன்னையறிய உதவிய இந்த உடலை, எப்படி நன்றாக கள் குடித்தவன் தன்னுடைய ஆடையைப் பற்றியும், ஆடை நழுவுவது பற்றியும் கவலைப்பட மாட்டானோ, அதுபோல் அறிவு பெற்ற ஞானியும் உலகில் இருத்தலையும், இறத்தலையும் பற்றி கவலைப்பட மாட்டான்.
                                                                                 – உத்தவ கீதை-

உடையவரின் ஏற்பாட்டினால் கூரத்தாழ்வானின் குமாரர்கள் இருவரும் எம்பாரை ஆஸ்ரயித்து சகல சாஸ்திரங்களையும் ஸ்ரீஇராமனுஜ தர்சன மார்க்கத்தையும் தெளிவே கற்றுக் கொண்டிருந்தனர்.

கூரத்தாழ்வார் திருநாட்டிற்கு எழுந்தருளி சுமார் 6 மாத காலத்தில் முதலியாண்டானும் தன்னுடைய 106வது வயதில் (கி.பி.1133) உடையவரின் திருவடிகளை நினைத்தப்படியே பரமபதித்தார். உடையவர் தன்னுடைய உயிருக்குயிரான தண்டையும் (முதலியாண்டனையும்) பவித்ரத்தையும் (ஸ்ரீகூரத்தாழ்வாரையும்) இழந்தவரானார். பரிதவித்தார். கூரத்தாழ்வார் போன்று பிரம்மமேத ஸம்ஸ்காரம் முதலியாண்டானுக்கும் நடந்தது.

இதன் பிறகு மூன்று ஆண்டுகள் உடையவர் அரங்கனிடத்து செய்த ஆத்மார்த்தமான கைங்கர்யங்களினாலும், பக்தர்களிடத்து காட்டிய பரிவினாலும் ஸ்ரீரங்கம் மிகவே ஏற்றம் பெற்று விளங்கியது.

அவரது 119வது வயதில் அவர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூரில் அவரது அர்ச்சாத் திருமேனியைப் பிரதிஷ்டிக்க முதலியாண்டன் குமாரர் கந்தாடையாண்டான் தலைமையில் எல்லாரும் சேர்ந்து உடையவரின் அனுமதியும் பெற்று விட்டனர். எம்பெருமானாரும் மிகவும் உகந்து, தன்னுடைய விக்ரஹத் திருமேனியை ஆரத்தழுவி தம் பூரணசக்தியையும் செலுத்தி அனுக்ரஹித்தார். இந்த அர்ச்சைத் திருமேனி ‘தானுகந்த திருமேனி’ என்ற புகழ்பெற்றது. கி.பி.1136 நள ஆண்டு தைமாதம் புஷ்ய நட்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் பிரதிஷ்டைச் செய்யப்பட்டது. (இந்த பிரதிஷ்டைச் செய்யப்பட்டவுடனேயே உடையவருக்கு திருமேனியில் தளர்ச்சி ஏற்பட்டது என்று சிலர் கூறுவர்).

கருவறையில் அரங்கனைத் தரிசிக்கின்றார். பெரியபிராட்டியாரை தியாநித்து தம்முடைய வைகுண்ட கத்யத்தினையும், சரணாகதி கத்யத்தினையும், பெரிய ஆற்றாமையுடன், அரங்கன் திருவுள்ளம் உகக்கும்படி ஸ்தோத்திரம் செய்கின்றார்.

பின்னர் ஸ்ரீரங்ககத்யத்தினாலும் ஸ்தோத்திரம் செய்கிறார்.

அரங்கனுக்கு இவரது அபிப்பராயம் புரிந்து விட்டது.
‘உமக்கு வேண்டுவதென்” என்று கேட்கின்றார்.

 உடையவர், ‘ஸம்ஸாரத்தில் அருசி பிறந்து வய:பரிணாம காலாதிக்ரமணம் பிறந்தது(இவ்வுலக வாழ்வில் பற்று நீங்கிற்று. (போகும்)காலம் நெருங்கிவிட்டது) என்கிறார்.

அரங்கன்,காலத்திற்கு நாமன்றோ கடவோம்? இன்னும் சிறிது காலம் உம்மைக் கொண்டு இவ்வுலகந் திருத்த பார்த்தோம், அறப்பதறினீரே(அதற்குள் அவசரப்படுகிறீர்களே?) – இனி உமக்குச் செய்யவேண்டுவது என்?” என்றருளுகின்றார்.

இதற்கு உடையவர், ”அடியேனைக் காலக்கழிவு (காலத்தாமதம்) செய்யாமல் உன் பொன்னடி சேர்க்க வேணும்’ என்று சரணாகதி செய்கின்றார்.

 அரங்கன், ”இற்றைக்கு ஏழாநாள் அப்படியே செய்கிறோம்” என்று உறுதியளிக்கின்றார்.

 உடையவருக்கு பெருத்த ஆனந்தம். ‘என்னுடைய ஸம்பந்தி, ஸம்பந்திகளெல்லாரும் நான் பெற்ற லோகம் பெறவேணும்” (என்னைச் சார்ந்தவர்கள், என்னைச் சார்ந்தவர்களைச் சார்ந்தவர்கள் அனைவருமே நான் பெற்ற பேறு பெற வேணும்)” என்று யாசிக்கின்றார்.

 

அரங்கன் ‘அப்படியே பெறக்கடவர்கள்” என்று திருவாய்மலர்ந்து உறுதியளிக்கின்றான்.

உடையவருக்குத் தீர்த்தம், திருமாலை, திருப்பரிவட்டம், பிரஸாதங்கள் எல்லாம் அருளி விடைக்  கொடுத்து

அருளுகின்றான் அரங்கன்.

 

உடையவரும் மிக்க ஏற்புடனே ‘மஹா பிரஸாதம்’ என்று உவகையோடு ஏற்கின்றார். ஒரு ஸார்வபௌமரான மஹாராஜா தனது ராஜ்யத்தினை பல மன்னர்களுக்கு பிரித்துக் கொடுத்து விடை கொடுத்தனுப்புகையில் அந்த ராஜ்யத்தினைப் பெற்ற ராஜாக்கள் எப்படி பேருவகையோடு திரும்புவார்களோ அவ்வளவு சந்தோஷத்துடன் அரங்கன் திருமுற்றத்திலிருந்து தம் மடம் நோக்கி எழுந்தருளுகின்றார் உடையவர்.

(இத்தொடரோடு ஸம்பந்தம் உடைய நாமும் உடையவரின் ஸம்பந்திகள்தானே! ஆகவே நமக்கும் இப்பெரும்பேறு உண்டு என்று ஆழ்ந்த நம்பிக்கைக் கொள்வோம்)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சுமார் 16 அல்லது 17 வருடங்களிருக்கும். ஸ்ரீரங்கத்தில் வேதவியாசபட்டருக்கு உதவியாக வாத்யார் ஸ்ரீனு என்பவர் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். அவர் பிரம்மச்சாரி. கோவில் விசேஷம் எதுவானாலும் சரி தவறாது கைங்கர்யத்திற்கு வந்து தம்முடைய பணியைக் குறைவறச் செய்து வந்தார். அவருக்கு ஒரு 55 அல்லது 56 வயதிருக்கும் என்று நினைக்கின்றேன். அன்று பங்குனி உத்திரம். அடியேன்தான் அன்று முறை. பெருமாள் தாயாரிடத்தில் கைங்கர்யத்திலிருந்தேன். பங்குனி உத்திரம் பெருவிழாவிற்கு மட்டும் வடதிருக்காவேரியில்(கொள்ளிடத்தில்) தீர்த்தவாரி நடக்கும். வாத்யார் ஸ்ரீனு பெருமாளையும் தாயாரையும் ஸேவித்தபடியிருந்தார். அப்போது என்னிடம் சொன்னார், ”பட்டரே! அந்த காலத்தில் பங்குனி உத்திரம் முடிந்து மறுநாள் காலை அனைவருக்கும் தீர்த்தம், சடாரி சாதித்து பெருமாள் நிதானமாகதான் கோரதம் ஏறுவார். மாலைதான் கோரதம் நிலை சேரும்! இன்று எவ்வளவோ மாறிவிட்டது!” என்றார். அச்சமயம் சின்னப்பெருமாள் தீர்த்தவாரிக்கு சென்று கொண்டிருந்தார். வாத்யார் ஸ்ரீனு பெருமாளையும் தாயாரையும் மீண்டும் ஒருமுறை நன்கு ஸேவித்து கொள்ளிடக்கரைக்கு விரைந்தார். அங்கு அர்ச்சகர் தீர்த்தவாரிக்குத் தேவையான பவித்ரம் தர்ப்பைப்புல் கொடுத்து சங்கல்பங்கள் அனைத்தையும் செய்து வைத்தார். சின்ன பெருமாளும் புறப்பட்டுக் கொண்டிருந்தார். திடிரென இவருக்கு கடுமையான மார்புவலி! வீட்டிற்குச் செல்லும் வழியிலேயே தம் இடுப்பு வஸ்திரத்தில் பெருமாள் தாயார் துளசி பிரஸாதத்துடன் அந்த திவ்யதம்பதிகளின் திருவடியடைந்தார்!. இவரது வீடு கீழச் சித்திரை வீதியிலிருந்தது. இவரைத் திருமங்கைமன்னன் படித்துறைக்கு ஸம்ஸ்காரத்திற்குக் கொண்டுபோக மறுநாள் காலை 10.30 மணி போல் ஆயிற்று. இவர் முதல் நாள் என்னோடு ஆற்றாமையோடு பேசிக்கொண்டிருந்ததைப் போலவே அந்த திருநாளில் பெருமாள் தாயார் இருவரும் பகல் 10.30 மணி வரை சேர்த்தியாய், சேர்த்தி மண்டபத்திலிருந்து ஸேவார்த்திகள் அனைவரும், வாத்யார் ஸ்ரீனுவினால், தீர்த்தம், சடாரி மரியாதை பெற்றனர். இவரது மறைவு மறக்கமுடியாத ஓன்று!.

                                                         -Posted on 22nd july 2008

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: