Srirangapankajam

July 21, 2008

PESUM ARANGAN-78

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 4:33 pm

குருவியானது, தான் கூடுகட்டிய மரம் வெட்டப்படும் போது, கூட்டின் மீது பற்று நீங்கி பறந்து போகும். அதுபோல் பக்தனும் இந்த உயிர் நீங்கும் போது உடல் நீக்கி பற்றில்லாமல் உயிர் நீக்க வேண்டும்.
-உத்தவகீதை-

ஸ்ரீரங்கத்தில் சிஷ்யசம்பத்துடனே உடையவர் வாழ்ந்தருளுகின்றார். உடையவருக்கு அப்போது ஏறத்தாழ 116 வயதுகள் பூர்ததியாயிற்று.

கூரத்தாழ்வார் நம்பெருமாளிடத்து ஒருநாள் ஸ்தோத்திரம் செய்து போற்றும் போது, அரங்கன் பேசுகின்றார். ‘உமக்கு வேண்டினதெல்லாம் தருகிறோம். வேண்டிக்கொள்ளும்’ என்று உகப்பின் மிகுதியால்.

பரம காருண்யரான ஆழ்வானுக்கு இப்போதும் ஏதும் வேண்டிப் பெற தெரியவில்லை!. ‘நாயன்தே! அடியேனுக்குப் பண்டே எல்லாந்தந்தருளிற்றே!’ (நீதான் எனக்கு வேண்டியவற்றையெல்லாம் ஏற்கனவே அருளிச்செய்தாயிற்றே!” என்கிறார். எவ்வளவு கொடுமைகள் அரங்கேறின. எவ்வளவு துன்பத்திற்கு ஆளானார். ஆயினும் இவற்றால் எந்த பாதிப்புமின்றி, எவ்வளவு பரிவாக நிறைவாக பேசுகின்றார்.
கட்வாங்கன் என்கிற அரசன் இந்திரியங்கள், மனது, உடல் மூன்றையும் வசப்படுத்தியவர். அவர் கூறுகின்றார், ”இந்திரியங்கள், மனம் புத்தியினின்று வேறுபட்டது. ‘அறியாமை நீங்கிய ‘ஞானம்’ பெற்றவனானேன். இனி உலக வாழ்வைப் பற்றி கவலைப்பட மாட்டேன். ஆகையால் ‘ஆன்மாவை’ வணங்கி, அதற்கு மூலமான பரம்பொருளான இறைவனின் பாதங்களை சரணடைவேன். அறியாமை என்ற கடலைக் கடப்பேன்’ என்று தன்னையுணர்ந்து)

அரங்கன் விடவில்லை!. ‘அப்படியன்று! இப்போதும் வேண்டிக்கொள்ளும்! நம்பெண்டுகளாணை! நம் இராமனுசன் மீது ஆணை! தருகிறோம்!” (அரங்கனே ஆணையிட்டு அருளியது இவர் ஒருவருக்குதான்!) என்றருளுகின்றார்.

கூரத்தாழ்வாருக்கு உடையவர் நன்றாகயிருக்கும் போதே, தாம் தம் இப்பூதவுடலை நீக்கி பரமபதம் செல்ல சித்தம் உண்டாயிற்று. ‘த்வதநுபவ விரோதியான இச்சரீரத்தை விடுவித்து த்வதநுபவத்தை தந்தருள வேணும்’ என்கிறார்.
(அரங்கன் அனுபவத்தினை பூரணமாக பெறவிடாமல் செய்யும் இச்சரீரம் மறைந்து பரமபதத்தினை வேண்டுகின்றார். ஒரு ஜீவன் முக்தியடைய ஞானமும் பக்தியும் வேண்டும்;. அதற்கு உலகவாழ்க்கை அவசியம்.
இந்த உலகவாழ்க்கை முக்திக்கே என்றுணர்ந்து மிகக் கவனமாக இந்த உயிர் உடலினின்று பிரியுமுன் இந்த உடல் முக்திக்கு வழிகாட்டும் என்பதையுணர்ந்து முக்திக்கு முயற்சிக்கவேண்டும். தம் ஆச்சார்யபக்தியினால் சத்சங்கத்தினால் இதனை சாத்தியமாக்குகின்றார் கூரத்தாழ்வார்!)

அரங்கன் ‘அத்தையொழியச் சொல்லும்’ (இதைத்தவிர வேறு ஏதேனும் கேளேன்!” ) என்கிறார்.

இப்போது கூரத்தாழ்வான் விடவில்லை, ”அடியேன் அபேக்ஷித்ததையே ப்ரஸாதிக்க வேணும்” என்கிறார்.

அரங்கன், ‘ஆகில் உமக்கும் உம்முடைய
ஸம்பந்தமுடையோர்க்கும் பரமபதந் தந்தோம்” என்று அருளி கடைசியாக திருப்பரிவட்டம், தீர்த்தம்,
பிரஸாதமும், பூந்தண்மாலையும், திருத்துழாயும் கொடுத்து சிறப்பித்து விடைக் கொடுக்கின்றார்.

நடந்ததையறிந்த உடையவர், ஆழ்வான் திருமாளிகை விரைகின்றார். ”ஆழ்வான்! நீர் இப்படி செய்தருளலாமோ!’ என்கிறார் சோகமாக!. ‘உம்மையங்கு எதிர் கொள்ளவே இங்ஙனம் ஆயிற்று!’ என்கிறார் ஆழ்வான்!. உடையவர் வருந்துகின்றார். ‘ஆழ்வான்! என்னுயிர் நிலையான உம்மை இழந்து எங்ஙனே தரிப்பேன்? என்னையும் உடன் கொண்டுபோக திருவுள்ளம் பெற்றிலீர்! நம்மை விட்டுப்போக உமக்கு ருசிப்பதே? பரமபதநாதனும் அங்குள்ள நித்யசூரிகளும் என்ன பாக்யம் பண்ணினார்களோ உம்மை அங்கு அடைய! இங்கு உறங்கும் பெரியபெருமாளும் நாங்களும் என்ன பாபம் பண்ணினோமோ?’ என்றெல்லாம் அரற்றுகின்றார். ஆழ்வானின் திருமுதுகினைப் பரிவாக தடவி, த்வயம் அநுஸந்திக்காது போனால் நா வறண்டு போகும் அவருக்கு மீண்டும் த்வயத்தினை அருளிச்செய்கிறார். அஞ்சலித்து விடை கொடுக்கின்றார். ஆழ்வான் தம் ஆச்சார்யனான உடையவரின் திருப்பாதங்களில் வேரறுந்த மரம் போன்று விழுகின்றார்!. உடையவர் அவரை அப்படியே வாரி எடுக்கின்றார்! கண்ணீர் கொப்புளிக்க தம்மோடு இறுக்கி அணைக்கின்றார் தாமும் அவரோடு சேர்ந்து பரமபதம் செல்லமாட்டோமா? என்ற தாபத்தோடு!. ஆழ்வான்,

‘யோநித்யமச்யுதபதாம்புஜயுக்மருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே !
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயையக ஸிந்தோ ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே !!
-ஸ்ரீவைகுண்டஸ்தவம்-

எவரொருவர் அச்யுதனுடைய திருவடித் தாமரையிணையாகிற பொன்னில் பேராசையாலே, மற்ற பொருள்களை புல்லென மதித்தாரோ, என்னுடைய ஆச்சர்யராய், ஜ்ஞானாதிகுணபூர்ணராய், கருணைக்கோர் கடலான அத்தகைய ராமானுஜருடைய திருவடிகளைச் சரணமடைகின்றேன்.

என்று கடைசியாக, உடையவர் திருவடிகளை நமஸ்கரித்து, அவர் திருவடிகளையெடுத்து தம் திருக்கண்களிலும், திருமார்பிலும் ஒற்றிக்கொள்கிறார். உடையவரின் திருப்பாதங்களுக்கு பாதபூஜை செய்து அவரின் ஸ்ரீபாததீர்த்தம் பெறுகின்றார். பரம ஆனந்தமுடன் க்ருதாஞ்சலிபுடராய் ‘இனி மடமேயெழுந்தருள வேணும்’ என்று பிரார்த்திக்கின்றார்.

அவருடனே அவரது ஜீயர் மடத்திற்கு சற்று முன்வரை பிரிவாற்றாமைத் தாங்காது பின்சென்று அவரை மீண்டும் தண்டன் சமர்ப்பித்து தம் திருமாளிகை திரும்பி தாம் திருநாட்டிற்கு எழுவதற்கென தற்காலிகமாக அமைக்கப்பட்ட பந்தலின் நடுவே நிற்கின்றார்.

தன்னுடனே இவ்வளவுகாலமும் நிழலாய் உறுதுணையாயிருந்த தம் மனைவி ஆண்டாளை அழைத்து அவள் வேண்டுவது என்ன? என்கிறார்.

ஆண்டாள், ”தேவரீர் திருவுள்ளத்தைப் பின் செல்லுகையொழிய அடியேனுக்கு வேறெரு நினைவுண்டோ? என்று கண்களில் நீர்பெருக திருவடிகளில் தண்டனிட்டு நமஸ்கரிக்கின்றாள்.

தம் இரு பிள்ளைகளான பராசர பட்டரையும், ஸ்ரீராமப்பிள்ளையையும் அழைக்கின்றார். ”பெருமாளும் நாச்சியாரும் எழுந்தருளியிருக்க உங்களுக்கு ஒரு தாழ்வும் ஏற்படாது. நம்பெருமாள் பெற்று வளர்த்தாரென்று அதுவே தஞ்சமென்றிராதே! இறுமாப்புக் கொள்ளாதீர்கள்! எம்பெருமானார் திருவடிகளே என்றும் தஞ்சமென்றிருங்கோள். உன் தாய் சொல்படி கேளுங்கள். பாகவதரிடத்திலே அபராதங்கள் ஏதும் படாது அவர்களை அநுவர்த்தித்துக் கொண்டு போருங்கள்’ என்று அறிவுறுத்துகின்றார். தம் திருவடிகளில் விழுந்து அழுது கதறியபடியிருக்கும் தம் குமாரர்களின் கண்ணீரைப் பாசத்தோடேத் துடைக்கின்றார். அவர்களின் முகத்தினை தம் கைகளால் நேசத்தோடுத் தாங்கி, ‘நீங்கள் ப்ராக்ருத ஸம்பந்தத்தை நினைத்து க்லேசித்தீராகளாகில் உடையவர் திருவடிகளின் ஸம்பந்தத்தை தூஷித்தவர்களாவுதிகோள்”
(நீங்கள் இந்த பிறவி ஸம்பந்தத்ததை நினைத்து வருத்தப்படுவீர்களாகின் உடையவரின் ஸம்பந்தத்தை நிந்தனை செய்தவர்களாவீர்கள். பெறற்கரிய உடையவரின் ஸம்பந்தம் இப்பிறவியினாலன்றோ நமக்குக் கிடைத்தது!) என்று தேற்றுகின்றார்.

பிள்ளைப்பிள்ளையாழ்வான் என்கிற பரம ஸ்ரீவைஷ்ணவரின் மடியில் தலையை வைத்து தம் மனைவி ஆண்டாளின் மடியிலே தம் திருவடிகளை வைத்துக் கொண்டு உடையவரின் திருவடிகளை த்யானித்தப்படியே, த்வயம் அனுஸந்தித்தவாறே, தம்முடைய 124வது வயதில் (கி.பி. 1133ம் ஆண்டு), தம் உயிர்கூடான உடல் நீக்கி பரமபதம் ஏகினார், ஒப்பிலா அப்பெருந்தகை!
– Posted on 20th July’2008

என்னுடைய அப்பாவழி தாத்தாவின் அப்பா பெயர் குப்பா பட்டர்.
மிகவும் பெருத்த சரீரம் உடையவராம். நான் சிறுவயதாயிருக்கும் போது என் வீட்டின் பக்கத்து வீட்டில் கோபுபட்டர் என்பவரின் அம்மா இவரைப் பற்றி எங்களிடத்து நிறையவே கூறுவார்கள். காலை கோவிலுக்குச் சென்றால், கூட்டமில்லாத அந்த காலத்திலேயே வீட்டிற்கு வரமாட்டார்களாம். அங்கேயே தங்கி குறைவற பூஜைகள் செய்து மாலைதான் வீட்டிற்குத் திரும்புவாராம். சுமார் 60 வயதாகயிருக்கும் போது ஒரு நாள் அருகிலுள்ளவர்கள் மற்றும் தன் வீட்டிலுள்ளவர்களை சீக்கிரமாக சாப்பிட்டு வரச்சொல்லி வற்புறுத்தி அவர்கள் எல்லாரும் நன்றாக சாப்பிட்டு விட்டு திண்ணை முற்றத்தில் குழுமியபோது. “ என்னை ரங்கன் கூப்பிடுகின்றான்! கிளம்ப வேண்டியதுதான்! அதான் உங்களைனைவரையும் சீக்கிரமே சாப்பிடச் சொன்னேன் என்று சொல்லி, வீட்டிற்கு வெளியே வந்து, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து, ”ரங்கா!” என்று கதறியவர்தானாம், வெறும் சடலத்தைத்தான் திருப்பிப் போட்டார்களாம்

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: