Srirangapankajam

July 20, 2008

PESUM ARANGAN-77

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 10:09 am

கூரத்தாழ்வானும் உடையவரும் ஸ்ரீரங்கஸ்ரீயை போற்றிய வண்ணம் வாழ்ந்து கொண்டிருக்கையில் ஒரு நாள் உடையவர் நாச்சியார் திருமொழியான ‘நாறுநறும் பொழில்’ என்ற பாசுரத்திற்கு வியாக்யானம் கூறிக்கொண்டிருக்கையில், ஆண்டாளின் பிரார்த்தனையை நாம் தலைக்கட்ட வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. உடனே மாலிருஞ்சோலைக்கு புறப்பட்டும் ஆயிற்று. கோதை பிரார்த்தித்தப்படியே நூறு தடா நிறைந்த வெண்ணையும், நூறு தடா நிறைந்த அக்காரவடிசிலும் பரிவுடனே மாலிருஞ்சோலை பெருமாளுக்கு அமுது செய்து அகமகிழ்ந்தார். பின்னர் அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று அங்கு ஆண்டாளின் பிரார்த்தனையை நிறைவேற்றிய நிறைவோடு நாச்சியாரைத் தரிசிக்கின்றார். ஆண்டாள் மிகவேயுகந்து ‘நம் கோயிலண்ணர்’ என்று அர்ச்சகமுகநே திருநாமமும் கோவில் மரியாதையும் செய்வித்து அருளுகின்றாள். அங்கிருந்து ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருளுகின்றார். ஆழ்வாரை தரிசித்தபின் ஸ்ரீரங்கம் திரும்புகின்றார்
.
உடையவர் திருவரங்கத்தில்

‘ஸம்ஸேவிதஸ்ஸம்யமிஸப்தசத்யா பீடைஸ் சதுஸ்ஸப்ததி பிஸ்ஸமேதை: !

அந்யைரநந்தைரபி விஷ்ணு பக்தைராஸ்தேதிரங்கம் யதி ஸார்வபௌம: !!
– பிரபன்னாம்ருதம்-

யதிராஜரான உடையவர் எழுநூறு யதிகளாலும் எழுபத்து நாலு ஸிம்ஹாஸநாதிபதிகளாலும் மற்றும் கணக்கற்ற விஷ்ணு பக்தர்களாலும் நன்கு ஸேவிக்கபட்டவராய் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கின்றார்.

என்கிறபடியே எழுநூறு ஸந்நியாசிகள், எழுபத்திநான்கு ஆச்சார்ய புருஷர்கள்களாலும், பன்னீராயிரம் ஏகாங்கிகளாலும், முந்நூறு கொற்றியம்மைமார்களாலும், பல ராஜாக்களாலும், சாற்றாத ஸ்ரீவைஷ்ணவர்களாலும் நிறையப் பெற்று

காவேரீ வர்த்ததாம் காலே காலே வர்ஷது வாஸவ:
ஸ்ரீரங்கநாதோ ஜயது ஸ்ரீரங்க ஸ்ரீஸ்ச வர்த்ததாம்
-ஸ்ரீராமாயண பாராயணக்ரமம்-

திருக்காவேரியானது (பயிர்களுக்கு) வேண்டிய காலங்களில் பெருகட்டும். வேண்டிய காலங்களில் இந்திரன் மழை பொழியட்டும். ஸ்ரீரங்கநாதன் வெற்றிபெற்று வாழட்டும். திருவரங்கச் செல்வம் வளரட்டும்!

(எவ்வளவு அருமையான பிரார்த்தனைப் பாருங்கள். இதனை நாமும் தினமும் மனப்பூர்வமாகச் சொல்லி பிரார்த்திப்போமே!)

என்றபடியே நம்பெருமாளை மங்களாசாஸனம் பண்ணிக்கொண்டு ஸேவித்து சுகித்திருந்தனர்.

————–

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் இஸ்கான் மும்பைப் பிரிவைச் சார்ந்த ஸ்ரீராதாநாத் மஹராஜ் தலைமையில் சுமார் 40 பஸ்களில் இரண்டாயிரம் சீடர்கள் திரண்டிருந்தனர். காலக்ஷேபம், கீர்த்தனம், நடனம் என்று ஸ்ரீரங்கம் கோவில் முழுவதும் நிரம்பி ஹரிநாம ஸ்மரணம் கோவில் முழுதும் பரவி பூலோக வைகுண்டம் நிதர்ஸனமாக உணரப் பெற்றோம்.

இவர்களைனைவரையும் பொதுவழியில் வரிசையில் வரச்செய்து மூலஸ்தானத்தில் அடியேன் இருந்து ஸேவை செய்து வைத்தேன். சுமார் மூன்றரை மணி நேரம் ஆயிற்று. அவர்கள் இங்கிருந்து இராமேஸ்வரம் சென்ற பின்பும் அவர்கள் ஏற்படுத்திய அந்த ஆன்மீக அதிர்வலைகளை பிரதயட்சமாக நாங்கள் உணரமுடிந்தது.

சுமார் 2000 பேர்களிருந்த போதே இந்த கோலாகலமென்றால் இராமனுஜர் காலத்தில் அவருடனிருந்த 14000 பேர்களும் தினசரி பெருமாளை ஸேவித்து கோவில் முழுதும் ஸ்ரீவைஷ்ணவர்களும், யதிகளும் நிறைந்திருக்கும் காட்சியை அகக்கண்ணால் நினைத்துப் பார்க்கும் போது அடடா! எப்படியிருந்திருக்கும்!

-Posted on 19th July’2008-

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: